Published : 20 Jul 2020 09:52 AM
Last Updated : 20 Jul 2020 09:52 AM

கொங்கு தேன் 9- அடிமனசு ‘கிலி’

சிவகுமார்

‘‘என்னப்பிச்சி! வெள்ளாமையெல்லாம் எப்படி?’’

‘‘போன வருஷம் ஏதோ, பகவான் கண்ணு முழிச்சான் சாமி. பருத்தி அஞ்சாறு பொதி (பெரிய மூட்டை) சோளம் 10 மூட்டை, ராகி 10 மூட்டை ஆச்சு!’’

‘‘ சரி, இந்த வருஷம் எப்படி சமாளிச்சீங்க?’’

‘‘அதுதான் பாக்கறியே! பகவான் சுத்தமா கண்ண மூடிட்டான். மழை மாரி சுத்தமா ஏமாத்திடுச்சு. காடுகரை வெங்காஞ்சு கெடக்குது. எருதுகளுக்கு தீவனம் வாங்கிப் போட கட்டுபடியாகாம வித்தாச்சு. பொள்ளாச்சியிலிருந்து மலையாள தேசத்துக்கு படை படையா லாரில ஏத்திட்டுப் போறாங்க. அடிமாடுகள்ங்கற பேர்ல.. அங்க போனா அப்புறம் கசாப்புதான்!

சொரட்டைத் தலை ரங்கா புருஷன் சவுளி, தன்னாசி பையன் ராமன், செம்பட்டை, சாமியாடி பசங்க வேட்டைக்குப் போயி வங்கநரி, முயலு, காட்டுக் கோழி, பாம்பு, கீரியெல்லாம் புடிச்சிட்டு வந்தாங்க.

அவங்க பொழப்பலயும் பகவான் மண்ணைப் போட்டுட்டான். தாராபுரம் கட்டி காடுகள்ளே தேடி தொளசி செடி புடுங்கி கட்டுக்கட்டா கோயமுத்தூர் கொண்டு போயி வித்திட்டு வர்றாங்க.

ஊர்க்காரங்க அழுக்குத்துணிய எடுத்துட்டுப் போயி வெள்ளாவில வேகவச்சு, அழுக்கை போக்கி துவச்சுக் கொண்டார வண்ணார் எனத்துக்கும், குட்டையிலயும் தண்ணியில்ல, கெணத்து தண்ணியும் கீழ போயிருச்சு. போதாததுக்கு அட்டிக்கசப்பு (எட்டிக்கசப்பு) தண்ணி. வாயில ஊத்தினா தின்ன சோறு வெளியில வந்துரும்.

அந்த தண்ணியில சோப்பு வேற நொறைக்காது. அப்புறம் எப்படி தொவைக்கறது?

ஊரைவிட்டு ஒரம்பரைக்கு போற அளவுக்கு நிலைமை சரியில்லேங்கிறதனால, மூஞ்சி பூரா மசுறு மொளைச்சு முள்ளுக்காடானாலும், பெருசுக முடிவெட்டற ஆளுக்கு தகவலே கொடுக்கறதில்லே.

பொழப்பு நாறிப் போச்சு பேரா (பேரன்)...!’’

இதைச் சொல்றவரு நெத்தி வேர்வை நிலத்தில விழ பாடுபடற மசை ஆளுன்னு நினைச்சுக்காதீங்க.

ஏதோ அவங்கப்பன் ஆறுகவலைத் தோட்டத்து பள்ளத்தை ஒட்டி 10 ஏக்கரா வாங்கிப் போட்டுட்டு மண்டையப் போட்டதால, இந்த அப்பிச்சி நாட்டுசோக்காளி மாதிரி, திண்ணை மாறி திண்ணையில உட்கார்ந்து ஊர் நாயம் பேசி காலத்தை ஓட்டறவருதான்.

‘‘உனக்கு எத்தனை சம்சாரம் அப்பிச்சி?’’ன்னு கேட்டேன்.

‘‘தசரத மகாராசாவாட்டம் 3 பொண்டாட்டியத!’’ -அப்படின்னாரு

‘‘எப்படி?’’

