Last Updated : 22 Jul, 2020 01:55 PM

 

Published : 22 Jul 2020 01:55 PM
Last Updated : 22 Jul 2020 01:55 PM

’நெஞ்சிருக்கும் வரை’... ஸ்ரீதர்!  - புதுமை இயக்குநர் ஸ்ரீதர் பிறந்தநாள் இன்று

அந்தக் காலத்தில், தயாரிப்பு நிறுவனங்கள்தான் சொல்லப்பட்டன. பக்ஷிராஜா படம், ஏவிஎம் படம் என்றெல்லாம் சொன்னார்கள். ஜெமினி கம்பெனி படம், மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்று சொன்னார்கள். பிறகு வந்த காலகட்டம், நடிகர்களின் பக்கம் திரும்பியது. ‘எம்.கே.டி. படம்’ என்றார்கள். ‘பி.யு.சின்னப்பா’ படம் என்றார்கள். ‘கிட்டப்பா’ படம் என்றார்கள். ‘சிவாஜி படம்’ என்றார்கள். ‘எம்ஜிஆர் படம்’ என்றார்கள். நாயக பிம்பங்களில் இருந்த சினிமாவை, இயக்குநர் பக்கம் திசை திருப்பியது கலங்கரை விளக்கம் ஒன்று. கேப்டனை விட்டுவிட்டு, கப்பலில் பயணித்தவர்களைச் சிலாகித்ததை விடுத்து, கேப்டனின் லாகவத்தை எல்லோரும் சொல்லத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட கேப்டனாகத் திகழ்ந்தவர்... இயக்குநர் ஸ்ரீதர்.

தமிழ்த் திரைப்பட உலகில் மிகவும் பேசப்பட்ட வசனகர்த்தா இளங்கோவன். இவரும் செங்கல்பட்டு. ஸ்ரீதரும் செங்கல்பட்டு அருகே சித்தாமூர். பள்ளியில் போட்ட டிராமாக்கள் பேர் வாங்கிக் கொடுத்தன. அரை நிஜார் பாக்கெட்டில் கனவுகளையும் கற்பனைகளையும் கதைகளையும் சேகரித்தார் ஸ்ரீதர். இளங்கோவனைச் சந்தித்து விருப்பம் தெரிவித்தார்.

அதன் பின்னர் சந்தித்ததெல்லாம் அவமான டேக்குகள். மீசை வளர்ந்துவிட்டாலும் இன்னும் குழந்தைதான் எனும் மனோபாவத்தில் இருக்கும் பெற்றோர் போல, ‘இவ்ளோ சின்னப்பையனா இருக்கியேப்பா’ என்றுதான் சொல்லிச் சொல்லி, சொல்லிவைத்தாற் போல் ஒதுக்கினார்கள். தன் நிலையில் சற்றும் மனம் தளராதவன் விக்கிரமாதித்தன் மட்டும்தானா என்ன? ஸ்ரீதரும்தான். அசராமல் முயன்று கொண்டே இருந்தார்.

கமல்ஹாசனின் இன்னொரு குரு என்று இன்றைக்கு எல்லோராலும் போற்றப்படும் டி.கே.சண்முகம் அண்ணாச்சியிடம் சென்று கதையைக் கொடுத்தார். படித்து மிரண்டார். தலையில் இருந்து கால் வரை ஏற இறங்கப் பார்த்தார். ‘போச்சுடா... இவரும் ‘சின்னப்பையன்’ டயலாக் சொல்லப்போகிறார் என்று ஸ்ரீதர் நின்றுகொண்டிருந்தார். ‘இதோட ஒரிஜினல் எங்கே இருக்கு?’ என்று கேட்டார். ‘சித்தாமூரில் உள்ள வீட்டில்’ என்றார். ‘அதை எடுத்துட்டு வாங்களேன் தம்பி’ என்றார். ‘இந்தப் பையன் தான் எழுதினானா? அல்லது மண்டபத்தில் வேறு யாராவது கொடுத்து, அதை எடுத்து வந்திருக்கிறானா?’ என்று சண்முகம் அண்ணாச்சிக்கு சந்தேகம்.

