Last Updated : 18 Jul, 2020 02:12 PM

 

Published : 18 Jul 2020 02:12 PM
Last Updated : 18 Jul 2020 02:12 PM

இப்ப நான் முதலாளி!- வீட்டுப் பணிப்பெண் வாழ்க்கையை மாற்றிய கரோனா

கரோனா காலம் பலருக்குச் சம்பள வெட்டையும், வருமான இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது சம்பாதிப்பதற்கான காலமல்ல, இந்தப் பூமியில் நம் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் காலம் எனும் மனநிலையுடன் பலரும் அதைச் சமாளித்து வருகிறார்கள்.

ஆனால், சிறு அளவில்கூட சேமிப்பு இல்லாத, அன்றாட வருவாயை நம்பியிருந்தவர்களின் வாழ்க்கையை அடியோடு சிதைத்துவிட்டது கரோனா. குறிப்பாக, வீட்டு வேலை செய்யும் பெண்களை, கரோனா முடியும் வரையில் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டது காலம்.

ஒவ்வொரு பிரச்சினையும், அதற்கான தீர்வையும் கூடவே கொண்டு வருகிறது என்பதற்கு உதாரணம் மதுரை புரட்சித் தலைவர் காலனியைச் சேர்ந்த உம்மா சல்மா. வீட்டு வேலைக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த இவர், தற்போது வீதி வீதியாகச் சென்று டீ விற்கிறார். சில நேரங்களில் 5 வயது மகனையும் அழைத்துக் கொண்டு டீ வியாபாரம் செய்கிறார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த அவரிடம் பேசினோம். "என்னோட வீட்டுக்காரர் பிரிஞ்சு போயிட்டாருண்ணே. அம்மா, தங்கச்சியோட ஒண்ணா இருக்கறேன். வீட்டு வேலைக்குப் போய், மாசம் 4,500 ரூவா சம்பாதிச்சிக்கிட்டு இருந்தேன். 'கரோனா முடிஞ்ச பிறகு வேலைக்கு வந்தாப் போதும்'னு சொல்லிட்டாங்க. சரி, நிலைமை சரியாகிடும்னு ஒரு மாசம் வீட்டுக்குள்ளேயே இருந்தேன். சமாளிக்க முடியல. பசியில சாகுறதவிட, கரோனாவுல சாகுறதே மேல்னு தோணுச்சி.

பக்கத்துக் கடையில ஏதாவது பொருள் கேட்டா, 'இதுக்கு மேல கடன் தர முடியாதும்மா'ன்னு சொல்லிட்டாங்க. ஒரு நாள் என் பையன் டீ கேட்டு அழுதான். 'டேய், அம்மா கடையில போய் பால் கேட்டா அந்தண்ணன் தர மாட்டாரு. நீ வேணா கேளு. சின்னப் புள்ளைன்னு இரக்கப்பட்டுக் கடன் தந்தா, டீ போட்டுத்தாரேன்'னு சொன்னேன். பையனும் ஆசையாப் போனான். 'இங்க பாருடா, இவ்வளவு நாளும் உங்கம்மா வேலைக்குப் போச்சு, கடன் தந்தேன். சும்மா இருந்தா எப்படிடா கடனை அடைக்கும்? தர முடியாது போ'ன்னு சொல்லிட்டாரு. ஏற்கெனவே இருந்த துயரத்துல இந்தச் சம்பவம் என்னைய ரொம்ப பாதிச்சிடுச்சி.

என்ன பண்றதுன்னு யோசிச்சப்ப, 'உங்க வாப்பா இருந்தா இப்படி ஆயிருக்குமா?'ன்னு அம்மா அழுதாங்க. அப்பதான், எங்கப்பா டிவிஎஸ் 50-ல போயி டீ யாவாரம் செஞ்சது ஞாபகத்துக்கு வந்துச்சி. நல்ல வேளையா அப்பா இறந்த பிறகும் அவரோட டிவிஎஸ் 50 வண்டியையும், டீ கேனையும் விற்காம வெச்சிருந்தோம். என் பையன் பிறந்தப்ப அம்மா ஒரு வெள்ளிக்கொலுசு போட்டு விட்டாங்க. அதை வித்துப் பாலும் டீத்தூளும் வாங்கி டீ போட்டு யாவாரத்துக்குக் கிளம்புனேன்.

ஆரம்பத்துல கொஞ்ச நாள் ஒரு கேன் டீ விற்கிறதுக்கே ரொம்ப சிரமமாத்தான் இருந்துச்சி. கொஞ்ச நாள்ல, மதுரை தமுக்கம் மைதானத்துல 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல காலையில 6 மணியில இருந்து சாயந்திரம் 5 மணி வரைக்கும் தொடர்ந்து கட்டிட வேலை நடக்கிறத கவனிச்சேன். தயக்கத்தோட அங்க டீ கொண்டு போனேன். 'நல்லாயிருக்குதும்மா... மதியமும், சாயந்திரமும் நீயே கொண்டு வந்திடு'ன்னு சொன்னாங்க. உழைப்பும், தரமும் இருந்தா எந்தத் தொழிலும் கை குடுக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

காலையில 6 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்புவேன். 8 மணிக்குள்ள 30 டீ வித்துட்டு வீட்டுக்கு வந்து, பையனுக்குச் சாப்பாடு கொடுப்பேன். பிறகு மதியம் ஒரு ரவுண்ட், அப்புறம் சாயந்திரம். போகிற வழியில கலெக்டர் ஆபீஸ் பக்கமும் டீ விற்பேன். ரோட்டோரம் வயசானவங்க படுத்திருந்தா, நானே இறங்கி ஒரு டீயை ஊத்திக் கையில கொடுத்துட்டுப் போயிடுவேன். ஏன்னா, பசின்னா என்னன்னு எனக்கும் தெரியும். என் புள்ள ஒரு வாய் டீக்காக எவ்வளவு அழுதிருப்பான்? அந்தப் பெரியவங்க டீயைக் கையில வாங்குனதும், 'தாயி... நீ நல்லாயிருப்பம்மா... உனக்கு ஒரு குறையையும் அந்த ஆண்டவன் கொடுக்க மாட்டாம்மா...' ன்னு மனசார வாழ்த்துவாங்க. அதுலேயே எனக்கு மனசு நெறஞ்சிடும்.

செஞ்ச வேலைக்குச் சம்பளம் கேட்டாலே, 'முதலாளியம்மா கோவிச்சுக்குவாங்களோ'ன்னு பயந்து பயந்து வாழ்ந்துகிட்டு இருந்த என்னைய, நம்மைக் காட்டிலும் ஏழைகளுக்கு உதவுற நிலைமைக்கு அல்லா உயர்த்தியிருக்காரேன்னு சந்தோஷப்படுறேன்" என்றார் உம்மா சல்மா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x