‘‘ஒருத்தியக் கட்டினேன். அஞ்சாறு வருஷமாச்சு. புழு பூச்சி ஒண்ணும் தங்கலே. அவளுக்கு ஏதாவது கோளாறு இருக்கும். நமக்கு வாரிசு ஒண்ணு வேணுமேன்னு இன்னொருத்திய கண்ணாலம் பண்ணினேன். 10 வருஷமாயிருச்சு- புத்திரப் பாக்கியம் கிடைக்கலே!’’

‘‘....’’

‘‘எனக்கும் 60 வயசை நெருங்கிடுச்சு. எங்க அத்தை பையன்; எம்மேல கொள்ளை பாசம் உள்ளவரு 8-ம் பொட்டையா பெத்துப் போட்டுட்டாரு. ‘அஞ்சாறு பொண்ணு பொறந்தா அரசனும் ஆண்டியடா’ன்னு சொல்லுவாங்க..., இவரு பரதேசிக் கோலம் போடறதுக்கு முன்னாடி எனக்கு தன்னோட 8-வது பொண்ணை ஊரு உலகத்தை எதிர்த்திட்டு கண்ணாலம் பண்ணி வச்சாரு!’’

‘‘....!’’

‘‘ஏற்கெனவே ரெண்டு வாழாவெட்டியா இருக்கு. மூணாவதா கிழவனுக்கு பேத்தி வயசுப் பொண்ணை கட்டிக் குடுக்கறானே மசக்கவுண்டன்னு எங்க அத்தை மகனை எல்லாரும் சபிச்சாங்க. எப்போ, எங்கே, என்ன நடக்கும்னு அந்த ஆண்டவனுக்குத்தானே தெரியும்? பேத்தி வயசுப் பொண்ணு எனக்கு ஒரு குழந்தை பெத்துக் குடுத்தா. இரண்டாவது தடவை மாசமாக இருக்கறப்போ என்னோட ரெண்டாவது பொண்டாட்டியும் வாந்தியெடுத்தா. ‘நானா, நீயா’ன்னு போட்டி போட்டு நடு சம்சாரம் ஒரு பொட்டை புள்ளை பெத்தா - பேத்திக்காரி (பேத்தி வயசு மனைவி) ஆண் வாரிசு பெத்தா. அவன்தான் இன்னிக்கு பெரியவனாகி, கல்கத்தாவுக்கும் கோயமுத்தூருக்கும் லாரி ஓட்டிட்டு இருக்கறான்!’’னாரு.

மூணு சம்சார அப்பிச்சி

ஆக, கிராமப்புறத்து விவசாயிகளை பொறுத்த வரைக்கும், கடவுள், அதிர்ஷ்டம்னு சொல்லிட்டு குப்புறப் படுத்துக்காம தன்னோட கைகால்களை நம்பித்தான் வாழ்ந்திருக்காங்க.

விவசாயிகளுக்கு இப்படி எப்பவாச்சும் சாமி நெனப்பு வரும். மில்லுக்காரங்களுக்கு கடவுள் நம்பிக்கை ‘காமெடி’ பீஸ் மாதிரி.

கோயமுத்தூர்லருந்து சூலூர் வரைக்கும் ரோட்டு மேலயே ஏகப்பட்ட மில்கள் இருக்கு. ஜெயலட்சுமி மில்லு, வசந்தா மில், சரோஜா மில், கஸ்தூரி மில், கம்போடியா, கதிர் மில்லுன்னு ஆரம்பிச்சு பாப்பம்பட்டி பிரிவுல செல்வராஜா மில், கிழபுறம் சர்குணா, நரசிம்மா மில், சதர்ன் டெக்ஸ்டைல்ஸ்னு திரும்பின பக்கமெல்லாம் நாய்க்கமாரு புண்ணியத்துல மில்கள் காளான் மாதிரி மொளைச்சிருந்த காலம்.