மறுநாள்... நோட்டுப்புத்தகம் கொண்டு வந்து நீட்டினார். அப்போதும் மனதுள் பத்திபத்தியாக சந்தேகங்கள். சோதிக்க நினைத்தார் அண்ணாச்சி. ‘இதுல இந்த சீன் மட்டும் கொஞ்சம் மாத்தி வேற விதமா எழுதிக்கொடுக்க முடியுமா? இப்பவே எழுதிக் கொடுங்க தம்பி. மாடிக்குப் போய் உக்காந்து எழுதுங்க’ என்றார். அடுத்த ஒருமணி நேரத்தில் எழுதிக்கொண்டு வந்தார். படித்துவிட்டு பேப்பரை மூடினார். ஸ்ரீதரின் வாழ்க்கையின் இன்னொரு பக்க கதவைத் திறந்தார். ‘ரத்தபாசம்’ நாடகத்தை அரங்கேற்றினார். நாடகம் முடிந்ததும், ‘இவ்வளவு பெரிய கதையை எழுதியது ஒரு சின்னப்பையன். அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்’ என்று ஸ்ரீதரை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார். அப்போது எழும்பிய கரவொலியை, ‘போதும் போதும்’ என்று சொல்லி நிறுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.

பிறகு வசனம் எழுதுவதற்கு படங்கள் வந்துகொண்டே இருந்தன. ’எதிர்பாராதது’, ‘யார் பையன்’, உத்தமபுத்திரன்’, ’அமரதீபம்’ என்று ஏகப்பட்ட படங்கள். ‘ப்ராணநாதா’, ‘தேவி’ என்று பேசப்பட்டு வந்த வசன பாணியை மாற்றினார். நாமெல்லோரும் பேசிக்கொள்ளும்படியான ஸ்டைலில் எழுதினார். அதை முதன்முதலாகத் திரையில் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள் ரசிகர்கள்.

வீனஸ் பிக்சர்ஸில் பார்டனராகச் சேர்ந்தார். முதன்முதலாகப் படம் இயக்கினார். அப்போது எம்ஜிஆரும் சிவாஜியும் மிகப்பெரிய ஹீரோக்களாக கொடிகட்டாமலேயேப் பறந்தார்கள். ஆனால் அவர்களிடம் கால்ஷீட் கேட்கவில்லை ஸ்ரீதர். அன்றைய தேதியில், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் என்று எவரையும் இசையமைக்க அழைக்கவில்லை.

படத்தின் நாயகனாக ஜெமினி கணேசனை வைத்துக்கொண்டார். அதுவரை பாடகர் என்று எல்லோருக்கும் தெரிந்த ஏ.எம்.ராஜாவை இசையமைப்பாளராக்கினார். காதல் காவியம் என்று ‘தேவதாஸ்’ பேசப்பட்டு வந்ததை, அப்படியே தன் படமாக மாற்றினார். காதல் பரிசாக, அதன் உன்னதம் சொன்ன ‘கல்யாண பரிசு’ கொடுத்தார். அது காதல் பரிசு, கல்யாண பரிசு மட்டுமா? தமிழ்த் திரையுலகிற்கு ஸ்ரீதர் தந்த முதல் பரிசு அது.

காதலின் அடையாளமாக ‘தாஜ்மஹால்’ இருப்பது போல், இங்கே, ‘வசந்தி’ கேரக்டரைப் பார்த்தது தமிழ்ச் சமூகம். எந்தப் பெயர் கொண்ட பெண்ணைக் காதலித்தாலோ ஆணைக் காதலித்து தோற்றிருந்து வேறொருவரை கல்யாணம் செய்துகொண்டாலோ... அவர்கள் ‘வசந்தி’ என்று பிறந்த பெண் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி, காதலைப் போற்றினார்கள். ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி அறுபதுகளின் நிறைவிலும் கூட, ஏராளமான ‘வசந்திகள்’ பிறந்தார்கள்.

