Last Updated : 20 Jul, 2020 01:11 PM

1  

Published : 20 Jul 2020 01:11 PM
Last Updated : 20 Jul 2020 01:11 PM

கணிதப் பெண் சகுந்தலாதேவி

இந்தியாவின் முதல் பெண் கணித மேதை, தன் கணித அறிவாற்றலால் உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர், நடமாடும் ‘மனித கணினி’, எழுத்தாளர், ஆசிரியர் எனப் பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் சகுந்தலாதேவி.

கால்குலேட்டர்கள் கைகளுக்கு வந்தபிறகு வாய்ப்பாடு என்றால் என்ன எனக் கேட்பார்கள் இன்றைய தலைமுறையினர். ஆனால், தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான கணிதப் புதிர்களை மனத்தில் கணக்கிட்டே விடையளித்தவர் சகுந்தலாதேவி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இயக்குநர் அனு மேனன் இயக்கத்தில் நடிகை வித்யா பாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சகுந்தலாதேவி’ என்ற இந்தி திரைப்படம் ஜூலை 31-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் உண்மையான சகுந்தலாதேவி குறித்த தேடல் இணையதளத்தில் அதிகரித்துள்ளது.

யார் இந்த சகுந்தலாதேவி?

சகுந்தலாதேவி பெங்களூரில் 1929 நவம்பர் 4-ம் தேதி ஏழை பிரமாணக் குடும்பத்தில் பிறந்தவர். கோயில் பூசாரியாக இருந்த இவருடைய தந்தை சர்க்கஸ் சாகசங்கள் மீது பேரார்வம் கொண்டவர். சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் அந்தரத்தில் தொங்குவது, சிங்கத்தின் வாயில் கையைவிடுவது, கயிற்றின் மேல் நடப்பது, மேஜிக் வித்தைகளைச் செய்வது, சீட்டுக்கட்டுகளில் எண் வித்தைகளைச் செய்வது போன்றவற்றைச் செய்துவந்தார். தந்தை சாகசங்கள் பல செய்தாலும் சீட்டுக்கட்டுகளில் உள்ள எண்களைக் கொண்டு செய்யும் வித்தையை சகுந்தலா கூர்மையாகக் கவனித்துவந்துள்ளார். இந்த வித்தையின் நுணுக்கங்களையும் கணித எண்களையும் நினைவில் வைத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு மூன்று வயதுதான்.

ஒருநாள் தந்தையுடன் சீட்டுக்கட்டு வித்தை விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது சகுந்தலாவின் கணிதத் திறமையைக் கண்ட அவருடைய தந்தை பின்னர் சர்க்கஸ் தொழிலை விட்டுவிட்டு சகுந்தலாவை அழைத்துக்கொண்டு சாலையோரங்களில் சீட்டுக்கட்டு வித்தை விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தியுள்ளார். மூன்று வயதுச் சிறுமியின் இத்திறமை பெங்களூரு முழுவதும் பிரபலமானது. இதையடுத்து மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கணிதத் திறமையை வெளிப்படுத்தினார் ஆறு வயதேயான சகுந்தலா.

லண்டன் பயணம்

பத்து வயதில் சகுந்தலா பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே அவர் பள்ளிக்குச் சென்றார். தொடக்கப்பள்ளி படித்தபோதே உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கணக்குகளைச் சுலபமாகப் போட்டுவிடுவாராம் கணிதப் புலி சகுந்தலா. இதனால், வானொலி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். பின்னர் தந்தையுடன் 1944-ல் லண்டன் சென்றவர், அங்கே கணிதப் புதிர்ப் போட்டிகளில் பங்கேற்று ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் சென்றார்.

1950-ல் பிபிசி தொலைக்காட்சி நிருபர் லெஸ்லி மிட்செல் சகுந்தலாதேவியைப் பேட்டி எடுத்தார். நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்பேட்டியில் கணிதம், காலண்டர் கணிதம் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, சகுந்தலா அளித்த பதில் தவறு என்றார் லெஸ்லி. ஆனால், தன்னுடைய பதில் சரியென்று சகுந்தலா வாதிட்டார். அதை பிபிசி ஏற்கவில்லை. பின்னர் சகுந்தலா கூறிய பதில்தான் சரியானது எனத் தன் தவறை பிபிசி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்

