Last Updated : 12 Jul, 2020 02:57 PM

 

Published : 12 Jul 2020 02:57 PM
Last Updated : 12 Jul 2020 02:57 PM

அஜித்துக்கு அகத்தியன் எழுப்பிய ‘காதல் கோட்டை’! - 24 ஆண்டுகளாகியும் அசைக்கமுடியாத கோட்டை! 

கருப்பு வெள்ளைப் படங்களின் காலம் தொடங்கி, தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் படங்களும் கதையமைப்புகளும் முக்கோணக் காதல் கதை எனும் அடைமொழியுடன் சொல்லப்பட்டன. அதன் பிறகு காதல் படங்கள் வரிசையாக வெளிவந்தாலும், படத்தின் தலைப்பிலேயே ‘காதல்’ எனும் வார்த்தை வந்தது அரிதாகத்தான் இருந்தது. 90-களின் மத்தியில் வந்த அந்தப் படம் வந்த பிறகு, ‘காதல்’ சேர்த்து வைத்துக் கொண்ட டைட்டில்களும் படங்களும் வரிசைகட்டி வந்தன. அந்தக் காதல், இந்தக் காதல், அப்படியான காதல், இப்படியான காதல் என்றெல்லாம் வகைவகையாகப் படங்கள் வந்தன. அதற்கெல்லாம் ‘பச்சைக்கொடி’ காட்டிய படமாக வந்ததுதான் ‘காதல் கோட்டை’.

இந்தப் படம் வெளியான முதல் நாள். ‘இந்தப் படத்துக்கு நான் வரலேப்பா’ என்றான். அவனே தொடர்ந்தான். ‘ஏம்பா, ஹீரோவும் ஹீரோயினும் பாத்துக்கவே மாட்டாங்களாம். பாக்காமலேயே காதலாம். இந்தப் படம் நல்லாருக்கும்னு எனக்குத் தோணலை. படம் ஓடவே ஓடாது பாரேன்’ என்றான். அன்று இரவுக்காட்சி அவனைத் தவிர, வேறு நண்பர்களுடன் சென்று படம் பார்த்துதும் படம் முடிந்து, டீக்கடை ஒன்றில், விடியவிடிய இந்தப் படம் பற்றிப் பிரமித்தபடி பேசி விவாதித்ததெல்லாம் இன்றைக்கும் நினைவிருக்கிறது.

பார்க்காத நட்பு கூட இன்றைக்கு சாத்தியமில்லை. அப்படியிருக்க, பார்க்காமலேயே காதல் எப்படிச் சாத்தியம்? இயல்பான விஷயத்தை மிக மிக இயல்பாகவே சொல்லுவது ஒருவகை. கற்பனையான விஷயத்தை மிக மிக இயல்பாகச் சொல்லுவது இன்னொரு வகை. அப்படி, கற்பனையான, கற்பனைக்கும் எட்டாததொரு காதலை, மிகவும் பாந்தமாகவும் இயல்பாகவும் நம்பும்படியாகவும் சொன்னதில்தான் இருக்கிறது ‘காதல் கோட்டை’ வெற்றி!

சிவசக்தி மூவி மேக்கர்ஸ் என்கிற தயாரிப்புக் கம்பெனி, பிரபலம் அடைந்தது ‘காதல் கோட்டை’ படத்துக்குப் பிறகுதான். தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் என்கிற பெயர், திரையுலக வட்டாரத்திலும் பத்திரிகை உலகிலும் சினிமா ரசிகர்களுக்கு நடுவேயும் உச்சரிக்கப்பட்டது இந்தப் படத்துக்குப் பின்னர்தான். இன்றைக்கு இயக்காவிட்டாலும் கூட, இயக்குநர் அகத்தியனைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கும் ‘காதல் கோட்டை’தான் காரணம்.

