Published : 25 Jul 2020 12:47 PM
Last Updated : 25 Jul 2020 12:47 PM

இசையில் மட்டுமல்ல நகைச்சுவையிலும் முன்னோடி செம்மங்குடி!

செம்மங்குடி சீனிவாசய்யர்: ஜூலை 25, 112-வது பிறந்த நாள்

கர்னாடக இசையின் ஒரு முன்னோடியாக செம்மங்குடி சீனிவாசய்யரை பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், அவரிடம் அபரிமிதமாக வெளிப்படும் நகைச்சுவை உணர்வைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். பல சந்தர்ப்பங்களில் ரசிகர்கள் முன்னிலும் நண்பர்கள் முன்னிலும் அவர் பகிர்ந்திருக்கும் அனுபவங்களை இங்கே தருகிறோம்:

தப்பித்த சினிமா உலகம்

“எப்படியாவது என்னை நடிக்கவைத்து `நந்தனார்’ சரித்திரத்தை டாக்கியா எடுக்கப் பிரயத்தனம் பண்ணினார் ஏ.வி.எம்.செட்டியார். முசிரி சுப்ரமண்ய ஐயரை நந்தனாராகவும் என்னை வேதியராகவும் நடிக்கவைக்க பெரும் முயற்சி செய்தார் ஏ.வி.மெய்யப்பன். இந்தப் படத்துக்காக கோபாலகிருஷ்ண பாரதியாரின் பெஹாக் ராகப் பாடலான `ஆடும் சிதம்பரமோ’ பாடலை ரிகார்டிலேயும் பதிவு பண்ணி வைத்துக் கொண்டார்.

“அப்பாவின் சம்மதம் கிடைத்தால்தான் என்னால் எதுவும் சொல்லமுடியும்” என்றேன். எங்கள் ஊருக்கே ஏ.வி.எம். வந்துவிட்டார். அவரை உபசரித்த என் தந்தை, இங்கே கிராமத்துல ஆச்சாரமாக இருக்கிறோம். அதுக்கு விரோதமா சினிமா, டிராமா இதெல்லாம் வேண்டாமே என்றார். அப்பாவின் பேச்சுக்கு மரியாதை கொடுத்த ஏ.வி.எம். அதன்பின் அந்த விஷயத்தை டிராப் செய்துவிட்டார். நல்ல வேளையாக சினிமா உலகம் தப்பிச்சது என்று நினைத்துக் கொண்டேன்” என்று தன்னால் திரைப்படத்தில் நடிக்காமல் போனதை அவ்வளவு நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டார் செம்மங்குடி.

ஹலோ மைக் டெஸ்ட்டிங்

ஆரம்பக் காலத்துல நான் மைக் இல்லாத கச்சேரிகள்தான் செய்துகொண்டிருந்தேன். அதில் கிடைச்ச ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் வேறு எதிலேயும் எனக்குக் கிடைக்கலே.

முதல் மைக் கச்சேரியே சுவாரஸ்யமான அனுபவம்தான். ஸ்ரீரங்கத்து மாத்து உலக்கை மாதிரி பெரிசா ஒண்ணைக் கொண்டுவந்தார்கள். அதன் தலைமேலே குளவாத்திரம் மாதிரி ஒரு உருளையைக் கவிழ்த்துட்டுப்போனார் ஒருவர். அதன்பின் கறுப்பு கலர்ல யக்ஞோபவீதம் மாதிரி எலெக்ட்ரிக் ஒயரைக் கோர்தார். பின்னர் கூம்பு ஸ்பீக்கரை பந்தக்கால் முகூர்த்தத்துலே மாவிலையை கொம்பு நுனியில் சொருகறா மாதிரி வைத்து ஸ்விட்சைத் தட்டிவிட்டார். நான் கீழ் ஸ்தாயியில் `ஸ…’ன்னு சன்னமாத்தான் ஆரம்பிச்சேன். சிறிது நேரத்துக்குள் என் குரலே ஸ்பீக்கர்லே கேட்டுது. நடுநடுங்கிப் போய்விட்டேன். எப்படியோ குலதெய்வத்தோடு கிராம தேவதையோட அனுக்கிரகத்துல கச்சேரி முடிச்சு, வீடு போய்ச் சேர்ந்தேன். என்னால மறக்கமுடியாத நிகழ்ச்சி இது” என்று செம்மங்குடி முதல் முதலாக அவர் ஒலிப்பெருக்கியில் பாடிய அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

