Published : 24 Jul 2020 10:56 AM
Last Updated : 24 Jul 2020 10:56 AM

கொங்கு தேன் 10: பெரிய மனுஷி

சிவகுமார்

எங்க சனங்களுக்கு நல்ல நாள் பொல்லாத நாளெல்லாம் கிடையாது. பொழுது கிளம்பி பொழுது சாயறது தினம் நடக்கறதுதானே? கார்த்தால காட்டுக்கு வந்து குனிஞ்சா, பொழுது உழுகத்தான் நிமிருவாங்க. வேலையை முடிச்சிட்டு ஊட்டுக்குப் போவாங்க.

சுடுசோறு ஆக்கினாலும் சரி, பழசு பரட்டை இருந்தாலும் சரி, கழுவிக்குடிச்சிட்டு அப்படியே மல்லாக்க சாஞ்சா, வாயில ஈ போறது கூட தெரியாது. அப்படி ‘பேமாஞ்ச’ கெடையா தூங்குவாங்க. ஆச்சு, முத சாமம், நடுசாமம், மூணாம் சாமம் (காலை 3-4 மணி) தாண்டறப்போ கோழி கூவற (சேவல்) சத்தந்தான் அவங்களை எழுப்பும். கிழக்கு லேசா வெளுக்க ஆரம்பிச்சதும், நூத்துக்கணக்கான சிட்டுக்குருவிங்க எலந்த மரத்தில உட்கார்ந்திட்டு ‘கீச் மூச் கீச் மூச்சு’ன்னு ஓயாம கத்தி எழுப்பி உட்டுடும்.

பொடக்காளில (புறக்கடை) மக்கிரியை (பெரிய கூடை) குப்புறப்போட்ட மாதிரி (முட்டை வடிவத்தில்) காத்து மண்ணு, கல்லு ரெண்டையும் சேத்து கோழிக்கூடு கட்டியிருப்போம். சுமார் 5 அடி உயரம் அந்தக் கோழிக்கூடு இருக்கும். சேவல் 2, கோழிக 4, பெரிசான குஞ்சுங்க 5, 6 அதுக்குள்ள அடைச்சு வச்சு கார்த்தாலதான் தெறந்து விடுவோம்.

பொழுது உழுந்தா கோழிகளுக்கு கண்ணு தெரியாது. லேசா இருட்டுக்கட்ட ஆரம்பிச்சதும், ஒவ்வொரு கோழியா, நிரண்டீட்டே கோழிக்கூட்டுகிட்ட போயி, உள்ளே பூந்துடும். பெரிய குஞ்சுகளும் கூடவே போயிடும்.

ஆனா, இந்த சேவல் மட்டும் லொள்ளு பண்ணும். வேணும்னே தட்டுப்போர் மேல் போயி சித்த நேரம் நிக்கும். வீட்டுத் தாவரத்தில ஏறி போக்குக் காட்டும். பொறுமை போயி, குச்சிய வச்சு விரட்டினா, கீழ குதிச்சு -ராஜ கம்பீரமா கூட்டுக்குள்ளே போகும்.

கோழிக்கூட்டு வாசலை மூடறதுக்கு 2க்கு 2 அடி பலகையாட்டமா ஒரு பட்டைக்கல்லு இருக்கும். கூட்டோட வாசலை அதை வச்சு ஓட்டையில்லாம மூடிடுவோம்.

கோழிக்கூட்டு வாசலுக்கு எதிர்ல 2 அடி தூரத்தில குத்துக்கல்லு மாதிரி ஒண்ணு நட்டு வச்சிருப்போம். பட்டைக்கல்லை வச்சு வாசல மூடினதும், இந்த குத்துக்கல்லுக்கும், பட்டைக்கல்லுக்கும் நடுவால புட்பால் சைஸுக்கு ஒரு கருங்கல்லை போட்டு இறுக்குவோம்.

ராத்திரில பாம்பு உள்ளே போயி மூச்சு உட்டா எல்லா கோழியும் அப்படியே செத்து மல்லாக்க சாஞ்சுரும். பாம்புகள்தான் கோழிகளுக்கு எதிரி.

கோழிக்கூட்டை காலையில திறந்து விட்டதும், முதல்ல சேவல்தான் பரபரன்னு குதிச்சு ஓடியாரும். பின்னாடியே 2 வெடக் கோழிங்க வரும். வந்த வேகத்துக்கு ஒரு கோழி மேல சேவல் ஏறி, கோழி தலைய வாயால இறுகப்புடிச்சுட்டு சோலிய முடிச்சிடும்.