அமெரிக்காவில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் 1977-ல் நடந்த கணிதப் போட்டியில் சகுந்தலா பங்கேற்றார். 201 என்ற எண்ணுக்கான 23-வது மூலத்தை 50 விநாடிகளிலேயே மனத்தில் கணக்குப் போட்டபடியே ‘546,372,891’ எனப் பதிலளித்தார் சகுந்தலாதேவி. இந்த விடை சரிதானா என்பதைக் கண்டறிய அப்போது பயன்படுத்தப்பட்ட நவீன கணினியில் (UNIVAC 1101 computer) சரிபார்க்கப்பட்டது. இதற்கான பதிலைக் கணினி அளிக்க நான்கு நிமிடங்களை எடுத்துக்கொண்டது. கணினியைவிட அதிவிரைவாக அதுவும் மனத்திலேயே கணக்குப்போட்டு சகுந்தலாதேவி பதிலளித்தது அங்கிருந்த பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. பிறகு 1980-ல் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணினியால் ரேண்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பதிமூன்று இலக்க எண்களைக் கொண்ட (7,686,369,774,870 × 2,465,099,745,779) எண்களைப் பெருக்கி 28 விநாடிகளிலேயே =18,947,668,177,995,426,462,773,730 எனப் பதிலளித்தார். 26 இலக்கங்களைக் கொண்ட இந்த எண்ணை மனத்திலேயே கணக்குப்போட்டு சகுந்தலாதேவி கூறியதுதான் அவரை உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்தது.

கணினியைவிட மனிதனே சிறந்தவன்

பள்ளிக்குச் செல்லாத சகுந்தலாதேவிதான் தன் கணித அறிவால் நடமாடும் ‘மனித கணினி’ என்ற பெயரில் உலக அளவில் அறியப்பட்டவர். ஆனால், ‘மனித கணினி’ என்ற பெயரை சகுந்தலா ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா? “மனிதனுடைய மூளை கணினியைவிடத் திறமையாகச் செயல்படக்கூடியது. இதனால், மனித மூளையை ஒரு சாதாரண கணினியுடன் ஒப்பிடுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.

இருபெரும் அடையாளங்கள்

1940-களில் லண்டனுக்குச் சென்ற சகுந்தலாதேவி பின்னர் 1960-ம் ஆண்டுதான் இந்தியா திரும்பினார். அவருக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பரிதோஷ் பானர்ஜி என்ற ஐஏஎஸ் அதிகாரியுடன் திருமணம் நடந்தது. ஆனால், பரிதோஷ் பானர்ஜி தன்பால் ஈர்ப்பு கொண்டவர் என்பதை சகுந்தலா தெரிந்துகொண்டார். இதையடுத்து 1979-ல் அவர் மணவிலக்கு பெற்றார். இவர்களுக்கு அனுபமா பானர்ஜி என்ற மகள் உள்ளார். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு விவாகரத்து பெறுவதற்கு முன்பே 1977-ல் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த ‘The world of homosexuals’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தியாவில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து வெளிவந்த முதல் புத்தகம் சகுந்தலாதேவியுடையதுதான். தற்போதுவரை பல்வேறு பதிப்புகளை இப்புத்தகம் கண்டுள்ளது.

இந்திரா காந்தியை எதிர்த்துப் போட்டி

தற்போதைய தெலங்கானாவில் உள்ள மேடாக் தொகுதியில் 1980-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் சகுந்தலா. இந்தியாவின் இரும்புப் பெண் என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியை எதிர்த்து அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், சகுந்தலாதேவியால் வெற்றிபெற முடியவில்லை. பின்னர் மாணவர்களுக்குக் கணிதத்தை எளிய முறையில் கற்றுக்கொடுப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது, புத்தகங்கள் எழுதுவது போன்றவற்றில் கவனம் செலுத்தினார். அதேநேரம் கணித ஜோதிடத்திலும் நிபுணராக விளங்கினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சகுந்தலாவிடம் எதிர்காலம் குறித்த ஜோதிட ஆலோசனையைக் கேட்க வரிசையில் காத்திருந்தனர்.

எளிமையான கணித புத்தகங்கள்

கணிதம் என்றாலே கசப்பு என நினைப்பவர்களுக்குக் கணிதத்தை எளிமையாக விளக்கும் புத்தங்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக ‘Book of Numbers’, ‘Mathability: Awaken the Math Genius in Your Child’, ‘In the Wonderland of Numbers’ உள்ளிட்ட பத்துப் புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கணிதம் மட்டுமல்லாது ‘Perfect Murder’ என்ற க்ரைம் நாவலையும் அவர் எழுதியுள்ளார். 83 வயதில் சிறுநீரக மற்றும் சுவாசப் பிரச்சிசனைகள் காரணமாகத் தன்னுடைய சொந்த ஊரில் 2013 ஏப்ரல் 3-ம் நாள் சகுந்தலாதேவி காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x