கைநாட்டு போடத் தெரியாதவன், கட்டின வேட்டிக்கு மாத்து வேட்டி இல்லாதவனல்லாம், ‘அரியா’க் கூடை தூக்க ஆரம்பிச்சு, 6 மாசத்தில ‘பர்மனன்ட்’ ஆயிட்டா அப்புறம் ராஜாதான். மாசம் பொறந்தா சொளையாட்டம் சம்பளம் வந்திருது. அப்புறம் சாமி தயவெல்லாம் அவங்களுக்கு எதுக்கு?

இப்படிப்பட்ட சூழ்நிலையில, காடுகரைக்கு வேலைக்கு போற பொம்பளைக கைகால் ஓய்ஞ்சு குப்புற விழுந்து கிடப்பாங்க. சவுகரியமா திங்கக்கிழமை, வெள்ளிக்கிழமை சாமி கோயிலுக்கு போயி, தேங்காபழம் வச்சு கும்பிடறதுக்கு ஆள் தேடணும்.

அப்ப எனக்கு 10-லருந்து 12 வயசு இருக்கும்.கூட தச்சாசாரி பையன் அங்கப்பனை கூட்டிட்டு புள்ளாரு (பிள்ளையார்) கோயில் பக்கமா போனேன். சரி, வந்தது வந்திட்டோம். உள்ளே போயி புள்ளாரைக் கும்பிட்டு போலாம்னு யோசனை. அது கிராமத்து பழைய கோயில். அவ்வளவா யாரும் வரமாட்டாங்க. சாமி கும்பிட தேங்காபழம், கற்பூரமெல்லாம் வாங்க அங்கே கடையெல்லாம் கிடையாது. வெறுங்கையோட போனேன்.

அந்தப் பிள்ளையார் கோயில் இப்போது...

மரக்கதவைத் தள்ளுனேன். அது கொஞ்சம் மழைக்காலமா இருந்ததால ஓதம் அடிச்சி (ஈரப்பதம்) கதவுகள் விகிஞ்சிருந்தது (இறுக்கமாக) முக்கித் தள்ளுனதுக்கப்புறம்தான் திறந்திச்சு.

திடீர்னு ஒரு யோசனை. நம்ம உள்ளே போய் சாமி கும்பிடறப்போ, காத்தடிச்சு கதவு சாத்திட்டுதுன்னா வம்பா போயிரும்னு -கூட வந்த பையனைக் கூப்பிட்டு, ‘டேய்! நீ உள்ளே போ. கதவை சாத்து!’ன்னு சொன்னேன்.

உள்ளே போனவன் கதவைப் பட்டுன்னு சாத்திட்டான். ‘இப்ப இழு’ன்னேன். ‘அண்ணா! உள்ளே கொக்கியோ தாளோ எதுவுமில்லே’ன்னான்.

‘இல்ல நீ எப்படியாவது இழுத்து திற!’ன்னேன். ‘வழியே இல்லை!’ன்னான். இப்ப நான் திறந்து விட்டு, ‘டே, கிறுக்கா! இப்ப நாம உள்ளே போறோம். காத்தில கதவு சாத்திக்கப் போகுது. பத்திரமா நீ பார்த்துக்கன்னுட்டு, விநாயகர் சிலைய ஒரு சுத்து வந்தேன்.

300 ஆண்டுகள் பழமையான பிள்ளையார்

‘படார்’ன்னு ஒரு சத்தம்!. காத்து வந்து கதவை சாத்திடுச்சா? இல்லை, இந்த நாய்க்குட்டி (அங்கப்பன்) ஒதைச்சு கதவை சாத்திட்டு ஓநாய் மாதிரி பல்லிளிக்கறான்.

‘‘அட, மாங்கா மடையா! இப்படி ஓங்கி அடிச்சு சாத்திட்டியே எப்படிடா வெளியே போறது?’ன்னு ஒரு கிலியடிச்சுட்டுது.

பரபரப்பா கீழ்பக்கம் சைடில எல்லாம் விரலை விட்டு இழுத்துப் பாக்கறோம். ஒரு சின்ன வளையமோ, சுள்ளாணியோ இல்லை. இருந்தாக்கூட அதைப் பிடிச்சு இழுக்கலாம். 2 கதவும் மொழு மொழுன்னு இருக்கு.