அப்புறம் அடுத்த கோழிய லெவல் பண்ணும். அது பிகு பண்ணீட்டு இந்தப் பக்கம் அந்தப்பக்கமா ஓடி போக்கு காட்டும். அது படிஞ்சு வர்ற வரைக்கும் ஒரு பக்கம் இறகை விரிச்சு படபடன்னு அடிச்சு சேவல் கெஞ்சும்.

கோழிகள்

முட்டை வைக்கறதுக்குத்தான் சேவலோட கோழிங்க சினேகிதமா இருக்கும். பத்து, இருபது முட்டை வச்சானா, ‘கிர்ர்ன்னு’ இறகுகளை விரிச்சுட்டு அலையும். ‘அடை’ வைக்க வேண்டிய காலம். அதுக்கு கிறுக்குப் புடிச்சிருச்சுன்னு சொல்லுவாங்க.

பழைய பானையை நடுவால ரெண்டா உடைச்சு, வாப்பாட்டை தரையில வச்சு -வடசட்டியாட்டமா இருக்கற சட்டியோட அடிபாகத்தை, அது மேல வச்சு நிறைய மணலை அந்த சட்டியில கொட்டி பரப்பி விட்டு இந்த 20 முட்டைகளையும் ஒண்ணுக்கொண்ணு முட்டாம இடைவெளி விட்டு அந்த மணல்ல குத்தி வச்சு, கோழிய கொண்டாந்து, அந்த முட்டைகள் மேல உட்கார வச்சிருவாங்க.

பத்து, இருபது நாள் கோழி வேற சிந்தனையே இல்லாம ரெண்டு இறகையும் விரிச்சு அந்த முட்டைகள் மேல் உட்கார்ந்திருக்கும்.

பசி எடுத்தா மட்டும் கொஞ்சம் தானியம், தவசத்தை தரையில இறைச்சா வந்து கொத்தி தின்னுட்டு மறுபடியும் போய் முட்டைகள் மேல் உட்கார்ந்து அடைகாக்கும்.

நடமாட்டம் அதிகம் இல்லாததில, கோழி ‘வெளிக்கு’ இருந்தா அந்த ‘அடப்பீ’ வாசம் தாங்க முடியாது.

ஆச்சு 20, 22 நாள் ஆனா முட்டை ஓடு லேசா தூறு உடும். உள்ளேருந்து குஞ்சுக எட்டிப் பார்க்கும்.

அடடா! உலகமே துளியூண்டுதானான்னு முட்டைக்குள்ளே நினைச்சிட்டிருந்த குஞ்சு ஓட்டை ஒடைச்சு வெளிய தலை நீட்டி முத முதல்ல கண்ணைத் திறந்து பாத்ததுமே, ‘அடேய்...! உலகம் இவ்வளவு பெரிசான்னு ஆச்சர்யமா பாக்கும்.

அன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள ‘பட்டு.. பட்டு .. பட்டு...’ன்னு ஓட்டை ஒடைச்சிட்டு கருப்புக்கலர்ல குஞ்சு, காவிக்கலர்ல குஞ்சு, வெள்ளைக்கலர்ல குஞ்சு, சாம்பல் கலர் குஞ்சுக ‘மொசு மொசு’ ன்னு எல்லாம் குதிச்சு ஓடியாரும்.

தாய்க்கோழி இதுகளை கூட்டீட்டு, பொடக்காளில குப்பை மேட்டுக்குப் போயி, கால்ல பெராண்டி குப்பையை கிளறி விட்டு, ‘கொக் கொக் கொக்...!’ன்னு குஞ்சுகளுக்கு மேயக்கத்துக் குடுக்கும்.

ரெண்டு மூணு நாளாயிட்டா குஞ்சுகளே தெனை, வரகு, ராகி-ன்னு தானியங்களை கொத்தி திங்கும். குஞ்சுகளுக்கு எமனே பிராந்து (கழுகு) தான். ஆகாயத்தில எங்கிகேயோ பறந்திட்டிருக்கிற கழுகுக் கண்ணுக்கு கோழியும் குஞ்சுகளும் மேஞ்சிட்டிருக்கிறது பளிச்சின்னு தெரியும். அவ்வளவுதான் துப்பாக்கிலருந்து வெளிய வர்ற தோட்டா மாதிரி கீழே வரும் கழுகு.

