Published : 10 Jul 2020 10:54 AM
Last Updated : 10 Jul 2020 10:54 AM

‘கொங்கு’ தேன் 6 -‘காலெறங்கி’ மழை

ஓடி வெளையாடற வயசில ஊர்வெளிப் பக்கம் போயி வேடிக்கை பார்ப்பேன். ஊருக்கு வடமேற்கே தூரத்தில, பழனிமலையாட்டமா ஒரு மலை தெரியும். அதுக்கு குருடிமலைன்னு பேராம். அதையொட்டி நீலகிரி மலைகள், ரயில் வண்டியாட்டமா நீளமா இருக்கும்.

எங்க சுடுகாட்டுத் தோட்டத்து கிணத்து மேட்டில நின்னு பார்த்தா தெக்கே நீலக்கலர்ல, ஏத்த இறக்கமா ஒரு மலைத் தொடர். அதுக்குப் பேரு வால்பாறை, டாப்ஸ்லிப் மலைகள்னு பின்னாடி தெரிஞ்சுகிட்டேன்.

எப்ப பார்த்தாலும் இந்த மலைகளுக்கு தொப்பி வச்சா மாதிரி மேகங்கள் இருந்துகிட்டே இருக்கும். தெக்கால, சாம்பக்கலர்ல பஞ்சு பஞ்சா மேகங்கள் கிழக்கு நோக்கி போயிகிட்டே இருக்கும். எல்லாம் சரி, நம்ம தலைக்கு மேல வானத்தில ஏன் கருக்கலே நிக்க மாட்டேங்குதுன்னு வாத்தியாருகிட்ட கேட்டேன்.

தண்டபாணி! மேற்குத் தொடர்ச்சி மலைங்கிறது தெக்கேருந்து அரை வட்டமா மலைகள் தொடர்ச்சியா நீலகிரி மலை வரைக்கும் இருக்கு. இதில பாலக்காட்டு பக்கத்துல மட்டும் ஒரு இடைவெளி இருக்கு.

அதுக்குப்பேரு பாலக்காட்டு கணவாய்.

நமக்கு மேற்கே அரபிக்கடல் இருக்கு. அதிலருந்து வர்ற காத்து பாலக்காட்டு கணவாய் வழிய பூந்து கிழக்கே செட்டிபாளையம், பல்லடம், பொங்கலூர், காங்கயம் வரைக்கும் எப்பவும் வீசீட்டே இருக்கும்.

மே மாசம் அடிக்கிற காத்தில வேட்டியே இடுப்பிலிருந்து அவுந்து காத்தில போயிடும். சூலூர்லருந்து மேக்கே போகணும்னா- சைக்கிளை சீட்ல உட்கார்ந்து ஓட்ட முடியாது. எழுந்து நின்னுதான் பெடலை முதிக்கோணும்.

இதே காத்து, மானத்தில கருக்கல் கட்டினா ஒரேயடியா கிழக்கே அடிச்சிட்டு போயிடுது. அதனாலதான் நம்ம ஊரு மேட்டாங்காடா இருக்கு. வானம்பாத்த பூமியா இருக்கு.

அப்ப எப்பத்தான் மழை பேயும்னா, ஆடி மாசம், ஐப்பசி மாசம்தான் நம்ம ஊருக்கு மழை பெய்யும்.

ஆனா வடக்கே பேயற மழையும் - காத்துல தெக்கே அடிச்சிட்டு வந்து நம்மூர்லயும் திடீர்னு மழை பெய்யறதுண்டு.

எங்க ஊருக்கு வடக்கால அவினாசி மேடுன்னு ஒண்ணு இருக்கு. அதுக்குப்பின்னாடி, பொடிப் பொடியா மரங்கள் தெரியும். அதுக்கு மேல மங்கலா தெரியறது நீலகிரி மலைத் தொடர்.

குருடி மலை

மலைப்பக்கம் கருக்கல் (கருமேகம்) திரண்டா அது அப்படியே ‘கருகும்’னு ஆகி, அணைக்கட்டில இருக்கிற தண்ணிய மதகு வழி தெறக்கறப்போ, எப்படி பீச்சியடிச்சு வெளிய வருதோ அப்படி, கருமேகந் தெரண்டு, கனம் தாங்காம ‘பொளேர்’ன்னு கீழ எறங்கும். அதாவது அந்த ஏரியாவுல 10 மைல் சுத்தளவுக்கு மழை பெய்யுதுன்னு கணக்கு.

