Last Updated : 16 Jul, 2020 10:37 AM

 

Published : 16 Jul 2020 10:37 AM
Last Updated : 16 Jul 2020 10:37 AM

தடம் பதித்த பெண்: புதைப்படிவங்களின் காதலி மேரி ஆன்னிங்

பழங்கால பூமி, பழங்கால உயிரினங்கள் போன்றவற்றைப் பற்றி இன்று நாம் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் புதைப்படிவங்கள்தாம் (Fossils). இந்தப் புதைப்படிவங்களைச் சேகரித்து அளித்ததில் இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர் மேரி ஆன்னிங்குக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இச்தியோசாரஸ் என்ற உயிரினத்தின் முழுமையான எலும்புப் படிவத்தை 12 வயதில் ஆன்னிங் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு புதைப்படிவங்களைச் சேகரிப்பதற்கும் தொல்பொருள் ஆய்வுக்கும் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தார்.

1799-ம் ஆண்டு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ஆன்னிங். தச்சு வேலை செய்துவந்த இவரின் அப்பா, கடற்கரைகளில் கிடைக்கும் புதைப்படிவங்களைச் சேகரித்து விற்பனை செய்து வந்தார். 15 மாதக் குழந்தையாக இருந்தபோது ஆன்னிங்கைப் பக்கத்து வீட்டுப் பெண் தூக்கி வைத்துக்கொண்டு, மரத்தடியில் நின்று இரு பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் மூன்று பெண்களும் இறந்துவிட்டார்கள். தப்பிப் பிழைத்த ஆன்னிங்கின் உடல் வலிமையடைந்ததாகச் சொல்வார்கள்.

வீட்டில் நிறைய குழந்தைகள் இருந்ததால், ஆன்னிங் முறையான கல்வி பெறும் வாய்ப்பை இழந்தார். அப்பா, அண்ணனுடன் புதைப்படிவங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்பா இறந்தவுடன் அதுவரை நன்றாகச் சாப்பிட முடியாமல் இருந்ததற்கும் பட்டினிக்குமான வித்தியாசத்தை ஆன்னிங் உணர்ந்தார். அதனால், பொதுவாக யாரும் செல்லாத இடங்களுக்கு எல்லாம் வெற்றுக் கால்களுடன் சென்று புதைப்படிவங்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். அப்படித்தான் 5.2 மீட்டர் நீளமுள்ள இச்தியோசாரஸ் புதைப்படிவத்தைக் கண்டுபிடித்தார். அதை நல்ல விலைக்கு விற்கவும் செய்தார். அதை வாங்கியவர் லண்டனில் காட்சிப்படுத்தினார்.

அதுவரை அறிந்திராத ஓர் உயிரினத்தின் புதைப்படிவம் விஞ்ஞான உலகத்தை ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. தேடலை அதிகரித்தது. பூமியில் தோன்றும் உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போகக்கூடிய சாத்தியங்களை எடுத்துச் சொன்னது. பூமி மற்றும் பூமியில் வாழும் உயிரினங்கள் குறித்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது. இப்படி ஆன்னிங்கின் கண்டுபிடிப்பால் தோன்றிய கேள்விகள், பின்னர் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு உந்துசக்தியாக விளங்கின.

ஆன்னிங்கின் தேடுதல் தொடர்ந்தது. அறிவியல் ஆய்வுகளைப் படிக்கக் கற்றுக்கொண்டார். பூமி மற்றும் உயிரினங்களின் வரலாறு போன்றவற்றை ஓரளவு அறிந்துகொண்டார். உடற்கூறியலையும் புரிந்துகொண்டார். 1823-ம் ஆண்டு முழு ப்ளேசியோசாரஸ் புதைப்படிவத்தைக் கண்டுபிடித்தார். 1828-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல் டெரோசாரஸ் புதைப்படிவம் ஆன்னிங்கால் கண்டுபிடிக்கப்பட்டது. தான் கண்டுபிடித்த புதைப்படிவங்களுக்கு விளக்க வரைபடங்களைத் தயாரித்தார். இவற்றைப் பல விஞ்ஞானிகள் பாராட்டினர்.

1826-ம் ஆண்டு தன்னுடைய வருமானத்தைக் கொண்டு புதைப்படிவ அருங்காட்சியகத்துடன் கூடிய வீட்டைக் கட்டினார். உலகின் பல பகுதிகளிலும் இருந்து புதைப்படிவச் சேகரிப்பாளர்கள் வந்தனர். பல்வேறு அருங்காட்சியகங்களுக்குப் புதைப்படிவங்களை விற்றார் ஆன்னிங்.

அந்தக் கால இங்கிலாந்தில் பாலினப் பாகுபாடு அதிகம் இருந்தது. அதனால் ஆன்னிங்கின் கண்டுபிடிப்புகளுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமோ பணமோ கிடைக்கவேயில்லை. புவியியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில் வெகு அரிதாகவே ஆன்னிங்கின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நேச்சுரல் ஹிஸ்ட்ரி இதழில் ஆன்னிங்கின் ஒரே ஒரு கடிதம் மட்டும் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் புதிய சுறா இனம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆன்னிங்கின் அந்தக் கடிதம் மூலமே இதே சுறாவை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் கண்டுபிடித்தார் என்ற விஷயம் தெரியவந்திருக்கிறது.

1830-ம் ஆண்டு மீண்டும் பொருளாதாரச் சரிவை அடைந்தார் ஆன்னிங். அவரது நண்பரும் இங்கிலாந்தின் பிரபல புவியியலாளருமான வில்லியம் பக்லாண்ட், அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆன்னிங்கால் புதைப்படிவங்களைச் சேகரிக்க இயலவில்லை. 1847-ம் ஆண்டு 47 வயதில் இறந்து போனார். சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு மேரி ஆன்னிங் அறிவியலுக்குச் செய்த பங்களிப்பை விஞ்ஞான உலகம் புரிந்துகொண்டு, அவருக்கான அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. ஆன்னிங் மறைந்து 163 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் அறிவியல் வளர்ச்சிக்குப் பாடுபட்ட 10 பெண்கள் பட்டியலில் மேரி ஆன்னிங்கின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x