கண்ணை மூடி முழிக்கறதுக்குள்ளே, தனியா மேஞ்ச குஞ்சு ஒண்ணை கால்ல மெட்டிட்டு சிட்டா பறந்திடும்.

ஆயிரம் இருந்தாலும் தன் குஞ்சாச்சே. இந்த தாய்க் கோழி கொலைவெறியோட 10 அடி பறந்து கழுகை அடிக்கப்போகும். கழுகு ஒயரத்துக்கு கோழியால் பறக்க முடியாதே. ஒரு குஞ்சு போயிருச்சேன்னு , ‘கொகோக்... கொகோக்.. கொகோ’ன்னு கத்திக் கத்தி அது அழுகற காட்சி பரிதாபமா இருக்கும்.

கோழிக்கூட்டை திறந்து உட்டுட்டு, ஆட்டுக்குட்டிகளை கொடாப்புலருந்து தொறந்துட்டா குதியாட்டம் போட்டுட்டு ஓடிப்போய் வெள்ளாட்டு மடில முட்டி முட்டி பால் குடிக்கும்.

வெள்ளாடுன்னு சொல்ற ஆடுகள் 90 சதவீதம் கருப்புக் கலர்லதான் இருக்கும். தலை கருப்பு, ஒடம்பு வெள்ளையா சில ஆடுகள்தான் இருக்கும்.

மாட்டுக்கன்னு அவுத்து விட்டு பால் ஊட்டினதுக்கப்புறம் பால் கறக்கற வேலையெல்லாம் ஆம்பிளைங்க, அம்மாமாருங்கதான் பண்ணுவாங்க.

அறியா வயசுப் புள்ளைங்க (10 வயசு பெண்கள்) விடியக்காலையில, மாட்டுத் தொழுவம் பெருக்கி, அங்க இருக்கிற சாணிய கொரக்கூடையில எடுத்தாந்து,. பக்கெட்ல கரைச்சு வச்சுட்டு, வாசப்பெருக்கி, சாணி தெளிச்சு, அது காய்ஞ்சதுக்கப்புறம், வெங்கச்சாங்கல்லில பண்ணின பொடில கோலம் போடுவாங்க.

பலானு விடியவே (பளார் என்று விடிய) அய்யனும் ஆத்தாளும் தோட்டத்துக்குப் போயிருவாங்க. அய்யன் கவலை பூட்டி தண்ணி பாய்ச்சுவாரு. அம்மா சோளக்காட்டுக்கு தண்ணி கட்டுவா.

கவலை (இடது) - காளைகள் ஏர் உழுதல் (வலது)

இந்த சின்னப்புள்ளே, முந்தைய நாள் சமையல் செஞ்ச சட்டில ஊத்தின தண்ணில ஊறிகிட்டிருக்கற சோளச்சோறு, தீவச்சோறு (அடிப்பக்கம் தீய்ந்து போனது) ஒரு கட்டி எடுத்து, போசில போட்டு கெட்டித் தயிறு ரெண்டு கரண்டி ஊத்தி பிசைஞ்சு- சின்ன வெங்காயம் உறிச்சது அஞ்சாறு, நெய்யில வறுத்த காய்ஞ்ச மொளகாய் 4 எடுத்துட்டு தோட்டத்துக்குப் போகும். அதுக்குப் பேரு பழைய சோத்து நேரம் (காலை 8-9 மணி).

இந்த புள்ளைங்க தலை பரட்டையாவே இருக்கும். எண்ணெயே பாத்திருக்காது. ஊளை மூக்கொழுக்கீட்டு திரியும். மூஞ்சியக் கழுவி, பவுடர் அடிச்சு பொட்டு வக்கிற காலம் அப்போ வரலே. 2 பாவாடை, 2 ரவிக்கை துணி, அதோட அதுகளோட வாழ்க்கை நகரும்.

அந்த சின்னஞ்சிறுசுகளுக்கு விடிவுகாலம்ங்கறது பெரிய மனுஷியாகற நாள்தான். பொண்ணு சமைஞ்சிட்டா அப்படின்னு சொல்லுவாங்க. ஆளாயிட்டான்னு நாகரிகமா சொல்லுவாங்க. வயசுக்கு வந்துட்டான்னு பொதுவா சொல்லுவாங்க.

