Published : 12 Jul 2020 07:42 PM
Last Updated : 12 Jul 2020 07:42 PM

அனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும் - அரசு மருத்துவரும்!

ஒரு குளிர் பிரதேசத்திலுள்ள மாவட்டத்தில் தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் ஈடுபட்டதால் என்னை தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவமனையிலிருந்து, உங்கள் சேவை அந்த மலை பிரதேசத்தில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு தேவை என்று பணியிடமாற்றம் செய்திருந்தார்கள். அது மிகவும் பரபரப்பாக இயங்கும் அரசு தலைமை மருத்துவமனை. அப்பொழுதுதான் கரோனா தன்னுடைய கோரமுகத்தை காட்டத் தொடங்கி இருந்தது. ஒரு நாள் மாலை வேளையில் நான் காய்ச்சல் பகுதியில் பணியில் இருந்தேன்.

ஒரு ஆறு மணி அளவில் ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக வந்து கதவருகே நிற்கிறது. அதிலிருந்து ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனைப் படுக்கையில் கிடத்தி தூக்கிக் கொண்டு மூன்று பேர் வருகின்றனர். அவர்கள் அந்த சிறுவனின் அம்மா அப்பா மற்றும் அந்த அவசர ஊர்தி ஓட்டுநர். ஆம்புலன்ஸ் புது மாதிரி இருக்கிறது 108 போல இல்லையே என்ன என்று கேட்கிறேன். அவர்கள் அங்கே உள்ள ஒரு ஆகச்சிறந்த தேநீர் கம்பெனியின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஆகவே அந்த தேயிலைத் தோட்டத்திற்குச் சொந்தமான மருத்துவமனை ஆம்புலன்ஸ் என்று தெரிவிக்கின்றனர். அந்தப் பையனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. உடனடியாக செவிலியர் என்ன தொந்தரவு எதற்காக இங்கே அழைத்து வந்தீர்கள் என்று கேட்டுக்கொண்டே அவருக்கு நாடித்துடிப்பு ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தார்.

மேலும் நான் பக்கத்து அறைக்குச் சென்று கவச உடை அணிந்து இருந்ததால் மேலும் ஒரு கையுறை அணிந்து கொண்டு என்ன பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே வருகிறேன். அவர்கள் எனக்குப் புரியாத மொழியில் பேசுகிறார்கள். என்ன செவிலியரே என்ன மொழி பேசுகிறார்கள் என்ன பிரச்சினை என்று கேட்கிறேன். அவர் காய்ச்சல் அதிகம் உள்ளது என்றும், இவர்களுடன் வந்துள்ள அவசர ஊர்தி ஓட்டுநர் கூறினார். ஹிந்தி பேசுகிறார்கள், இவரை அழைத்து வந்த அவசர ஊர்தி ஓட்டுநருக்கு ஹிந்தி தெரியும் என்று கூறுகிறார்.

நான் அவரை அழையுங்கள் என்று சுகாதாரப் பணியாளர் அவர்களிடம் கூறுகிறேன்.அவர் வெளியே சென்று பார்த்துவிட்டு அவசர ஊர்தியையும் காணவில்லை, அதன் ஒட்டுநரையும் காணவில்லை என்று பதில் கூறுகிறார். அவர் இவர்களை இறக்கிவிட்டுவிட்டு என்ன அவசர வேலையோ தெரியவில்லை அங்கிருந்து மாயமாகிவிட்டார். என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டு, உடனே சிஸ்டர் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா, அருகில் இருந்த பயிற்சி மருத்துவரிடம் உங்களுக்கு இந்தி தெரியுமா, சுகாதாரப் பணியாளரிடம் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா என்று கேட்கிறேன். அனைவரும் கைவிரித்த நிலையில் நான் சற்று சுதாரித்துக் கொண்டு செய்கையில் அந்த தம்பதியிடம் என்ன பிரச்சினை என்று கேட்கிறேன். அவர்கள் வயிற்றில் கைவைத்துக் காட்டுகிறார்கள்.