அதுமட்டுமா? ‘இதயம்’ படத்துக்குப் பிறகு ஹீராவுக்கு அப்படியொரு வெற்றி கிடைத்ததும் இந்தக் கோட்டையில்தான். பாந்தமான நடிகை, பக்காவான நடிகை என்று தேவயானியை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற படமும் இதுதான். ‘வெள்ளரிக்கா’ ராம்ஜி என்றே ஒரு நடிகர் அறியப்பட்டதும் அதன் பின்னர் ஒரு ரவுண்டு வந்ததும் இந்தப் படத்தினால்தான்! வெரைட்டி வெரைட்டியாக பாடல்களைப் போட்டு ஹிட்டாக்கிவிடுவார் என்று தேவாவை இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் சென்றவிதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது ‘காதல் கோட்டை’. எல்லாவற்றுக்கும் மேலாக, தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிற அஜித்துக்கு, ‘ஆசை’க்குப் பிறகு பிரமாண்ட வெற்றியைக் கொடுத்து, அவருக்கென ‘கோட்டை’யைக் கொடுத்ததும் இந்த ‘காதல் கோட்டை’தான்!

பார்க்காமலேயே காதல். ’நாயகனும் நாயகியும் பாக்காமலேயே காதலிக்கிறாங்க. படம் முடியும்போதுதான் பாத்துக்கறாங்க. சேந்துடுறாங்க’ என்கிற ஒன்லைனைக் கேட்டால், தலையே சுற்றிவிடும் ரசிகர்களுக்கு. ஆனால் திரைக்கதையில்தான் அனைத்தையும் சாத்தியப்படுத்தியிருப்பார் அகத்தியன்.

ஊட்டிதான் நாயகியின் ஊர். அக்கா, மாமாவுடன் இருக்கிறார். வேலை தேடுவதுதான் வேலை. சென்னையில் இருந்து ஊட்டி செல்லும் ரயிலில் நாயகி. அப்போது அவளின் சர்டிபிகேட் கொண்ட பை திருட்டுப் போகிறது. அனாதையான நாயகனுக்கு சென்னைதான் சொந்த ஊர். சென்னையில் இருந்து ஜெய்ப்பூருக்கு வேலைக்காக ரயிலேறுகிறான். அப்போது, நாயகியின் சர்டிபிகேட் பை, அவனிடம் கிடைக்கிறது. ஜெய்ப்பூருக்குச் சென்றதும் சர்டிபிகேட்டில் உள்ள ஊட்டி முகவரிக்கு சர்டிபிக்கேட்டை அனுப்பிவைக்க, அதில் நெகிழ்ந்து போன நாயகி நன்றிக் கடிதம் போடுகிறாள். இப்படியாகவே கடித்தொடர்பு மூலம் வளரும் நட்பு, ஒருகட்டத்தில் காதலாகிறது.
ஜெய்ப்பூரில் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள பெண் காதலிக்கிறாள். அதைப் புறக்கணிக்கிறான் நாயகன். அதேபோல், வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியம்மாவும் காதலைச் சொல்லுகிறாள். அதையும் புறக்கணிக்கிறான்.

இந்த சமயத்தில், தபால்துறை ஸ்டிரைக்கால், கடிதப்போக்குவரத்து தடைப்படுகிறது. அருகில் உள்ள எஸ்.டி.டி. பூத் நம்பரில் பேசுவதற்கும் வழியில்லாமல் போகிறது.
பார்க்காமலேயே காதலிக்கும் விஷயத்தை அக்காவிடம் சொல்ல, அக்கா தன் கணவரிடம் சொல்ல, அவளைக் கண்டிக்கிறார்கள். அதேசமயம் நல்ல பணக்கார மாப்பிள்ளையையும் பார்க்கிறார்கள்.

இங்கே, ஜெய்ப்பூரில் முதலாளியம்மாவின் டார்ச்சரால், வேலையை விடவேண்டிய சூழல் நாயகனுக்கு. சென்னைக்கு வந்துவிடுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில், ஆட்டோ டிரைவர் நண்பனாகிறார். ஆட்டோ ஓட்டும் வேலையில் ஈடுபடுகிறார்.