உடனே குடிமகன்ங்கிற நாவிதன் சுபச்சேதிய உள்ளூர்லயும் வெளியூர் சொந்தங்களுக்கும் நேர்ல போய் வாய்மொழியா, ‘மேக்கால ஊட்டு ஆவடையாத்தா மக சுப்புலட்சுமி பெரிய மனுஷி ஆயிருச்சுங்கோ. வர்ற ஆனி 15ம் தேதி தெரட்டி சீர் செய்யறாங்கோ. குழந்தை குட்டியோட அவசியம் எல்லோரும் வந்திரணும் சாமியோவ்!’அப்படின்னு சொல்லிட்டு வந்திருவான்.

தானியம் தூற்றல்

தாய்மாமன் தென்னை ஓலை வெட்டியாந்து பாய் (தடுக்கு) பின்னி, குடுசு (குடிசை) கட்டி, திண்ணைய மறைச்சு, அதில புள்ளைய உட்கார வச்சிருவாங்க. சொந்த பந்தங்க வாங்கியார மைசூர்பாக்கு, ஜிலேபி, லட்டு, வடை, முறுக்கெல்லாம், 18 நாள் நொறுக்கு நொறுக்குன்னு தின்னு, தண்ணி ஊத்தி சீர் பண்ற அன்னிக்கு ஈர்க்குச்சியாட்டமா இருந்த புள்ளே நெகு,நெகுன்னு பாலீஷ் ஆயிரும்.

இதெல்லாம், பழையபடி காடுகரையில வேலைக்குப் போறப்போ, காய்ஞ்சு, கருவாடாகி, தீயில வாட்டின கருதாட்டமா வாடிப் போயிரும்.

உண்மையான விடிவுகாலம்ங்கிறது தை மாசம் பொங்கல் நோம்பி (பண்டிகை) அன்னிக்குத்தான். மாட்டுப் பொங்கல் ரொம்ப விசேஷம். பூப்பறிக்கப் போறதுன்னு (இந்தப்பூவை பறித்து வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும் நிகழ்ச்சி) சுத்து வட்டாத்தில் உள்ள நாலு ஊருக்காரங்களும், ராயர் கோயில்ல மாட்டு வண்டிகள்ல வந்து எறங்குவாங்க. காங்கயம்பாளையம், காடாம்பாடி, காரணம்பேட்டை, சூலூர், அருகம்பாளையம்ன்னு அந்தந்த ஊர் வயசுப்பசங்க, புள்ளைங்க வந்து இங்க சாமி கும்பிட்டுட்டு, கொண்டாந்த பொறிகடலை, இனிப்பு வகையை தின்னு தீர்த்துட்டு ராட்டினந்தூரி, குதிரைதூரி, சடுகுடு, தொட்டு விளையாட்டு, ஆடுபுலியாட்டம்ன்னு வெளையாடுவாங்க.

ராட்டினந்தூரி

பொழுது சாயற நேரம். பக்கத்து ஊர்ப்பையன், நம்ம ஊர்ப்பையனை சிநேகம் பண்ணி பார்க்கறதுக்கு லட்சணமா தெரியற புள்ளைங்களைப் பத்தி விசாரிப்பானுங்க. புள்ளைய புடிச்சுப் போனா அப்பன், ஆத்தாகிட்டச் சொல்லி பொண்ணு கேக்கச் சொல்லுவாங்க. ரெண்டு குடும்பத்துக்கும் புடிச்சுப் போனா உடனே கண்ணாலந்தான். பொண்ணும் பையனும் தனியா பேசறது, முடிவெடுக்கறதெல்லாம் மூச். ‘கட்றா தாலிய’ன்னு அப்பன் சொன்னா, கண்ணை மூடிட்டு பையன் தாலிய கட்டீருவான்.

எங்க ஊர்ல படிச்ச பட்டதாரிகள் அந்தக் காலத்தில யாரும் கிடையாது. வாத்தியாரு, போலீஸ்காரங்களுக்கு பொண்ணு குடுக்க மாட்டாங்க. ‘வாத்தியாரை ஊரை விட்டு ஊர் மாத்துவாங்க. தண்ணி இல்லா காட்டுக்கு போலீசை மாத்துவாங்க’ன்னு பயம். மில் வேலை -அதுவும் பர்மண்ட் வேலைன்னா, கண்ணை மூடிட்டு கண்ணாலம் பண்ணி வச்சுருவாங்க.

‘மாப்பிள்ளைக்கு ஒரு கண்ணு கொஞ்சம் சிறிசு. லேசா காலை விந்தி விந்தி நடக்கறாரு!’ன்னா, ‘அதனால என்ன, ஆயுசுக்கும் நம்ம பொண்ணை கண் கலங்காம வச்சிருப்பாரு. பேசாம ஒத்துக்க!’ ன்னு கோழிய அமுக்கிற மாதிரி போட்டு அமுக்கிருவாங்க.