அந்தச் சிறுவன் கதறி அழுது கொண்டிருக்கிறான். நான் அவனைத் தொட்டுப் பார்க்கிறேன் அவனுக்கு அளவுகடந்த காய்ச்சல். இவ்வளவு காய்ச்சல் இருக்கிறதென்றால் நிச்சயம் ஏதோ பிரச்சினை பெரிதாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கே அந்த தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் அவனுக்கு டைபாய்டு காய்ச்சலாக இருக்கலாம் என்று மருத்துவம் பார்த்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் வைத்தியத்தில் குணமாகவில்லை, காய்ச்சல் அதிகமுள்ளது என்று இங்கே மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். நான் வயிற்றில் கை வைத்துப் பார்க்கலாம் என்று கையை எடுத்துச் செல்கிறேன் என் கை போவதற்கு முன்பு அந்தப் பையன் கதறுகிறான். எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவன் வயிறு சீராக இல்லை, வயிறு அழுவதால் இப்படி இருக்கிறதா அல்லது நோயின் தன்மையால் இப்படி இருக்கிறதா என்று பிரித்தறிய முடியவில்லை.

உடனடியாக காலம் தாழ்த்த வேண்டாம் என்று , கையில் நரம்பைக் கண்டறிந்து ஊசி போட்டு குளுகோஸ் செலுத்த சொல்லுகிறேன், உடனடியாக ரத்தப்பரிசோதனை எடுக்க சொல்கிறேன். வயிற்றுக்கு சிடி ஸ்கேன் செய்தாக வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன். அவனுக்கு கொரோனா நோய்க்கான சளி இருமல் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இல்லாததால், வயிற்றுவலி மட்டுமே இருப்பதால் குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்க சொல்கிறேன். அவனுடைய அப்பா அம்மா இருவரிடமும் தம்பிக்கு எதோ வயிற்றில் பிரச்சினை இருக்கிறது அதனால் நான் அதற்கு தேவையான மருந்துகளை கொடுத்து பார்க்கிறேன், பரிசோதனைகள் செய்கிறேன், வலி குறையவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை வரலாம் என்று சைகையில் சொல்கிறேன். அவர்கள் இருவரும் பயந்து அழுகிறார்கள். எனக்கு அவர்களை எப்படி சமாதானம் செய்வது என்று புரியவில்லை.

உடனடியாக அவர் குழந்தைகள் நலப் பிரிவிற்கு மாற்றப்படுகிறார். அவருக்கு அங்கு ரத்தப் பரிசோதனை முடிவு கொடுக்கப்படுகிறது. அவருக்கு எக்ஸ்ரே சிடி ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்று எனக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அங்கே சிடி ஸ்கேன் மையம் உள்ளது. ஆனால் அதில் சிடி ஸ்கேன் டெக்னீஷியன் மட்டுமே உள்ளார். அங்கே சிடி ஸ்கேன் முடிவு கொடுக்க மருத்துவர்கள் யாரும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. ஆனால், நான் பணியாற்றிய பெரிய மருத்துவமனையில் பல சிடி ஸ்கேன் பார்த்து உள்ளதால் அதனை வைத்து ஏதாவது தெரிகிறதா என்று பார்க்கலாம் என்று சிடி ஸ்கேன் அறைக்குச் செல்கிறேன். அங்கே இரவு 9 மணி அளவில் சிடி ஸ்கேன் டெக்னீஷியன் புன்முறுவலோடு நான் நீங்களாதான் சார் இருப்பீங்கன்னு நினைத்துக் கொண்டே இருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள் சார் என்றார்.

