Last Updated : 20 Jul, 2020 08:00 PM

 

Published : 20 Jul 2020 08:00 PM
Last Updated : 20 Jul 2020 08:00 PM

பதவி உயர்வைத் துறந்து இலவச ஆம்புலென்ஸ் சேவை நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்

சாலை விபத்தில் உயிரிழந்த தனது தம்பியின் நினைவாக அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி கிராம மக்களுக்காக இலவச ஆம்புலென்ஸ் சேவை நடத்தி வருகிறார் இளம் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் து.பிரித்திவிராஜ் (35). அருகே உள்ள கஞ்சம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற வாசகம் வரவேற்கும் வகையில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளார் துரைபிரித்திவிராஜ். சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் ஏழை, எளியோருக்கும் மாணவர்களுக்கும் வீடு தேடிச்சென்று சான்றிதழ்களை வழங்கி வரும் பிரித்திவிராஜ் கிராம மக்களுக்காக இலவச ஆம்புலென்ஸ் சேவையையும் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து விஏஓ பிரத்திவிராஜ் கூறுகையில், வருவாய்த்துறையில் தந்தை பணியாற்றி வந்தார். அவர் இறந்தபின் கருணை அடிப்படியில் எனக்கு 2011ல் கிராம நிர்வாக அலுவலர் பணி கிடைத்தது.

கடந்த 2014ல் மதுரையில் பைக்கில் சென்றபோது எனது தம்பி ராஜேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது நினைவாக ராஜேஷ் உதவும் கரங்கள் என்ற அறக்கட்டளையைத் தொடங்கினேன்.

பின்னர், ஏழை, எளிய மக்களுக்காக இலவச ஆம்புலென்ஸ் சேவையைத் தொடங்கினேன். உயிரிழந்த ஆதரவற்றோரின் சடலங்களை எடுத்து அடக்கம் செய்துள்ளேன். விசேஷ வீடுகளில் மிஞ்சும் உணவுகளைப் பெற்று ஆதவற்றோர், முதியோர், குழந்தைகள் இல்லங்களுக்கு வழங்கி வருகிறேன். கடந்த 4 மாதங்களில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இதுபோன்று உணவு வழங்கியுள்ளோம். இதற்கு நண்பர்கள் பலர் துணையாக செயலாற்றி வருகின்றனர்.

இந்த அறக்கட்டளை மூலம் வாட்ஸ்-ஆப், முகநூல் வழியாக பணம் திரட்டி படிப்பைப் பாதியில் நிறுத்திய ஏழைக் குழந்தைளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்துவது, மருத்துவ சிகிச்சைக்கு உதவுவது போன்ற சேவைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

இதற்கு நிதி உதவி அளிப்போருக்கு கட்டணம் செலுத்தியதற்கான ரசீதையும் அனுப்பிவிடுவேன். அத்தோடு, மாலை நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

தற்போது புதிதாக மேலும் ஒரு ஆம்புலென்ஸ் வாகனத்தை நண்பர்கள் உதவியோடு வாங்கியுள்ளேன். இதற்காக கட்டணம் வசூலிப்பதில்லை. அன்பு ஒன்றையே கட்டணமாக வசூலிக்கிறோம். கரோனா நோயாளிகள் பலரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளோம். பராமரிப்பு, டீசல் செலவினங்களை நண்பர்கள் உதவியோடு மேற்கொண்டு வருகிறேன்.

அடுத்ததாக மாலைநேர பள்ளி ஒன்றையும் ஏழை எளிய மாணவர்களுக்காக தொடங்க உள்ளதாக பெருமிதத்தோடு கூறுகிறார் பிரித்திவிராஜ். அதுமட்டுமின்றி, மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதற்காக ஆர்.ஐ-யாக கிடைத்த பதவி உயர்வையும் இவர் நிராகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x