சேற்றில் சிக்கி இறக்கும் யானைகளுக்கு யார் பொறுப்பு?- வனத்துறை மீது வருத்தப்படும் சூழலியலாளர்கள்

சேற்றில் சிக்கி இறக்கும் யானைகளுக்கு யார் பொறுப்பு?- வனத்துறை மீது வருத்தப்படும் சூழலியலாளர்கள்
Updated on
3 min read

யானைகளின் மரணங்கள் மனித குலத்தின் முன் சில கேள்விகளை எழுப்பத்தான் செய்கின்றன. வயநாட்டில் பழத்தில் வெடி வைத்துக் கொல்லப்பட்ட யானை, மேட்டுப்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை எனும் நீளும் இந்தப் பட்டியலில், கூடலூர் மணல்கொல்லியில் சேற்றில் சிக்கி இறந்த யானையும் இடம்பெற்றிருக்கிறது.

‘இப்படி யானைகள் சேற்றில் சிக்கி இறக்கும் சம்பவத்தை விபத்து என்று கடந்து போய்விட முடியாது. இது இயற்கைக்குச் செய்யும் துரோகம்’ என்று சொல்லி வருந்துகிறார்கள் சூழலியலாளர்கள்.

பொதுவாகவே வனப் பகுதிகளில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் மின் வேலிகளில் சிக்கியும், ரயில்களில் அடிபட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும், அவுட்டுக்காய் எனப்படும் வெடியால் சிக்க வைக்கப்பட்டும் யானைகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இதில் சேற்றில் சிக்கி மரணிக்கும் யானைகளும் நிறைய உண்டு. முக்கியமாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தொடங்கி பெத்திகுட்டை, சிறுமுகை, பவானி சாகர் அணை வரை ஆங்காங்கு உள்ள நீர்த்தேக்கங்களில் நிறைய யானைகள் சேறுகளில் சிக்கி பொதுமக்களாலேயே மீட்கப்பட்டுள்ளன. அதேபோல அணை நீர் வறட்சி ஏற்படும் காலங்களில் பலவீனமான யானைகள் இப்படி புதைசேற்றில் சிக்கி இறப்பதும் உண்டு.

நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து பாட்டவயல் செல்லும் பாதையில் 2 மைல் தொலைவில் உள்ளது மணல்கொல்லி பகுதி. இங்கே உள்ள விவசாய நிலங்கள், தோப்புகளை யானைகள் அடிக்கடி சேதப்படுத்துவது உண்டு. பாக்கு மரங்களையும் யானைகள் சேதப்படுத்தும். இப்படிச் சேதமடையும் பாக்கு மரங்களிலிருந்து பாக்குகளைச் சேகரிக்க அருகில் உள்ள ஆதிவாசி கிராம மக்கள் செல்வதும் வழக்கம். அப்படி இப்பகுதிக்கு வந்த சிலர் ஒரு தோட்டத்தில் காட்டு யானை படுத்திருப்பதைப் பார்த்து, பயந்து ஓடிவந்து வெளியில் உள்ள மக்களுக்குத் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மக்கள், யானை சேற்றுக்குள் சிக்கியிருக்கிறது என்பதை அறிந்து வனத்துறைக்குத் தகவல் தந்துள்ளனர்.

கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன், வனக்காவலர் பிரதீப்குமார் மற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது யானை சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் பலியானது தெரியவந்தது. “இறந்த யானைக்கு 20 வயதிருக்கலாம். முன்தினம் இரவு இப்பகுதிக்கு வந்து சேற்றில் சிக்கியிருக்கலாம். அதிலிருந்து வெளியேற முடியாமல் உடல் சோர்வுற்றே யானை உயிரிழந்துள்ளது” என்கிறார்கள் வனத்துறையினர்.

ஆனால் சூழலியலாளர்கள் கூறும்போது, “பொதுவாகவே யானை மிகவும் உஷார் தன்மை கொண்டது. தன் உடல் எடைக்கு ஏற்ற மாதிரியான இடத்தில்தான் கால் வைக்கும். தண்ணீரிலோ, சேற்றிலோ கால் வைக்கும்போது அது தன் எடையைத் தாங்குமா என்பதையெல்லாம் சோதித்தே காலை வைக்கும். அதையும் தாண்டி ஒரு யானை சேற்றில் சிக்கி இறக்கிறதென்றால் ஒன்று அது நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது முதுமையால் பலவீனமடைந்திருக்க வேண்டும். ஆனால், இறந்த யானையோ 20 வயது மதிக்கத்தக்கது. உடல் பலவீனமான நிலையிலும் இல்லை. எனவே வனத்துறை தன் வேலையைச் சரியாகச் செய்திருந்தால் இந்த யானையை உரிய கருவிகள் கொண்டு காப்பாற்றியிருக்கலாம்” என்கிறார்கள்.

