Published : 27 Jul 2020 07:33 PM
Last Updated : 27 Jul 2020 07:33 PM

இன்று தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள்: கவிதையால் சமூக மாற்றத்தை விதைத்த கவிமணி!

தன் நுட்பமான கவித்திறத்தால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பிறந்த நாள் இன்று. ராஜாஜி ஆளுநராக இருந்தபோது கவிமணியை வீடு தேடிவந்து சந்தித்துச் சென்றதை இப்போதும்கூட நீங்கா நினைவுகளாக அசைபோடுகின்றனர் கவிமணியின் வாரிசுகள்.

சமூகக் கட்டமைப்பில் முற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும் மகாகவி பாரதியைப் போலவே சமூக நீதியை முன்னிறுத்தி எழுதியவர் கவிமணி.

’ஓடும் உதிரத்தில் வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் சாதி
தெரிவதுண்டோ ...’

என்னும் கவிமணியின் கவிதை வரிகள் சாதியைக் கடந்த சமத்துவப் பாதையைப் பேசும். இப்படியெல்லாம் கவிமணி எழுதிக்கொண்டிருந்த காலத்தில் குமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது.

சாதியப் பாகுபாடுகள் கடுமையாக இருந்த அந்தச் சூழலில் பேனா முனையில் விழிப்புணர்வுச் சுடர் ஏற்றினார் கவிமணி. பெண் குழந்தைகளை வெறுத்திருந்த அன்றைய தலைமுறைக்கு மத்தியில் இருந்துகொண்டு,
‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...’
என எழுதினார் கவிமணி.

மலரும் மாலையும், ஆசியஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் ஆகியவை கவிமணியின் கவிதைத் திறத்துக்கு முன்னுதாரணம். சிறந்த மொழிபெயர்ப்பாளரான கவிமணி எழுதிய ’தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களை இப்போதும் பல இன்னிசை வித்தகர்கள் மேடையில் பாடி வருகின்றனர்.

*
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தை அடுத்த தேரூர் கிராமத்தில் சிவதாணுபிள்ளை - ஆதிலெட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தேசிக விநாயகம் பிள்ளை. 78 ஆண்டுகள் வாழ்ந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இலக்கியத் துறைக்கு கவித்துவ வரிகளினால் ஆற்றிய சேவை அளப்பரியது.

அவரது பிறந்த நாளான இன்று கவிமணி குறிந்த நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அவரது பேரனும், ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியருமான குற்றாலம்.

“தாத்தா நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியரா இருந்தாங்க. இப்போது அந்தப் பள்ளியின் பெயரே ‘கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி’தான்க. தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் ஆசிரியரா இருந்தாங்க. திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியிலும் பேராசிரியரா இருந்தாங்க. ஓய்வு பெறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னமே விருப்ப ஓய்வு வாங்கிவிட்டு நாகர்கோவிலை அடுத்த புத்தேரியில் குடியேறிட்டாங்க.

எங்க தாத்தாவுக்கு குழந்தைங்கன்னா அவ்வளவு இஷ்டம். தினமும் மதியம் சாப்பிடும்போது சுற்றிக் குழந்தைகளை வைச்சுக்குவாங்க. எங்க எல்லாருக்கும் ஊட்டி விட்டு எங்க குறும்புத் தனத்தை ரசிப்பாங்க. தோட்டத்துக்கு கூட்டிட்டு போய் மாடு, கன்றுகளைக் காட்டுவாங்க. அப்போதான், ‘தோட்டத்தில் ஓடுது வெள்ளைப் பசு... அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ பாடலை தாத்தா எழுதுனாங்க. மாலையில் தினமும் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் எங்க வீட்டுக்கு வருவாங்க. வீட்டில் எப்பவும் விருந்து உபசரிப்பு நடக்கும்.

ராஜாஜி மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது ஒருமுறை திருவனந்தபுரம் வந்திருந்தார். அங்கிருந்து கன்னியாகுமரி செல்வதா பயணத்திட்டம். அப்போது கவிமணியை பார்க்க விரும்புவதாக கேரள தலைமைச் செயலகத்திற்குத் தகவல் கொடுத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து, நீங்கள் கன்னியாகுமரி போனதும் கவிமணியை உங்களைச் சந்திக்க வைக்கின்றோம் என சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, ‘அவர் ஒரு புலவர். அதிலும் மிகச்சிறந்த கவிஞர். தமிழை நாம்தான் தேடிப் போக வேண்டும். தமிழ் நம்மைத் தேடி வரக்கூடாது’ எனச் சொன்ன ராஜாஜி புத்தேரியில் வீட்டுக்கே வந்து தாத்தாவைப் பார்த்தார்.

தொடக்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால், தாத்தாவை அநேகத் தமிழ் மக்களுக்குத் தெரியலை. ஆட்சியாளர்களுக்கும்தான். அப்போது டி.கே.சிதான் அவர் நடத்தி வந்த ’வட்டத் தொட்டி’ அமைப்பின் மூலம் கவிமணியின் கவிதைகளைக் கொண்டு சேர்த்தார். காரைக்குடிக்கும் அழைத்துச் சென்று பேசவச்சார். அங்கு செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாரின் அன்பைத் தாத்தா பெற்றார்.

நகைச்சுவை நடிகர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது மனைவி மதுரமும் நாகர்கோவில் வரும்போதெல்லாம் தாத்தாவைப் பார்க்க வந்துடுவாங்க. கல்கி, ம.பொ.சி, சுத்தானந்த பாரதி, கவிஞர் ராமலிங்கம்னு ஏராளமானவங்க எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. நாகர்கோவிலில் எழுத்தாளர்கள் மாநாடு நடந்தது. அதில் பேரறிஞர் அண்ணாவும் கலந்துகிட்டார். அப்போ அவரும், தாத்தாவும் சேர்ந்து எடுத்துக்கிட்ட புகைப்படம் இப்பவும் எங்க வீட்டு நடுக்கூடத்தில் உள்ளது.

1949-ல நாகர்கோவில் வந்திருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தாத்தாவை வீட்டுக்கு வந்து பார்த்தார். தாத்தா இறக்கும் போது எனக்கு 11 வயசு. அவரை ஏன் இத்தனை பேர் பார்க்க வர்றாங்கன்னு அப்போ தெரியாது. பிற்காலத்துல, தெரிஞ்ச வயசில் கொண்டாட என் தாத்தா இல்லாத வருத்தம் இப்பவும் உண்டு” என்று நெகிழ்ந்து போய்ச் சொன்னார் குற்றாலம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x