நான் சென்று ஒரு ஐந்து நிமிட ஆராய்ச்சிக்குப் பிறகு குடல்வால் வெடித்து இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அதனை நாம் ஒரு ஸ்கேன் மருத்துவரிடம் கேட்டுவிடலாம் என்று எனது நண்பர்கள் (நான் பட்ட மேற்படிப்பு படித்த அந்த மருத்துவமனையில் நிறைய துறை சார்ந்த பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் பழக்கம் உண்டு) இருவருக்கு காணொளியாகப் பதிவு செய்து அனுப்பி வைத்தேன். அந்தக் காணொளியை அவர்களில் ஒருவர் உடனடியாக பார்த்து விட்டார். அவர் உடனடியாக தொடர்பு கொண்டு சிறுவனைப் பற்றி கேட்டறிந்து, இது நீங்கள் நினைப்பது போன்று குடல்வால் வெடிப்பாகவும் இருக்கலாம் அல்லது சிறு குடலில் ஓட்டை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார். நானும் டைபாய்டு போன்ற காய்ச்சலாக இருந்தால் குடல் ஓட்டை விழும் வாய்ப்பு இருக்கிறது, ஆனால் மூன்று நாட்கள் தானே வலி இருக்கிறது என்பதை யோசித்துக் கொண்டே, குடல்வால்தான் வெடித்திருக்கும் அதனால் உடனடியாக அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டே அந்த சிறுவனின் உடல்நிலையை மறு பரிசோதனை செய்ய குழந்தைகள் நலப் பகுதிக்குச் செல்கிறேன்.

அங்கே அவன் நோயின் தன்மையால் பயத்துடன் இருக்கிறான். சிறுவனின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறேன். செவிலியர் உடனடியாக அவனுக்கு நாடித்துடிப்பு குறையவே இல்லை அப்படியே அதிகமாகவே இருக்கிறது, நான் அனைத்து மருந்துகளும் கொடுத்துவிட்டேன் என்று கூறுகிறார். நான் அவரிடம் இந்த சிறுவனுக்கு உடனடியாக அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறுகிறேன்.நான் அவர்களுக்கு தமிழ் தெரியாது நமக்கு ஹிந்தி தெரியாது என்ன செய்வது யாரை அழைப்பது எப்படி புரிய வைப்பது என யோசித்துக்கொண்டே, எனக்கு தெரிந்த ஓரிரு மருத்துவர்களுக்கு அலைபேசியில் அழைக்கிறேன், இதுபோல் ஒரு நோயாளிக்கு ஹிந்தியில் அறுவை சிகிச்சை குறித்து விளக்க வேண்டும் உதவ முடியுமா என்று, அவர்களும் இந்தி தெரியாது என்று கூறுகின்றார்கள். நான் எவ்வளவோ சைகையில் சொல்ல முயற்சிக்கிறேன். அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்று ஆனால் அவர்களுக்கு புரியவில்லை. நானும் ஒரு 30 நிமிடம் போராடிவிட்டேன். அவர்களுக்கு புரிந்த பாடில்லை, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வெளியே வந்தேன்.

அங்கே ஆஜானுபாகுவாக எங்களது செக்யூரிட்டி வந்து கொண்டிருந்தார். அவர் ராணுவத்திலிருந்து பணி ஓய்வு பெற்று வந்தவர் .ஆகவே, நான் அவரிடம் ஐயா உங்களுக்கு ஹிந்தி தெரியுமா என்று கேட்டேன். அவர் உடனடியாக தெரியும் என்றார். எனக்கு அப்பொழுது தான் உயிர் வந்தது போல் இருந்தது அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று அவரிடம் அந்த சிறுவனின் நிலைமை, எடுக்கப்பட்ட பரிசோதனைகள், பரிசோதனை முடிவுகள், நான் என்ன நினைக்கிறேன் அவருக்கு என்ன அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, அதனுடைய பின் விளைவுகள் என்னென்ன, அதற்கு அவர்களுடைய சம்மதம் ஆகியவற்றை விளக்கமாக எடுத்துக்கூறி அதனை அந்த தம்பதிகளிடம் விளக்கிக்கூற சொல்கிறேன். அவரும் மிகவும் லாவகமாக அவரிடம் இந்தி மொழியில் நான் சொன்னதை விளக்கிக் கொண்டிருக்கிறார். நான் அவர் விளக்குவதை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன். திடீரென்று அந்த சிறுவனின் அம்மா சரிந்து கீழே விழுகிறார்.