கூடலூரைச் சேர்ந்த விவசாயிகள் பழங்குடிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் இது குறித்துக் கூறுகையில், “கூடலூரில் ஒரு ஊர் பேரே ‘யானை செத்த குழி’. அங்கே ஒரு யானை விழுந்தா வெளியே வராது. அந்த அளவுக்குப் புதைமண் நிறைஞ்ச பூமி. மணல்கொல்லியும் சேறும், சகதியும் நிறைஞ்ச ஊர்தான். ஒரு மழை பெய்தால் விவசாய நிலத்துல மண், மீட்டர் கணக்கில் ஆழமாகப் போகும். அவ்வளவு சுலபமா சேறு இறங்கும் இடத்தில் யானை இறங்காது. அந்த யானை எப்படியோ தெரியாத்தனமா இறங்கிடுச்சு. மதியம் 2 மணிக்கு அந்த யானை இறந்ததுன்னு சொல்லியிருக்காங்க. அப்படின்னா அது காலையிலதான் சேற்றில் மாட்டியிருக்கணும். இந்த இடைவெளியில் அதைக் காப்பாற்றியிருக்கலாம். வனத் துறையில் விலங்குகள் இப்படி ஆபத்துல மாட்டிகிருச்சுன்னா உடனே அதைக் காப்பாத்த உண்டான ஆட்களோ, கருவிகளோ இவங்க கையில கிடையாது.

இத்தனைக்கும் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டுல செயல்படறது வனத்துறைதான். அதுலயும் வனவிலங்குகளைப் பற்றி பேசறது இப்ப பொழுதுபோக்குக்கு, ஃபேஷனுக்குப் பேசற மாதிரி ஆகிப் போச்சு. உண்மையா யானைகளைக் காப்பாத்தறதுக்கு ஆளே இல்லை. இதுவரைக்கும் ஜனங்களா முயற்சி எடுத்து யானைகளைக் காப்பாத்தின சம்பவங்கள்தான் நிறைய இருக்கு.

உலகத்துலயே பேரு பெற்றது முதுமலை சரணாலயம். அதுல அதிக வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி இதுதான். அப்படிப்பட்ட பகுதியில ஒரு யானை இப்படி மாட்டிக்கிட்டா உடனே எடுக்கிற மாதிரி ஒரு சிஸ்டம் இங்கே இல்லைன்னா எப்படி? யானை வழித்தடம் பத்திப் பேசும்போது ‘யானை ஏன் காட்டுக்குள்ளிருந்து வெளியே வருது?’ன்னு உச்ச நீதிமன்றம் கேட்குது. அது ஒரு முக்கியக் கேள்வி அல்லவா? காடு காடா இல்லை. அதனால அது வெளியே வருதுங்கிறதுதானே உண்மை.

அப்ப, காட்டைக் காப்பாத்த வேண்டிய வனத்துறை என்ன செய்யுது? ஆக, இதோட சாவுக்குப் பொறுப்பு மக்கள் அல்ல; வனத்துறைதான். காட்டுக்குள்ளே வெறும் தேக்கு மரமும், உண்ணிச் செடியும், யூகலிப்டஸும், பார்த்தீனியமும்தான் இருக்கு. அதையெல்லாம் யானைகள் வாய் தொடாது. 45 வயசுடைய மூங்கிலைத்தான் யானை விரும்பும். அதைப் பழங்குடிகள் முறையா பராமரிச்சாங்க. முற்றிய மூங்கில வெட்டி அவங்கதான் பராமரிச்சாங்க. வனத்துறையோ அதுக்குத் தடைபோட்டு மூங்கிலையெல்லாம் அழிச்சுட்டாங்க. அதனால யானைகள் தீவனம் கிடைக்காம கரும்பு, வாழைன்னு நம்ம வயக்காட்டைப் பார்த்து வந்துடுது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in