எங்க ஊர்லருந்து பார்த்தா.. ‘காலெறங்கி மழை’ பெய்யறதுன்னு சொல்லுவாங்க.

மேகங்கள் அடர்த்தியா இருந்தா, வடக்க இருந்து காத்து தெக்கு நோக்கி அந்த மேகங்களை விரட்டி விடும்.

‘திமுதிமு’ன்னு அடுக்கடுக்கா கருமேகம் தெக்கே வந்து 3 மணிச்சூரியனை மூடி இருட்டாக்கீரும்.

இந்த சமயத்தில அவினாசி மேட்டுல பேயற மழையை காத்து நம்ம பக்கம் கொண்டாறும். அய்யோ! அந்த மழைக்காத்து வாசனையை நீங்கல்லாம் அனுபவிக்கோணுமய்யா.

சித்த நேரத்துக்குள்ளே, மேமாசித்தூத்தல் விழும். படபடன்னு ஆரம்பிச்சு விரைசலா விழும்போது, காஞ்சு போன மண்ணிலருருந்து ஒரு வாசனை வரும் பாருங்க. அடடா!

காத்து அடிக்கிற வேகத்தில குடைபுடிச்சா, பிச்சிட்டு போயிடும். ஊட்டுக்கு ஓடறதுக்குள்ளே மழைச்சாரல், ‘பொளேர் பொளேர்’னு கன்னத்துல அறையும்.

எங்களுக்கு தண்ணிப்பஞ்சம் எப்பவும் இருக்கிறதனால, ஓடிப்போய் தாவாரத்தில ‘L’ (எல்) ஷேப்பில நீளமா கட்டி விட்டிருக்கிற தகரத்துல வந்து விழுகற ஓட்டுத்தண்ணிய, ‘அண்டா’க்கள்ளே புடிச்சு வச்சு ஒரு மாசத்துக்கு சமையல் பண்ணுவோம். மழைத்தண்ணிலே பருப்பு நல்லா வேகுமாம்.

மழை இப்ப வெரசலா பேயுது. வாசல்பூரா தண்ணி ரொம்பிட்டுது. அதுக்கு மேலே விழுகற மழைத்துளிகள் பாராசூட்ல இருந்து ஆளுக ‘ச்சங்கு’ன்னு குதிக்கற மாதிரி விழுந்துகிட்டே இருக்கு.

வாய்க்காலில் குதியாட்டம்

திடீர்னு பனிக்கட்டியாட்டமா கல்லு மானத்திலிருந்து உழுகும். அதுதான் கல்மாரி (ஆலங்கட்டி மழை) மழைன்னு சொல்லுவோம்.

எருதுகள் சில நாள் தண்ணி குடிக்காம பிடிவாதம் பிடிச்சா அதுக்கு ‘செலை’ புடிச்சிருக்குன்னு அர்த்தம். அப்போ எருதுகளோட 4 கால்களையும் சேர்த்து கட்டி கீழே, பக்கவாட்ல படுக்க வச்சு, நாக்கை புடிச்சு வெளியே இழுத்து, அடிப்பக்கம் பார்த்தா நரம்பு நீலக்கலர்ல இருக்கும். அதை ஊசியால குத்தி ரத்தம் வரவச்சு, அந்த இடத்தில இந்த கல்மாரி ஐஸ்ஸை (ஐஸ்கட்டி) வச்சு தேய்ப்பாங்க. இரண்டு நாள்ல எருதுகள் பழையபடி தண்ணி குடிக்க ஆரம்பிச்சிடும்.

கல்மாரிய எடுத்து நான் வாயில போட்டுப் பார்த்தேன். ‘ஐஸ்’கட்டியாட்டமா ‘சில்’லுன்னு இருந்திச்சு.