எங்கக்காவுக்கு உள்ளூர்லயே மாப்பிள்ளை கிடைச்சது. ஊருக்கே நல்ல தண்ணி குடுக்கற புண்ணியவதி மகன்னு எங்க மச்சானுக்குப் பேரு.

அந்தக்காலத்தில பொண்ணு வீட்லதான் முகூர்த்தம் நடக்கும். அத்தை பசங்க, மாமன் பசங்க ஒரு வாரம் முன்னாடியே வந்து தெருவை வளைச்சு பந்தல் போட்டு, ‘பெட்ரோமாக்ஸ்’ லைட், ‘மைக் செட்’டெல்லாம் தடபுடலா ஏற்பாடு பண்ணுவாங்க.

அக்கா

மாப்பிள்ளையை குதிரையில உக்கார வச்சு கூட்டியாந்து பொண்ணு வீட்டு பக்கத்து வீட்டில தங்க வைப்பாங்க. அதுக்கு பேரு விடுதி ஊடு. ‘பட்டினி சோறு’, ‘கல்யாணம்’, ‘தாரா முகூர்த்தம்’ (முகூர்த்தம்) அப்படின்னு 3 நாளு விசேஷம் நடக்கும்.

மணவறையில அருமைக்காரர் அல்லது சீர்க்காரர் என்பவர்தான் எல்லா சடங்குகளையும் செய்வார். தாலி கட்டிய பின் ‘கைதாரை’ என்று மணமகனும், மணமகள் சகோதரனும், தட்டில் குவித்து வைத்த அரிசி, வெற்றிலை பாக்கு மீது இரண்டு கைகளையும் எதிர் எதிர் அமர்ந்து கோர்த்து வைத்துக் கொள்வார்கள்.

குடிமகன் என்கிற நாவிதன்தான் -பள்ளியில் படிக்காதவன்- சிறுவயதில் மனப்பாடம் செய்த ‘கம்பன் மங்கல வாழ்த்தைச் சொல்லி, ஒவ்வொரு அரிசியாக போட, மத்தளக்காரர், டும்..டும்..ன்னு அடிப்பார்.

மாப்பிள்ளைய மணையில வச்சு... டும், பொண்ணை போழையில வச்சு... டும்,

கல்யாணத்துக்கு பல சடங்குகள் சம்பிரதாயங்கள் உண்டு. தாலிகட்டறதுக்கு முன்னாடி, தாய்மாமன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணை தோள்ள வச்சு தூக்கிட்டு போயி புள்ளார் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு வர்ற பழக்கம் இருந்துச்சு.

மச்சான்

100 வருஷத்துக்கு முன்னாடி, பால்ய விவாகம் -அதாவது 10 வயசு, 12 வயசு புள்ளைகளுக்கு கண்ணாலம் பண்ணினானங்க. அப்போ பொண்ணு குட்டிப் பாப்பவாக இருந்திருக்கும். தாய் மாமன் அலாக்க ஒரு கையிலயே பொண்ணை தூக்கி தோள்ள வச்சுட்டு ராஜநடை போட்டிருப்பான். பிற்காலத்தில் 18 வயசு பொண்ணுக்கு கண்ணாலம் பண்றப்போ புள்ளைங்க நல்லா நெகு,நெகுன்னு வளர்ந்திருக்கும். சில பொண்ணுக குண்டா, குந்தாணியாட்டமா இருப்பாங்க. மாமங்காரன் சீமார்க்குச்சி(துடைப்பக்குச்சி) மாதிரி ஒல்லியா இருப்பான். பொண்ணை தூக்கி தோள்ள வச்சா முதுகெலும்பு முறிஞ்சு போகும். அதோடு பிற்காலத்தில மாப்பிள்ளைங்க விவரமாயிட்டாங்க. அடுத்தவன் தொட்ட பொண்ணை கட்டிக்க மாட்டேன்னு கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதனால பொண்ணு தூக்கற பழக்கம் எங்கக்கா கல்யாணத்தப்பவே இல்லாம போயிருச்சு.

எங்க அக்கா கல்யாண நிகழ்ச்சியில் மறக்க முடியாத விஷயம் - காலை 7.30 மணிக்கெல்லாம் திருமண நிகழ்ச்சி முடிஞ்சதனால எதுக்கு வீணா லீவு போடணும்னு அன்றைய தினமும் நான் பள்ளிக்குச் சென்றதுதான்.

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x