பணக்கார மாப்பிள்ளையிடம் காதல் விஷயத்தைச் சொல்ல, அவரும் அக்காவும் மாமாவுமாகச் சேர்ந்து கடைசி வாய்ப்பு கொடுக்கிறார்கள். ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு வந்துவிட்ட காதலனைத் தேடி, சென்னைக்கு வருகிறார். கொட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது மழை. அப்போது, நாயகனின் ஆட்டோவில் ஏறும் நிலை ஏற்படுகிறது. நாயகனின் ஆட்டோவில் சவாரி செய்தபடி, நாயகனைத் தேடி அலைகிறாள் நாயகி. ஒவ்வொரு இடமாகச் சென்று, தோல்வியாகவே இருக்க, கடைசியாக, ஊருக்குச் செல்ல ரயிலேறுகிறாள். நாயகனும் காதலனுமானவன் அவளை ரயிலேற்றிவிடுகிறான். அப்போது இருவரும் யார் யார் என அறிந்தார்களா, இல்லையா என்பதை, நம் விரல் நகம் கடித்து, படபடக்க, நம் இதயத்தின் லப்டப் எகிற... சொல்லியிருப்பார் இயக்குநர் அகத்தியன்.

சர்டிபிகேட் அனுப்புகிற விஷயத்திலும் பதிலளிக்கிற விஷயத்திலும் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் மலரும். ஜெய்ப்பூரில் பக்கத்து வீட்டுப் பெண் காதலிப்பது முதலாளியம்மா காதலிப்பது என்பதில் நாயகனின் நேர்மையையும் உண்மையாய் நாயகியைக் காதலிப்பதையும் உணர்த்துவார் இயக்குநர். ஊட்டியில் நாயகி, ஜெய்ப்பூரில் நாயகன் என்பதை, ஒவ்வொரு காட்சியிலும் காட்சி வாயிலாகவே உணர்த்திக்கொண்டே இருப்பதும் அவர்கள் பேசுவதற்கும் தகவல் பரிமாறுவதற்கும் தடையாக இருக்கிற ஸ்டிரைக் விஷயத்தை கடைசி வரையும் நேரடியாக அல்லாமல், பூடகமாகவே யார் மூலமாகவோ சொல்லிக்கொண்டே வருவதும் அழகான திரைக்கதையாக்கப்பட்டிருக்கும்.

சிறு குழந்தையாகப் பிரிந்துவிட்ட அம்மாவும் பையனும் வளர்ந்து ஒருகட்டத்தில் பார்க்கும்போது, அங்கே அவர்களுக்குள் பாசம் பூக்கும், தொண்டை அடைக்கும். பிஜிஎம் தாய்ப்பாசம் சொல்லும். அதேபோல், காதலனும் காதலியும் பார்க்கிற போது, ஒரு உணர்வு தட்டியெழுப்பும். ஏதோ சொல்லும். என்னவோ உணர்த்தும். ஆனால் அந்த செண்டிமெண்டுகளையெல்லாம் உடைத்து நொறுக்கியிருப்பார் அகத்தியன். இருவரும் சென்னையில் பார்த்துக் கொள்கிற சந்தர்ப்பங்களிலெல்லாம் முட்டிக்கொள்வார்கள். மோதிக்கொள்வார்கள். திட்டிக்கொள்வார்கள். ‘அவன் நல்லவன் இல்ல’ என்று அபிப்ராயப்படுவாள் நாயகி. இதுவும் சினிமாவுக்குப் புதுசுதான்.
நடுவே, மணிவண்ணனின் கேரக்டர். அதைக் கொண்டு இந்தக் காலக் காதல். கரண் கேரக்டர். அவரைக் கொண்டு இந்தக் காலக் காதல். ஸ்டைலீஷ் நண்பன் கரணுடன் ஒட்டாத ஹீரோ, ஆட்டோ டிரைவர் நண்பனுடன் நெருங்கிப் பழகுதல் என எல்லாமே மிக அழகாகக் ‘கேரக்டரைஸேஷன்’ செய்யப்பட்டிருக்கும்.

நாயகன் அஜித்தின் பெயர் சூர்யா. நாயகி தேவயானி கமலி. அஜித்தின் ஆட்டோவில் தேவயானி ஏறியதும் கூடவே க்ளைமாக்ஸ் பரபரப்பும் ஏறிக்கொள்ளும். அநேகமாக, படத்தின் க்ளைமாக்ஸ் இருபது நிமிடங்களுக்கு மேலாக இருக்கிற மாதிரியான படம் அமைந்ததும் இதுவாகத்தான் இருக்கும்.