நாங்க 5 அடிக்கு கீழே உயரம். சுவரு 12 அடி. அதுக்கு மேலை மொகுட்டு வளை. சட்டம், சீமை ஓடுகள் போட்டு மேஞ்சிருக்காங்க. சன்னல் எதுவுமில்லே. சத்தம் வெளியே போக வழியில்லே.

கார்த்தால 10 மணிக்கு போனவங்க 1 மணி வரைக்கும் ரோட்ல லேசா சத்தம் கேட்டாக்கூட, ‘‘அய்யா, அண்ணா, அக்கா நாங்க கோயிலுக்குள்ளே மாட்டிட்டோம். வந்து கதவைத் தொறந்து விடுங்கைய்யா!’ன்னு கத்துனோம்.

1 மணிக்கு தொண்டை கட்டிட்டுது. குடிக்கத் தண்ணியில்லே. உள்ளே புழுக்கம். பயம் ஒடம்பெல்லாம் வேர்த்து ஒழுகி ஆறாப் போகுது. கோபம் தீர்ற வரைக்கும் அவனை 4 சாத்து சாத்துனேன்.

நேரம் சாயங்காலம் 5 மணியை தாண்டுது. உள்ளே ‘கருகும்’முன்னு இருட்டாயிட்டு வருது. லைட் வசதி கிடையாது. கோயிலுக்கு விளக்கு வைக்க யாரும் வரமாட்டாங்க.

1974 ஜூலை 1, மணமக்களாக அதே பிள்ளையார் கோயிலில் தரிசனம்

ஓ! நாம இதுக்குள்ளயே செத்து அழுகிப் போகப் போறோம். எப்பவாவது யாராவது கோயில் பக்கம் வந்து திறந்தா அழுகிப் போன பொணமா கிடக்கப் போறோம்னு மனசு தீர்மானமா சொல்லுச்சு.

கும்மிருட்டு, காடுகள்ள களையெடுக்கப் போன பொம்பளைக 5,6 பேர் சிரிச்சுப் பேசிட்டு வர்ற சத்தம் கேட்டுது.

உயிர் போறதுக்கு முன்னாடி ஒரு தரம் கத்திருவோம்னு, ‘அக்கா, அக்கா - நாங்க கோயிலுக்குள்ளே மாட்டிட்டோம். வந்து கதவைத் தெறந்து விடுங்க!’ன்னு அழுகையும் ஆங்காரமுமா கத்திட்டு சுவத்துல சரிஞ்சோம்.

அடுத்த விநாடி கதவு தெறந்தது. ஏதோ ஒரு புண்ணியவதி காதில விழுந்து வந்து தெறந்து விட்டிருக்கா. செத்துப் பொழைச்சோம்பாங்க. சாவை நெருங்கிட்டு திரும்பி வந்த மாதிரி இருந்திச்சு.

விமானத்திலிருந்து - மேல்நாட்டு மருமகள் படக்காட்சி

இது நடந்து 30 வருஷம் ஆயிடுச்சு. ஆனாலும் விமானத்துல ஏறி உட்கார்ந்து கதவுகளை ‘ஏர் ஹோஸ்டஸ்’ (விமானப் பணிப்பெண்) சாத்தினா உடனே அந்த கிலி புடிச்சுக்கும். ‘மாட்டிட்டே. இனி தப்ப முடியாது!’ன்னு உள்ளே பயமுறுத்திட்டே இருக்கும். மேக்கப் ரூம்ல, ஓய்வெடுக்க, படுக்கறப்போ, மேக்கப்மேன் வெளிப்பக்கம் ரூம் தாள் போட்டா ஓடிப்போய் தடுத்திருவேன். போஃபியா மாதிரி. இந்தக் கிலிய அடிமனசிலிருந்து வெரட்ட 40 வருஷமாயிருச்சுன்னு சொன்னா நம்புவீங்களா?

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x