’மீண்ட சொர்க்கம்’, ‘விடிவெள்ளி’, ’தேன் நிலவு’, ’சுமைதாங்கி’ என்றெல்லாம் தொடர்ந்து இயக்கிய படங்கள், காதல் உணர்வின் மிச்சசொச்சங்கள் வரை தொட்டார். சோகத்தையெல்லாம் பிழிந்து வார்த்தார். இதன் உச்சம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.

ஒரே களத்தில் படமாக்குவதெல்லாம் எவரும் நினைத்துப் பார்க்காத விஷயம். ஆஸ்பத்திரியில் மட்டுமே நடக்கிற கதையை எடுத்தார். அது... தமிழ் சினிமாவுக்கு ஸ்ரீதர் பாய்ச்சிய புதியதொரு ரத்தம். கல்யாண்குமார், தேவிகா, முத்துராமன், நாகேஷ், வி.எஸ்.ராகவன், கல்யாண்குமார் அம்மா, ஆஸ்பத்திரி சிறுமி என ஆறேழு பேரை வைத்துக்கொண்டு, காதல், தியாகம், கடமை என்று உணர்ச்சிப்பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் வழங்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தைப் பார்த்து, நெஞ்சில் கைவைத்து லப்டப் படபடப்பைக் கண்டு அதிர்ந்துதான் போனது தமிழ் சினிமா.

‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘போலீஸ்காரன் மகள்’ எல்லாமே ஒவ்வொரு விதம். ஸ்ரீதர் படமென்றால் இன்னொன்றும் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதுவரை, கேமிரா ஆணி அடித்தது போல்தான் நிற்கும். நகருவதோ ஓடுவதோ படத்துக்கு ஐந்தாறு இருந்தாலே அபூர்வம். அப்படியே படம் முழுக்க நகர்ந்தாலும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் பேசுகிற வசனத்துக்கும் கேமிரா நகர்வுக்கு எந்தத் தொடர்பும் இருக்காது. ஆஸ்பத்திரி ரூம். படுக்கையில் இருக்கும் முத்துராமன். அதற்கு அருகில் தேவிகா. நாலரை நிமிஷத்துக்கு, பாட்டு முடியும் வரை இவர்கள் இருவரையும் காட்டவேண்டும். காட்சியின் கனத்தையும் சோகத்தின் கணத்தையும் பாடல் வழியேயும் கேமிரா வழியேயும் ஒளிப்பதிவாளர் வின்செண்டைக் கொண்டு உணர்த்திக் கொண்டே வருவார் ஸ்ரீதர். முத்துராமனிலிருந்து தேவிகா, தேவிகாவில் இருந்து முத்துராமன். ஜன்னலில் இருந்து தேவிகா. ஜன்னலில் இருந்து முத்துராமன். ஜன்னலில் இருந்து இருவரும். கட்டிலில் முத்துராமன். அதன்கீழே கேமிரா பார்வை பார்க்கும். அப்படியே தேவிகாவுக்கு வரும். பின்னர், இருவரையும் மேலிருந்து காட்டும். தேவிகாவையும் அங்கே இருக்கும் கண்ணாடியில் முத்துராமன் முகத்தையும் காட்டும். அந்த ‘சொன்னது நீதானா’ பாடலை இப்போது பார்த்தாலும் மிரண்டு வியப்போம்.

இந்த சமயத்தில்தான், காமெடிப் படமெடுக்கும் ஆசை வந்தது அவருக்கு. ‘காதலிக்க நேரமில்லை’ எடுத்தார். காஞ்சனாவையும் ரவிச்சந்திரனையும் அறிமுகப்படுத்தினார். ஆழியாறு பகுதியை, முதன்முதலாக அப்படிக் காட்டியிருந்தார். அந்தக் காலத்தில் பேருந்தைக் கூட ‘கார்’ என்று சொன்ன மக்கள் அதிகம். ‘காதலிக்க நேரமில்லை’ படம் தொடங்கியதும் ‘என்ன பார்வை உந்தன் பார்வை’ பாட்டு. அதில் காஞ்சனா ஆடுவதை கார்கண்ணாடியில் காட்டுவார். காரில் முத்துராமன் உட்கார்ந்திருப்பார். பாட்டு முடிந்ததும் காரில் இருவரும் கிளம்புவார்கள். அப்போது ஓபனில் இருக்கும் கார், கொஞ்சம் கொஞ்சமாக டாப் பகுதி மூடிக்கொண்டே வரும். வாய் பிளந்து பார்த்தார்கள் ரசிகர்கள்.