உடனடியாக அவரை தூக்கி ஒரு படுக்கையில் கிடத்தி அவருடைய கால் பகுதி மேலேயும் தலைப்பகுதி கீழேயும் இருக்கும் வண்ணம் கட்டிலை மாற்றி வைத்து முதலுதவி செய்கிறேன். அவர் விழித்து எழுகிறார். பாவம் அந்த சிறுவனுக்கு பத்து வயதுதான் மேலும் அவர்களுக்கு ஒரே குழந்தை ஆகவே அந்த குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மிகவும் கவலையில் அந்தத் தாய் சாப்பிடாமல், தண்ணீர் கூட அருந்தாமல் அந்த சிறுவனுடன் இரண்டு நாட்களாக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆகவே அவருக்கு இந்த அவசர அறுவை சிகிச்சை செய்தி இடியாக இருந்திருக்கலாம். உடனே சரிந்து விழுந்து விட்டார். அவரை ஆசுவாசப்படுத்தி எழுப்பி விட்டு, அவரது கணவரிடம் அந்த செக்யுரிட்டி மிகவும் கனிவுடன் உங்களுடைய சம்மதத்தை மருத்துவர் கேட்கிறார், உடனடியாக அவசர அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அது சிறுவனின் உயிரை பறிக்கும் அளவிற்கு கூட கொண்டு சென்றுவிடும் என்று மருத்துவர் செல்வதாக கூறுகிறார். அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டாலும் குழந்தைக்கு உயிர் போக நேரிடலாம் என்பதையும் சொல்கிறார். எங்களது குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்பதுபோல் அவர்கள் இருவரும் கைகூப்பி என்னையும், செக்யூரிட்டியையும் பார்க்கிறார்கள்.

நான் அவர்களின் சம்மதம் கிடைத்த உடன், உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கிற்கும், மயக்க மருந்து நிபுணருக்கும் அலைபேசி வாயிலாக தகவல் கொடுக்கிறேன். மேலும் குழந்தைகள் நல பகுதியிலுள்ள செவிலியரிடம் கையெழுத்து வாங்க சொல்கிறேன். அவனை அறுவை அரங்கிற்கு தயார்படுத்த ஏற்பாடுகள் செய்ய சொல்கிறேன். அவரும் உடனடியாக செய்கிறேன் என்று பரபரப்பாக அனைத்து வேலைகளையும் செய்கிறார். இதையெல்லாம் செய்து முடிக்க மணி பதினொன்று ஆகிறது. அறுவை சிகிச்சை அரங்கில் அவசர அறுவை சிகிச்சை வரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே மயக்க மருந்து மருத்துவர் அறுவை சிகிச்சைகள் முடிந்தவுடன் சிறுவனின் அறுவை சிகிச்சையை செய்து விடலாம் என்று கூறுகிறார்.

மயக்க மருந்து நிபுணர் அவர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. உடனடியாக அவசர அறுவை சிகிச்சை பிரிவு தயாராகிறது. 2 மணி அளவில் அந்த சிறுவனை அறுவை சிகிச்சை அரங்கினுள் அழைத்துச் செல்கிறோம். அந்தச் சிறுவன் உடனடியாக தயார் படுத்தப் படுகிறான். மயக்கவியல் நிபுணர் அவனுக்கு என்ன மயக்க மருந்து கொடுக்கலாம் என்று விவாதிக்கிறார். அவனுக்கு முதுகில் ஊசி வழியாக மருந்து கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கிறார். நானும் அந்த சிறுவனுக்கு முழு மயக்கம் தேவை இல்லை இது குடல்வால் வெடிப்பு போன்று தான் இருக்கிறது ஆகவே தொப்புளுக்கு கீழ் பகுதியில் தான் அறுவை சிகிச்சை தேவைப்படும் எனவே நீங்கள் அந்த அளவு மயக்கம் கொடுத்தால் போதும் என்று அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். அவரும் அந்த சிறுவனை படுக்க வைத்து முதுகில் ஊசி வழியாக மருந்து செலுத்த தயாராகிறார். ஆனால் அந்த சிறுவன் ஒத்துழைக்க மறுக்கிறார். அவனுக்கு தமிழ் தெரியவில்லை. அவனுக்கு புரியும்படி ஓரிரு ஹிந்தி வார்த்தைகளை கூறி மயக்க மருந்து நிபுணர் படுக்கச் சொல்கிறார்.