இன்னும் மழை உட்டபாடில்லே. எங்க தாத்தன் காலத்தில கட்டின ஊடு. காத்து மண்ணு சுவரு. மேல மங்களூர் ஒலவக்கோடு சீமை ஓடுகள். 70, 80 வருஷத்துக்கு முன்னாடி கட்டினது. அதனால ஓடுகளுக்கு நடுவால சின்ன இடைவெளி இருக்கும். அதில மழைத்தண்ணி ஊட்டுக்குள்ளே பல எடங்கள்ளே ஒழுகும்

உடனே சின்ன போசி, பெரிய போசி, வாணாச்சட்டி, வெங்கல கும்பா, வெங்கல டம்ளர், வட்டல்னு ஊட்டுக்குள்ள இருக்கிற பாத்திர பண்டத்தல்லாம் ஒழுகற எடங்கள்ளே வைப்போம். மழைத் தண்ணி ஒவ்வொரு பாத்திரத்தில, ஒவ்வொரு விதமான சத்தம் எழுப்பும். ‘டும்... டும்..டும்...டுமுக்கு, டுமுக்கு, டிங்,டிங், டிங்...!’ ‘பொத்து பொத்து’ ன்னு சத்தமே வேடிக்கையா இருக்கும். திடீர்னு ஒரு மின்னல் வெட்டும். ஒரு விநாடி பகல்ல தெரியற மாதிரி ஊரும், வீடுகளும் பளிச்சுன்னு தெரிஞ்சு மறைஞ்சிடும். அப்புறம் ஒரு இடி இடிக்கும் பாருங்க. தலையில நேரா எறங்கின மாதிரி!

அத்தனை பேரும் நடு நடுங்கிடுவோம்.

உடனே எங்கம்மிச்சி ,‘புங்கப்பத்தி, புளிய பத்தி, ஆத்தை பத்தி, அரசைப் பத்தி அர்ச்சுனா, அர்ச்சுனா!’ம்பாங்க. நாங்களும் பயம் போறதுக்கு கூடவே சொல்லுவோம்.

‘அர்ச்சுனன் தேரோட்டிட்டு வர்றானாமா. அப்பா இடிய எங்க தலை மேல போட்றாதே, புங்க மரத்து மேல போடு, புளிய மரத்து மேல போடு, ஆத்தில போடு, அரச மரத்தில போடு!’ன்னு நாம சொன்னா அப்படியே செய்வானாமாம்.

ஒரு மணிநேரம் உடாம மழை பேஞ்சதும், குட்டையிலிருந்து நூத்துக்கணக்கான தவளைகள், பலவிதமா குரல் எழுப்பி கத்தும்.

‘இதெல்லாம், இத்தனை நாள் எங்கிருந்தது அம்மிச்சின்னு கேட்டா, மானத்துலருந்து மழையோட சேர்ந்து சாமி போடறதுதான்!’ அப்படிம்பாங்க.

அம்மிச்சி

விடிஞ்சு ஊரைப்பாத்தா, ஏதோ போர் முடிஞ்சு ஓஞ்ச பூமி மாதிரி அவ்வளவு அமைதியா இருக்கும்.

ஊருக்குள்ள திடீர்னு பச்சைக்கம்பளம் போத்தின மாதிரி புல்லு மொளைக்க ஆரம்பிச்சிடும்.

தோட்டத்துக்கு போற வழியில, ‘மொட்டப் பாப்பாத்தி’ன்னு ஒரு பூச்சி ஊறும். முதுகுப்பக்கம் சிவப்பு, அடிப்பக்கம் ரோஸ்கலர் பூச்சி. எடுத்து பொறங்கை மேல விட்டா அது ஊர்றதே தெரியாது. அவ்வளவு லேசா இருக்கும்.

‘பொன்னாம்பூச்சி’ (பொன் வண்டு) நெறைய பறக்கும். அதோட முதுகுப்பக்கம் ஓடு -வெளிர் பச்சைல ‘ப்ளோரோசண்ட்’ கலர்ல இருக்கும். அது மேல கரும்புள்ளிகள் இருக்கும். அதைப் புடிச்சு தீப்பெட்டிக்குள்ளே போட்டு, 4 எலையைக் கிள்ளி உள்ளே திணிச்சு வெளையாடுவோம்.