அஜித், தேவயானி, ஹீரா, கரண், மணிவண்ணன், பாண்டு, ராஜீவ், ராஜா, சபீதா ஆனந்த், தலைவாசல் விஜய், இந்து என மிகக் குறைந்த கேரக்டர்களை வைத்துக் கொண்டு அழகான கதையும் தெளிவான திரைக்கதையும் அளந்தெடுத்த வசனங்களுமாக மிக ஷார்ப்பாக படைத்திருப்பார் அகத்தியன்.

தேவாவின் இசையில் எல்லாப்பாடல்களும் தேவாமிர்தம். டைட்டில் பாடலும் சூப்பர். ‘வெள்ளரிக்கா’, ‘சிவப்பு லோலாக்கு’, ‘நலம் நலமறிய ஆவல்’, கவலைப்படாதே சகோதரா’ என்று எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. தங்கர்பச்சானின் ஒளிப்பதிவு கவிதை.

அகத்தியன் ‘மதுமதி’யை எடுத்துவிட்டு படம் பண்ணாமல் இருக்கிற சூழலில், சிவசக்தி பாண்டியனிடம் ‘காதல் கோட்டை’ கதையைச் சொன்னார். ‘என்னது பாக்காமலே காதலா?’ என்று மிரண்டுவிட்டார் தயாரிப்பாளர். ‘அதெல்லாம் வேணாம். ‘மதுமதி’ மாதிரியே படம் பண்ணிக் கொடுங்க’’ என்றார். ’வான்மதி’ பண்ணினார். கிட்டத்தட்ட, ‘மதுமதி’ மாதிரியே படம் என்று கேட்ட தயாரிப்பாளருக்கு ‘மதுமதி’ கதையையே ‘வான்மதி’யாகச் செய்து கொடுத்தார். ஆனால், ‘மதுமதி’ அடைந்த வெற்றியைவிட, ‘வான்மதி’ பத்து மடங்கு வெற்றியைச் சந்தித்தது.

இதன் பின்னர், ‘அந்தக் கதையைச் சொல்லுங்க கேப்போம்’ என்று கேட்டு, ஓகே செய்து, அதே அஜித்தைக் கொண்டு அகத்தியன் எழுப்பியதுதான் ‘காதல் கோட்டை’. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் நூறுநாள், இருநூறு நாள் என ஓடியது. மிகப்பெரிய வசூலைக்குவித்தது. தேசிய விருது பெற்றார் அகத்தியன். முக்கியமாக, டிரெண்ட் செட்டர் படமானது. இதையடுத்து, ‘காதல் காதல்..’ என்று காதலை டைட்டிலுக்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படங்கள் வந்தன.

டைட்டிலில் காதல் வார்த்தை சேர்க்காமல், கதையில் புதிதுபுதிதாகக் காதல் சொல்லப்பட்ட படங்கள் வந்தன. இவை அனைத்தும் அகத்தியன் எனும் படைப்பாளிக்குக் கிடைத்த வெற்றி.

இதில் சோகம்... இந்தப் படத்துக்குப் பிறகு, அஜித் மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விட்டது. தேவயானியும் மிகப்பெரிய ரவுண்டு வந்தார். எல்லோருக்கும் அடுத்தடுத்த ஏற்றங்கள் கிடைத்தன. அகத்தியன் எனும் அற்புத இயக்குநர் மட்டும், அவருக்கான உயரத்தைத் தொடவில்லை.

அந்த க்ளைமாக்ஸ் மழை கூட நிஜம். சினிமா மழையில்லை. சென்னையில் அப்போது பெய்த செம மழையை, சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவைத்திருந்தார் அகத்தியன். முக்கியமாக, அந்த தாமரை ஓவியம் போட்ட ஸ்வெட்டரையும்தான்!


1996ம் ஆண்டு, ஜூலை 12ம் தேதி வெளியானது ‘காதல் கோட்டை’. இன்றுடன் படம் வெளியாகி 24 ஆண்டுகளாகின்றன. இன்னும் எத்தனை காதல் படங்கள் வந்தாலும், அகத்தியனின் ‘காதல் கோட்டை’யை எவராலும் அசைக்கக்கூட முடியாது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x