பிறகு செவிலியரின் முயற்சியால் அவன் படுக்கிறான், ஊசி செலுத்தப்படுகிறது. நான் அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தப்படும் ஆடைகளை அணிந்து கொண்டு மேலே பாதுகாப்பு கவசத்தை(PPE) அணிந்து கொண்டு அறுவை சிகிச்சைக்கு தயார் ஆகிறேன், மேலும் பயிற்சி மருத்துவரை யும் அறுவை சிகிச்சைக்கு தயாராக சொல்லி ஆரம்பிக்கிறேன். அறுவை சிகிச்சையில் அவனுக்கு குடல்வால் வெடித்து குடல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு உள்ளது. மிகவும் சிரமப்பட்டு குடல்வாலை கண்டறிந்தேன். அதனை நன்றாக பிடித்து அகற்றுகிறேன். வயிற்றுப் பகுதியை நன்றாக கழுவி விட்டு, அதில் ஒரு சிறு குழாய்(drain) வைத்துவிட்டு வயிற்று பகுதியை தையல் போட்டு மூடி அவசர சிகிச்சை முடித்துவிட்டு, அவனுடைய உடல் நிலை, நாடித்துடிப்பு, காய்ச்சல் அளவு, ரத்த அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதித்து அவனை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றும்படி செவிலியரிடம் அறிவுரை கூறிவிட்டு மயக்குணர் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி சொல்லி விட்டு வெளியே வருகிறேன். நான் வெளியே வந்தவுடன் அந்த சிறுவனின் தந்தை எனது காலில் விழுகிறார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது ஏன் இப்படி செய்கிறார் என்று. அவரை தூக்கி விட்டு எனக்குத்தெரிந்த ஹிந்தியில் அச்சா அச்சா ஆபரேஷன் முடிந்தது என்று கூறிவிட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு செல்கிறேன். அங்கு அந்த சிறுவனை அழைத்து வருகிறார்கள்.

அவசர சிகிச்சை பிரிவில் அவனுக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் மானிடர்கள் ஆகியவற்றை பொறுத்த சொல்லி பார்த்துவிட்டு, அங்கிருக்கும் செவிலியர் இடமும் மருத்துவரிடமும் அவனுடைய நிலையை விளக்கி விட்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அவனுக்கு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் செய்ய வேண்டும் என்பதை விரிவாக விளக்கி விட்டு எனது அறைக்கு வந்து விட்டேன். வந்து குளித்துவிட்டு படுக்கையில் படுக்கும் பொழுது எனது அலைபேசியை பார்க்கிறேன் மணி ஐந்தை தாண்டியிருக்கிறது. அப்படியே சாய்ந்து விட்டேன்.

திடீரென்று அலைபேசி மணி ஒலிக்கிறது. அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அலைபேசியில் பேசுகிறார். நேற்று இரவு நீங்கள் அறுவை சிகிச்சை செய்த அந்த சிறுவன் எவ்வாறு இருக்கிறான் என்று கேட்கிறார். நான் மணியை பார்க்கிறேன் மணி 9 ஆகியிருந்தது.(நான் இரவு அவரிடம் இது போல் ஒரு சிறுவன் அறுவை சிகிச்சைக்காக வந்திருக்கிறார் நான் அறுவை சிகிச்சைக்கு தயார் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அவரிடம் சொல்லி இருந்தேன்.மேலும் சிறுவன் என்பதால் குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவரிடம் அனுப்பி விடலாமா என்று கேட்கிறார். எனது பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தினலும், குழந்தை நல அறுவை சிகிச்சை செய்திருப்பதால் நான் இங்கேயே அறுவை சிகிச்சை செய்து விடுகிறேன் என்று கூறி இருந்தேன்).அதனை விசாரிக்க அவர் அழைத்திருக்கிறார்.