‘வெண்ணிற ஆடை’ எடுத்தார். ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என பலரையும் அறிமுகப்படுத்தினார். மன ரீதியான உணர்வுகளையும் சிகிச்சைகளையும் கல்யாணமான அன்றே கணவனைப் பறிகொடுத்த இளம்பெண்ணையும் என வைத்துக்கொண்டு, வில்லத்தனம், வில்லன் என எதுவுமின்றி, யாருமின்றி சூழல்களையே வில்லனாக்கினார். அதனால்தான் புதுமை இயக்குநர் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
’நெஞ்சிருக்கும் வரை’ என்ற படத்தில், சிவாஜி, கே.ஆர்.விஜயா, முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன். ஒருகட்டத்தில், மூவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். அதுமட்டுமா? மேக்கப் கிடையாது. ‘முத்துக்களோ கண்கள்’ பாடலை அத்தனை இருட்டான வெளிச்சத்தில் எடுத்திருப்பார். கல்யாணப் பத்திரிகையை அப்படியே வாசிக்கும் பாடலாக ‘பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்று வைத்திருப்பார்.

‘சிவந்த மண்’ படம் இன்னொரு பிரமாண்டம். ‘பட்டத்து ராணி’யும் ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாட்டும் ஸ்ரீதரின் பரீட்சார்த்த முயற்சிகள். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம். இதிலும் சிவாஜிக்கு மேக்கப் இருக்காது.

அந்தக் காலத்தில் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ மாதிரியாகவும் எழுபதுகளில் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ மாதிரியாகவும் நினைக்கவும் படமெடுக்கவும் மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். இதில் பாரதி, அதில் ஜெயசித்ரா. நடுவே, இவரின் ‘ஓ மஞ்சு’வும் வேறொரு பிரயத்தனம் தான். பின்னாளில், ‘துள்ளுவதோ இளமை’ மாதிரி எடுப்பதற்கான தொடக்க தைரியம் தந்தவர் ஸ்ரீதர்தான். எம்ஜிஆரை இயக்கிய ‘மீனவ நண்பன்’, ’உரிமைக்குரல்’, விக்ரமை இயக்கிய ‘தந்துவிட்டேன் என்னை’, ரகுவரனின் ‘ஒரு ஓடை நதியாகிறது’, மோகனை இயக்கிய ‘தென்றலே என்னைத் தொடு’, கார்த்திக்குடன் ‘நினைவெல்லாம் நித்யா’ என ஏதோவொரு வகையில், நம்மை ஈர்த்தன.

ஸ்ரீதரின் படம் இப்படித்தான் இருக்கும் என்று கோடுகிழித்து, சட்டத்துக்குள்ளேயோ வட்டத்துக்குள்ளேயோ அடைத்துச் சொல்லிவிடமுடியாது. அந்தக் கோடுகளையும் சட்டத்தையும் வட்டத்தையும் தாண்டிச் சென்றார் ஸ்ரீதர். அதனால்தான் அவர் புதுமை இயக்குநர் என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

டைரக்‌ஷன் பக்கம் ரசிகர்களின் கவனங்களைத் திருப்பி, வேறொரு டைமன்ஷனையும் டைரக்‌ஷனையும் காட்டிய ஸ்ரீதர்... இன்னும் பல நூற்றாண்டுகளுக்கான கேப்டன்... கலங்கரை விளக்கம்.

1933ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பிறந்த ஸ்ரீதருக்கு இன்று பிறந்தநாள். 87வது பிறந்தநாள்.

புதுமைகள் படைத்திட்ட ஸ்ரீதரைக் கொண்டாடுவோம். ’நெஞ்சிருக்கும் வரை’ ஸ்ரீதரும் இருப்பார் நம் நினைவுகளில்!


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x