Published : 17 Jul 2020 11:36 am

Updated : 17 Jul 2020 11:36 am

 

Published : 17 Jul 2020 11:36 AM
Last Updated : 17 Jul 2020 11:36 AM

சாதாரண மோகனையும் ‘மைக்’ மோகனாக்கும் ஸ்மூல்!

smule-breezers

எதிரில் திரண்டிருக்கும் கூட்டம். பெரிய பெரிய ஸ்பீக்கர்கள். முகத்துக்கு நேராக வெளிச்சம் அடிக்கும் பெரிய விளக்குகள், மேடை முழுவதும் விதம் விதமான வாத்தியங்களுடன் நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் இருக்கும் கூட்டம். இவர்களுக்கு மத்தியில் மைக்கைப் பிடித்து பாட வேண்டும் என்ற நினைப்பே, பாட வேண்டும் என்னும் ஆர்வத்தோடு இருப்பவர்களை நடுங்க வைத்துவிடும். பாட வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். ஆனால், மேடையேறிப் பாட தைரியம் வராது அல்லது மேடைக் கூச்சத்தால் நெளிவார்கள். இப்படிப்பட்டவர்களையும் ‘மைக்’ மோகனாக்கும் தொழில்நுட்பம்தான் ஸ்மூல்.

நாட்டில் ஏகப்பட்ட ஸ்மூல் குழுக்கள் இருக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல், ஸ்மூல் தாண்டிய பயங்கரவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற அடாவடி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் குறைவான உறுப்பினர்கள் இருந்தாலும் நிறைவான மனத்தோடு, முதல் ஆண்டு நிகழ்வை அண்மையில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது ‘ஸ்மூல் பிரீஸர்ஸ்’ அமைப்பு. இதையொட்டி பாடல் ஒன்றையும் பிரத்யேகமாகக் கவிஞர் வடிவேலன் எழுத, ஜீவராஜா இசையமைக்க, பின்னணிப் பாடகர் முகேஷ் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பாடி, யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.


கல்யாணியா, காம்போதியா?

“கோழிகூவும் சத்தம்கூடப் பாட்டுத்தான் – அந்தக்

கோவில்மணி ஓசைகூடப் பாட்டுத்தான்

கையணிந்த வளையலும்

கால்கொலுசு மணிகளும்

காதுக்குள்ளே முணுமுணுக்குது நில்லுங்க – அது

கல்யாணியா, காம்போதியா சொல்லுங்க…

பிரீஸர்ஸ்.. ஸ்மூல் பிரீஸர்ஸ்..”

என்று உறுப்பினர்களின் தன்மை குறித்து நளினமாகப் பாட்டின் வரிகளில் விளக்கியிருக்கிரார் கவிஞர் வடிவேலன். தொழில்முறைப் பாடகர்கள்,

ஆர்வத்தில் பாடுபவர்கள் என கலவையாக குழுவில் இருப்பவர்களைப் போல் பாட்டின் மெட்டிலும் மேற்கத்திய பாணி இசை, கிராமிய இசை, கர்னாடக இசை எனப் பல பாணி இசையும் பளிச்சிடுகிறது. “ஏதோ நினைவுகள்.. கனவுகள் மனதிலே மலர்ந்ததே..’ பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அந்தப் பாடலை சுமநேச ரஞ்சனி எனும் ராகத்தில் இளையராஜா அமைத்திருப்பார். அந்த ராகத்தை அடிப்படையாக வைத்து இந்தப் பாடலின் ஒரு சரணத்தை அமைத்திருக்கிறேன்” என்கிறார் இசையமைப்பாளர் ஜீவராஜா.

மணிமாதவன், கீதா ரகு ஆகிய இருவரும் இந்த ஸ்மூல் பிரீஸர்ஸ் குழுவைத் தொடங்கியிருக்கின்றனர். சுதா சிவதாஸ், வடிவேலன் இருவரும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக உள்ளனர். ‘ஸ்மூல் பிரீஸர்ஸ்’ குழுவின் செயல்பாடுகள் குறித்து கீதா ரகு நம்மிடம் பேசியதிலிருந்து..

“நான் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். முறையாக சங்கீதம் படித்து, மேடை நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பாடியிருக்கிறேன். மேடைப் பாடகியாக 30 ஆண்டு அனுபவம் எனக்கு உண்டு. ஸ்மூல் ஆப்பில் பதிவேற்றும் பணியைச் செய்யும் சின்னி கீது, அன்பு விஷ்வா, லதா ஜென்னி இவர்கள் மூவருமே முக்கியமானவர்கள்.