நான் சுதாரித்துக்கொண்டு ஐயா நான் இன்னும் படுக்கையிலிருந்து எழ வில்லை இப்பொழுது உங்கள் அலைபேசி மணி தான் என்னை எழுப்பி உள்ளது நான் பார்த்துவிட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் அய்யா என்று கூறிவிட்டு, படுக்கையைவிட்டு எழுந்து குளித்து முடித்து வேகவேகமாக பரபரப்புடன் அரசு மருத்துவமனையை அடைகிறேன். நேராக தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்கிறேன். அங்கே அந்த சிறுவன் முகத்தில் சிரிப்பு தெரிகிறது. எனக்கு உள்ளுக்குள் ஆனந்தம். ஆனால் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளில் நாம் உடனே ஆனந்தப்பட்டு விட முடியாது. ஏனென்றால் சில நாட்கள் கழித்துதான் சில அபாய அறிகுறிகள் தெரியவரும். ஆனால் அவனுடைய நாடித்துடிப்பு ரத்த அழுத்தம் அனைத்தும் சீராக இருந்தது. மேலும் அவனுக்கு வலி நன்றாக குறைந்து இருந்தது.

அங்கிருக்கும் மருத்துவர் அவன் நன்றாக இருக்கிறான், நான் அவனிடம் பேசினேன் இப்பொழுது வலி எல்லாம் இல்லை என்று சொல்கிறான் என்று கூறினார். நான் அவரிடம் அவர்கள் தாய் தந்தையிடம், அவனுக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் முடிந்துவிட்டது, இன்னும் ஒரு ஐந்து நாட்கள் இங்கேயே தங்கி மருந்துகள் செலுத்த வேண்டும், அதற்குப் பிறகு அவன் பூரண குணமாகி விடுவான் என்று கூற சொன்னேன். அவரும் அவர்களிடம் எடுத்துக் கூறினார். அவனுடைய தாயும் தந்தையும் என்னை கைகூப்பி கும்பிட்டு நன்றி செலுத்தினார்கள். நான் எனது கடமையைச் செய்தேன் அவ்வளவே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். மற்ற நோயாளிகளைப் பார்த்துவிட்டு தலைமை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவிற்கு வந்துவிட்டேன். அந்த நோயாளி சிறுவன் சிறிது சிறிதாக பழையநிலைக்கு வந்துவிட்டான். இரண்டாவது நாள் நடக்க ஆரம்பித்து விட்டான். மூன்றாவது நாள் அவனுக்கு வாய்வழியாக ஆகாரம் கொடுக்கப்பட்டது. அவன் ஆகாரம் எடுத்துக்கொண்ட பிறகு அவனுக்கு வைத்திருந்த சிறு குழாய்(drain) எடுத்து விட்டேன். நன்றாக நடந்தான், சாப்பிட்டான் ,மலம் வெளியேற்றினான்.

ஐந்து நாட்கள் கழித்து அவனை பரிசோதித்து விட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று என்னுடன் சேர்ந்து கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்ட குழந்தைகள் நல மருத்துவரிடம் தெரிவித்தேன். அவர்கள் தாய் தந்தையிடம் இதனை சைகையில் தெரிய படுத்தினேன். அவர்கள் இருவரும் கண்களால் கூறிய நன்றி இன்னும் என் கண் முன்னால் நீங்காமல் நிழலாடுகிறது. ஏதோ ஒரு சிறுவனின் வாழ்க்கையை மாற்றி எழுதி விட்டோம் என உள்ளூர நினைத்துக் கொண்டே அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவிற்கு பயணிக்கிறேன், அடுத்த நோயாளியின் வலியைப் போக்க....

தமிழ் மருத்துவன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x