Last Updated : 20 Jul, 2020 01:42 PM

 

Published : 20 Jul 2020 01:42 PM
Last Updated : 20 Jul 2020 01:42 PM

பிரீடா காலோ: ஒரு ஓவியரின் அறியப்படாத முகம்

இன்றைய பாப் பண்பாட்டுச் சூழலில், பிரபல மெக்சிகோ ஓவியர் பிரீடா காலோ எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஜூலை மாதம் பிறந்த அவர், தன் ஓவியங்களால் தனி அடையாளம் பெற்றவர். தன் வாழ்நாள் முழுக்க பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டாலும் கலைப் படைப்புகளிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் அயராது உழைப்பைச் செலுத்தியவர்.

பார்பி பொம்மைகளில் தொடங்கி, புத்தம் புதிய காஸ்மெடிக்ஸ் பெட்டி வரையில், அவர் மீதான விருப்பார்வம் சந்தைக்குப் பயன்படுத்தப்படுகிறது. எந்தப் பொருளை விற்க வேண்டுமானாலும் அவருடைய பெயரோ படமோ பயன்படுத்தப்பட்டுவருகிறது. பெருவணிகத் தூய்மைப்படுத்தல் செயல்முறை பிரீடாவைத் திரிக்கிறது.

ஆனால், தன் படைப்புகளால் உலகளாவிய புகழைப் பெற்றவர் அவர். உண்மையில் பிரீடா அரசியல் கலகக்காரர்; புதுப்பாதை சமைத்தவர்; தனது செயல்களுக்காக ஒருபோதும் வருந்தாத முன்னோடி ஆளுமை. உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவருடைய சர்வதேசக் கவர்ச்சி என்பது, புரட்சியோடும் எதிர்ப்பியக்கத்துடனும் அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதில்தான் வேர் கொண்டிருக்கிறது.

கலையைக் கையில் எடுப்பதற்கு முன்பே, பிரீடா ஒரு கொடையளிக்கப்பட்ட மாணவியாகவும், கல்வி வளாகத்தில் கலகக்காரராகவும் இருந்திருக்கிறார். 1922 ஆம் ஆண்டில் மெக்சிகோ நகரிலிருந்த புகழ்பெற்ற தேசியத் தயாரிப்புநிலைப் பள்ளியில் பதினான்கு வயதில் சேர்க்கப்பட்டார். அந்தப் பள்ளியில் முதன்முறையாக அனுமதிக்கப்பட்ட மாணவியருள் ஒருவராகப் பிரீடா இடம்பெற்றார். அங்கு பதிவுசெய்யப்பட்டிருந்த இரண்டாயிரம் மாணவர்களுள் முப்பத்தியைந்து பேர் மட்டுமே மாணவிகள். அவர்களுள் பிரீடாவும் ஒருவர். அந்த வளாகத்திலேயே இயங்கிவந்த ஒரு கலகக்காரக் குழுவின் உறுப்பினராக பிரீடா இருந்தார். மார்க்ஸ், லெனின், ஹெகல், கான்ட் ஆகியோரின் எழுத்துகள், ரஷ்ய இலக்கியம், மெக்சிக நாவல் இலக்கியம் ஆகியனவற்றை இந்தக் குழு தீவிரமாக வாசித்துவந்தது. பிரீடா தன்னைத்தானே ‘(மெக்சிகப்) புரட்சியின் மகள்’ என்றே (1910-1920) கருதிக்கொண்டார். அவருடைய மூத்த மாணவர்களுடன் ஆவேசமான, ஏராளமான விவாதங்களில் இறங்கினார்.

வாழ்நாள் நெடுகிலும் ஒரு மார்க்சிய-லெனினியவாதியாகவும், சோஷலிஸ்டாகவும் இருந்தவர் பிரீடா. பதினாறாம் வயதிலேயே மெக்சிக கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் குழுவில் இணைந்திருந்தார். 1928 ஆம் ஆண்டில் தன்னுடைய இருபதுகளின் தொடக்கத்தில், மெக்சிக கம்யூனிஸ்ட் கட்சியில் பிரீடா இணைந்துவிட்டார். இத்தனைக்கும் அப்போது (1925-1935) கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமான இயக்கம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இடதுசாரி எதிர்க்குழுவை அரசியல்ரீதியில் ஆதரித்ததற்காக 1929இல் கட்சியை விட்டு பிரீடா நீக்கப்பட்டார். அவர் மீண்டும் 1948இல்தான் மெக்சிக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஜப்பானிய மக்களின் மீது அணுகுண்டுகளை வீசியதிலிருந்து அமெரிக்க அரசுக்கு எதிராகவும், உலக அமைதிக்காகவும் பரப்புரை செய்வதில் பிரீடா தீவிரமாக ஈடுபட்டார். அதேநேரம், படிப்படியாக நலிவடைந்துவந்த பிரீடாவினுடைய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக கட்சிப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவதிலிருந்து அவர் தடுக்கப்பட்டார்.

