

மதுரையில் ‘அம்மா கிச்சன்’ உணவகத்தில் ‘கரோனா’ தொற்று நோய் பாதித்து சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மூன்று வேளையும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
உலகையே அச்சுறுத்தும் ‘கரோனா’ தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவரவர்களுக்கு வரக்கூடிய தொந்தரவுகள் அடிப்படையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை வழங்குகின்றனர்.
மருந்து மாத்திரைகளுடன் சேர்த்து நோயாளிகள் மீது காட்டும் அன்பும் அக்கறையும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளே அவர்களை அந்த நோயிலிருந்து சீக்கிரம் மீண்டு வர உதவுகிறது.
அதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ‘கரோனா’ நோயாளிகளுக்கு மருந்துவ நிபுணர்கள் குழு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை பரிந்துரை செய்துள்ளனர். அந்த உணவுகளை அரசு மருத்துவமனையில் முழுமையாக தயாரித்து வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதனால், மதுரையில் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாட்டால் அதிமுக அம்மா பேரவை, அவரது அம்மா சேரிடபிள் ட்ரஸ்ட் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளைகளுக்கும் சத்துமிகுந்த உணவகளை தயாரித்து வழங்குகின்றனர்.
காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் செயல்படும் இந்த அம்மா கிச்சனில் இரவு பகலாக தொழிலாளர்கள் ‘கரோனா’ நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலையில் வழங்கப்படும் உணவில் கேசரி, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தப்பம், இட்லி, வடை, 2 முட்டை ,மிளகுப் பால், இரண்டு வகை சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படுகிறது.
மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, மோர்,சப்பாத்தி,பருப்பு, இரண்டு வகை காய்கறிகள்,2 முட்டை, அப்பளம்,ஊறுகாய் ஆகிய வழங்கப்படுகிறது.
இரவு உணவில் இட்லி,தோசை, கிச்சடி, சப்பாத்தி,இரண்டு வகை சட்னி, சாம்பார்,குருமா மற்றும் மிளகு பால் ஆகியவை வழங்கப்படுகிறது. காலை 11 மணிக்கு பாசிப்பருப்பு மற்றும் காய்கறி சூப்களும், மாலை 4 மணிக்கு சுக்கு இஞ்சி கலந்த தேனீர் மற்றும் கொண்டகடலை வழங்கப்படுகிறது.
நாள் தோறும் வழங்கப்படும் இந்த உணவை மருத்துவக் குழு ஆய்வு செய்து இது போன்ற உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பாராட்டுச் சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு தயாரிக்கப்படும் இந்த உணவுகள் அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் மருத்துவமனை, விவசாயக் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் தொற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் குறித்த நேரத்தில் சுடச்சுட இந்த உணவுகள் வாழை இலையால் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தப் பணிகளை தினமும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரடியாக கண்காணித்து, அவரே சாப்பிட்டு ருசி பார்த்து அனுப்பி வைக்கிறார். சில நாட்களில் அவரும் சேர்ந்து தொழிலாளர்களுடன் சமைக்கவும் செய்கிறார்.
நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளுடன் ஆரோக்கியமான உணவும் முக்கியம் என்பதாலேயே அவர்களுக்காக தயாரிக்கப்படும் இந்த உணவில் இவ்வளவு அக்கறை காட்டுகிறோம் என்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘அம்மா உணவகங்கள் பெயரில் ஏற்கெனவே ஏழைகளின் பசியைப் போக்கி வருகிறோம். மற்ற மாநிலங்கள் பின்பற்றும்வகையில் இந்த திட்டம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது
அம்மா கிச்சன் என்ற பெயரில் வீட்டு சமையலை போன்று சத்தான ஆரோக்கியமான உணவுகளை ‘கரோனா’ நோயாளிகளுக்காக தயாரித்து வழங்குகிறோம்.
இந்தப் பணியில் 200 மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
பணிக்கு வருபவர்கள் வரும்பொழுது கைகளை நன்றாக கிருமிநாசினியால் சுத்த படுத்தி கொள்ள வேண்டும் என்றும், தலையில் உறை அணியவேண்டும், கைகளில் கை உறை அணியவேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், உணவு கூடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் அடிக்கடி கிருமிநாசினியால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு அது பின்பற்றப்படவும் செய்கிறது. இதை நாங்கள் நோயாளிகளுக்கு செய்யும் அறப்பணியாக கருதுகிறோம், ’’ என்றார்.