செம்மங்குடி தொலைக்காட்சியில் ஒரு கர்னாடக இசைப் பாடகியின் கச்சேரி கேட்ட அனுபவம் இது:

“பிரபல இசை மேதையான இன்னாருடைய சீடை என்று அடிக்கடி தொலைக்காட்சியில் பெயரைப் போட்டு நிகழ்ச்சியை ரசிக்கமுடியாமல் செய்துவிட்டார்கள். கோகுலாஷ்டமி பண்டிகை நெருங்கிவரும் காலத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதாலோ என்னவோ.. அந்த நிகழ்ச்சியில் சீடை என்ற பெயரே அடிக்கடி வந்தது”.

பேர்சொல்லும் ‘குடி’மகன்கள்!

“குடிமகன்களைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அரியக்குடி, அகரமாங்குடி, இஞ்சிக்குடி, காரைக்குடி, குன்னக்குடி, மன்னார்குடி, செம்மங்குடி, லால்குடி, போழக்குடி, வேளுக்குடி, மருத்துவக்குடின்னு ஏகப்பட்ட `குடி’கள்.

ராமானுஜம் அய்யங்கார், சிதம்பர பாகவதர், பிச்சைக்கண்ணு, சாம்பசிவ அய்யர், முத்து அய்யர், மணி, வெங்கடராமய்யர், ராஜகோபால சாஸ்திரிகள், செம்மங்குடி சீனிவாசய்யராகிய நான்.. எங்கள் பேரைச் சொல்லத் தேவையே இல்லை.ஊரின் பெயரைச் சொன்னாலே போதும். பெயர் தன்னால புரிஞ்சு போயிடும். இப்படி இத்தனை குடிமகன்களும் ஒன்றிணைந்து சேர்ந்து இருப்பது நம்முடைய கர்னாடக சங்கீத உலகத்துலேதான்” என்பார்.

மடிப்பாக்கம் மகாத்மியம்

ஒருமுறை செம்மங்குடி மாமாவுடன் சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் ஒரு சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தை பற்றி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் நினைவுகூர்ந்த விஷயம் இது:

செம்மங்குடி மிகவும் சிரமப்பட்டு மடிப்பாக்கத்தில் கச்சேரி நடக்கும் விலாசத்தை விசாரித்துக் கொண்டுதான் அங்கு போயிருப்பார் என்று நினைக்கிறேன். தனது சிரமத்தை, `அட, என்னப்பா…இப்படியா?’ என்று அலுத்துக் கொண்டபடிச் சொல்லாமல், சுவையோடு இப்படிப் பேசினார்:

“உங்களுக்கெல்லாம் மடிப்பாக்கத்து மகாத்மியம் பத்தி நல்லாத் தெரியாதுன்னு நெனைக்கிறேன். அடடா…எப்பேர்ப்பட்ட ஊர் இது. சீதையை, ராமன் கண்ணுல படாம ஒளிச்சு வெக்க திண்டாடினானே ராவணேஸ்வரன்.. அவனுக்குப் பாவம் மடிப்பாக்கத்தைப் பத்தித் தெரியாமப் போயிடுத்து. அதனாலதான் அசோக வனத்திலே ஒளிச்சுவச்சான். அனுமான் வந்தான். கண்டுபிடிச்சுட்டான். ராவணன் மட்டும் சீதையை இந்த மடிப்பாக்கத்திலே ஒளிச்சு வைச்சிருந்தான்னா, அனுமான் இன்னிக்கு வரைக்கும் சீதையைத் தேடிட்டு இருந்திருப்பான்..” என்றார்.

இப்படித் தன்னுடைய சிரமத்தையும் எளிதாக எடுத்துக் கொண்டு, அதையும் நகைச்சுவையாக ரசிகர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளும் உயர்ந்த பண்பு, செம்மங்குடி சீனிவாசய்யரின் வாழ்க்கை முழுவதும் பல சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.

கட்டுரையாளர்: சங்கர் வெங்கட்ராமன்,

தொடர்புக்கு: srikamakshi.sankara@gmail.com.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x