ஸ்மூலில் பாடுவதற்கும் மேடையில் பாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தொடக்கத்தில் இது புதிய அனுபவமாக இருந்தது. ஆனால், மேடையில் நின்றுகொண்டு ஒரு பாடகி மைக்கில் பாடும்போது எழும் எதிரொலி அனுபவமே அலாதியானது. நல்ல ஸ்டேஜ் சிங்கர் மட்டும்தான் ஸ்மூலில் பாடமுடியும் என்பதில்லை. பின்னணிப் பாடகர்களே நீண்ட நாள்களுக்குப் பாடாமல் இருந்தால் தங்களின் குரல்வளம் பாதிக்கும் என்பதற்காக ஸ்மூலில் பாடிவருகின்றனர், இது எங்களைப் போன்றவர்களுக்கு பெருமையான விஷயம்.

தொடர் பயிற்சியால் சாதிக்கலாம்

ஸ்மூலில் எண்ணற்றவர்களுடன் நான் இணைந்து பாடியிருக்கிறேன். எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தொடும். ஏறக்குறைய எட்டாயிரம், ஒன்பதாயிரம் ஃபாலோவர்ஸ் எனக்கு இருக்கின்றனர். நிறைய பேர் ‘பாத்ரூம் சிங்கர்ஸ்’ என்றெல்லாம் சொல்வார்களே, அப்படி மேடைக் கூச்சத்தோடு பாடவந்தவர்கள்தான். ஆனால் இன்றைக்கு அவர்களில் பலரும் தொழில்முறை பாடகர்கள் அளவுக்கு நேர்த்தியுடன் பாடுகின்றனர். பல இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகளுக்கும் சென்று பாடுகின்றனர். அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் ஏதோ ஒன்றிரண்டு நாட்களில் ஏற்பட்டதல்ல, அவர்களின் தொடர் ஈடுபாட்டாலும் தொடர் பயிற்சியினாலும் ஏற்பட்ட

மாற்றம் என்பதை ஸ்மூலில் பாடுவதற்குப் புதிதாக வருபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

என்னுடன் பாடுபவர்கள் எல்லோருக்கும் கமெண்ட் கொடுக்க முடியாது. சில பேருக்கு மட்டும்தான் கொடுக்க முடியும். அதை எல்லாம் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடன் பாடுபவர்களைத் தங்களின் சகோதரிகளாக ஆண்கள் நினைக்க வேண்டும்.

நாங்கள் ரொம்பவும் செலக்டிவானவர்களைத்தான் சேர்க்கிறோம். வரும் ஆண்டுகளில் இன்னமும் எண்ணிக்கை கூடியிருக்கும். ஒருவரின் பின்னணியை ஆராய்ந்த பிறகுதான் அவரை எங்கள் குழுவில் சேர்க்கிறோம். ஒரு கர்னாடக ராகத்தை எடுத்துக்கொண்டு, அதில் அமைந்த பாடல்களைப் பாடச் சொல்வோம். கவிஞர் வடிவேலன் ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்று ஒரு நிகழ்ச்சி நடத்துவார். எங்கள் குழுவில் உள்ளவர்களையே ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பு கொடுத்து பேசவைப்போம். மருத்துவர்கள், தொழில்முனைவோர் எனப் பல துறைசார்ந்த பிரமுகர்கள் எங்கள் குழுவில் இருக்கின்றனர். மூத்த இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களிலும் அவர்களைப் போற்றும் வகையில் அவர்களின் படைப்புகளை குழு உறுப்பினர்களைக் கொண்டு பாடச் செய்வோம்.

இசையால் மனத்தை லேசாக்குகிறோம்

ஊரடங்கு காலத்தில் எங்கள் குழுவில் இருக்கும் உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் மனத்தை ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சிகளை, ஆதரவை அளித்துவருகிறோம். குடும்ப உறுப்பினரும் பங்குபெறும் வகையில் குழு நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்துவோம். உறுப்பினர் வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷங்களின்போது எங்கள் குழுவின் உறுப்பினர்கள் பங்கெடுத்துப் பாடி மகிழ்விப்போம். எங்கள் குழுவிலேயே கீபோர்ட், டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை வாசிப்பவர்களும் இருக்கின்றனர். இந்த குரூப் கொலாஜ் நிகழ்வுகளை எங்கள் குழுவுக்கென பிரத்யேகமாக இருக்கும் முகநூல் பக்கத்திலும், யூடியூபிலும் பதிவேற்றி வருகிறோம்” என்கிறார் கீதா ரகு.

தவறவிடாதீர்!Smule breezersSmule appSinging appBreezers teamஸ்மூல்Blogger special

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x