மாபெரும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையின்போது நியூயார்க் நகரம், டெட்ராய்ட், சான் பிரான்சிஸ்கோ ஆகிய ஊர்களில் வாழ்ந்த காலத்துக்குப் பின் பிரீடாவின் அரசியல் நடவடிக்கைகள் கூர்மையடைந்தன:

டெட்ராய்டில் 1931 முதல் 1932 வரையான காலகட்டத்தில் அந்த நகரில் மிகப்பரவலாக நிலவிய வறுமை, பசி, கண்மூடித்தனமான இனவாதம் போன்றவற்றால் பிரீடா பெரும் பாதிப்பையும் கடும் எரிச்சலையும் அடைந்தார்.

இந்தக் காலகட்டத்தின்போது, தன் குடும்பத்தினருக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், அங்கு என்னென்ன காட்சிகளைப் பார்த்தாரோ அவற்றைத் தொகுத்து அவர் விவரித்திருக்கிறார்: “இங்குள்ள உயர்குடிச் சமுதாயம் என்னைச் செயலற்றுப் போக வைக்கிறது. இந்தப் பணக்காரப் பெரிய மனிதர்கள் அவ்வளவு பேருக்கும் எதிராக நான் கடுமையான கோபத்தில் ஆழ்ந்திருக்கிறேன். காரணம், ஆயிரக்கணக்கான மக்கள் உண்பதற்கு எதுவுமில்லாமலும், தூங்குவதற்குக்கூட ஓர் இடமில்லாமலும் மிக அதிகபட்ச பயங்கரமான துயரங்களால் வதைபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கு அதுதான் என் கவனம் முழுவதையும் கவர்ந்து ஈர்த்திருக்கிறது. இரவு பகலாகப் பணக்காரர்கள் விருந்துகளில் பங்கேற்று மகிழ்ந்து கொண்டிருக்கையில், அதே வேளை, ஆயிரமாயிரம் மக்கள் பசியினால் மடிந்துகொண்டிருக்கிறார்கள்’’.

1933 ஆம் ஆண்டுவாக்கில், பிரீடாவும் அவருடைய கணவர் டியாகோ ரிவேராவும், நியூயார்க் நகரில் வாழ்ந்தனர். பிரீடா குடும்பத்தினருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் ஐந்தாவது நிழற்சாலையில், ‘அருவருக்கத்தக்க’ பணக்காரர்கள் வாழும் பகுதியில் தான் கண்டதை விவரித்திருக்கிறார்: “அங்கே மிக அதிகமான துயரம் இருக்கிறது. அதே வேளை, அங்கு வாழும் மக்கள் இத்தகைய வர்க்க வேறுபாடுகளைத் தாங்கிச் சகித்துக்கொண்டு தொடர்ந்து வாழ்வது நம்புவதற்கு முடியாததாகத் தோன்றுகிறது. அத்தகைய ஒரு வாழ்க்கையின் வடிவத்தை ஏற்றுக்கொண்டிருப்பதையும் நம்புவதற்கு முடியவில்லை. கோடீஸ்வரர்கள் லட்சக்கணக்கான பணத்தை முட்டாள்தனமான கேளிக்கைகளுக்காக வீசி எறிந்து விரயம் செய்துகொண்டிருக்கின்றனர். மறுபுறமோ, பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியினால் துன்புற்றுக்கொண்டிருக்கின்றனர்.”

குவாதமாலாவில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து 1954 ஆம் ஆண்டு, ஜூலை 2 அன்று ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி பிரீடா போராட்டக் களத்தில் நின்றார் . அவர் மரணமடைவதற்குப் பதினோரு நாட்களுக்கு முன்பாக இது நடந்தது. மெக்சிகோவிலிருந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். குவாதமாலா நாட்டில் ஜனநாயகபூர்வமாகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜேக்கோப் ஆர்பென்ஸ், சி.ஐ.ஏ.அமைப்பின் சதிவேலையால் தூண்டப்பட்ட ஒரு கலகத்தின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருந்தார். அந்தக் கலக நடவடிக்கையை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் அது.

பிரீடா மறைந்தது 1954, ஜூலை 13 ஆம் தேதியன்று. அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி போர்த்தப்பட்டிருந்தது. அவருடைய இறுதி ஆண்டுகளில், பிரீடா தனது நாள்குறிப்புகளில் பின்வருமாறு எழுதியிருந்தார்: ''வாழ்வதற்கான உண்மையான ஒரேயொரு காரணமாகப் புரட்சி இருக்கிறது. அந்த லட்சியத்திற்காக சில சாதகமான செயல்களை என்னுடைய உடல்நலம் அனுமதிக்கும் பட்சத்தில் எனது அனைத்து வலிமைகளையும் ஒன்று திரட்டிக்கொண்டு, நான் கட்டாயம் போராடியாக வேண்டும்!''

நன்றி: கேன்டைஸ் யானெஸ் எழுதிய கட்டுரை

கட்டுரையாளர் தொடர்புக்கு: kamalalayan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x