ராத்திரி நேரத்துல மின்னாம்பூச்சின்னு, ஈசலை விட சிறிசா ஒண்ணு, உடம்பு பஞ்சு மாதிரி இருக்கும். இறகுகளை விரிச்சு, வேலியோரம் பறக்கறப்போ, இறகுகளுக்கு அடியில லைட் அடிக்கும்.

காத்தாடி விடும் சிறுவர்கள்

கிராமப்புறங்கள்ளே, வீடுகளில் கழிப்பறைகள் வச்சுக்காத காலம் அது.

‘ஆம்பிளைங்க’ சோளக்காட்டுக்கும், பருத்திக் காட்டுக்கும் போயி ‘வெளி’க்கு இருந்திட்டு (மலங்கழித்து விட்டு) ஓடக்கல்லு, ஒடைஞ்சு போன பானை ஓடு, வெங்கச்சாங்கல்லில் (டாய்லெட் துணியில் பின்பக்கம் துடைக்கிற மாதிரி) துடைச்சுப் போட்டுட்டு வீட்டுக்கு வந்து போசில தண்ணி மோந்து கழுவிக்குவாங்க.

பெண்கள்தான் பாவம். பகல்ல அவசரமா வயிறு கலக்கினா எங்கயும் போய் லேசில ஒதுங்க முடியாது. பாவம் அவங்க, விடியற்காலை சூரியன் கிளம்பறதுக்கு முன்னாடி அல்லது பொழுது உழுந்து இருட்டினதுக்கப்புறந்தான் ஆவாரஞ்செடிக்கடியிலயும், எருக்கஞ்செடி மறவிலயும் போய் உட்காருவாங்க.

ஒரு நாள் ராத்திரி நல்லா ‘மெட்டிட்டேன்’ (வயிறு முட்ட சாப்பிட்டுட்டேன்) உடனே வயிறு தொந்தரவு பண்ணிச்சு. ஊர்வளிக்கு ஓடினேன்.

தூரத்துல மரவெட்டை பூச்சிக்குள்ள விளக்கு போட்ட மாதிரி, விசில் ஊதிட்டு ஒண்ணு போச்சு. அதுதான் நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸுன்னு பின்னாடி தெரிஞ்சுகிட்டேன்.

மழை பேஞ்சு பூமி நல்லா குளிந்துட்டுதுன்னா ஒரு வாரத்தில் காளான் பூமில மொளைக்கும். இதில எருமைக் காளான் ரொம்ப பெரிசா இருக்கும். பறிச்சிட்டு வந்து எண்ணெய் காய வக்கிற வாக்கணத்தில கொடைப்

பகுதியையும் தண்டுப் பகுதியையும் சிறிசு, சிறிசா பிச்சுப் போட்டு, பருத்திமார் ஒரு பிடி கொண்டாந்து அடுப்பு பத்த வச்சு, அந்த வாக்கணத்தை உள்ளே நீட்டி, சூடேற்றறப்போ கொஞ்சம் உப்பும்,மொளகுத் தூளும் தூவி, நல்லா கிளறி விட்டு வெந்ததுக்கப்புறம், எடுத்து சாப்பீட்டீங்கன்னா, ‘அட, என்ன ருசீப்பா?’ ஆயிரம் சிக்கன் ஃபிரை, மட்டன் ஃபிரை.., இது கிட்ட நிக்க முடியாது.

ஒரு அடைமழை நாளு. ராத்திரி 12 மணிக்கு மேல இருக்கும். வீடுகள்ல கரண்ட் கிடையாது. லாந்தர் விளக்குத்தான், தோட்டந்தொறவு போறப்போ கொளுத்தி எடுத்திட்டு போவாங்க.

அந்த நடுராத்திரியில மாடு கத்துச்சு. ‘இப்படிக் கத்தாதே, என்னாச்சு?’ன்னு எங்கம்மா லாந்தர் விளக்கு பத்த வச்சு எடுத்துட்டுப் போயி பாத்தாங்க. நானும் பின்னாடியே போறேன்.

அடைமழையில மாட்டுச்சாளையோட ஒரு பக்க பந்தக்கால் முறிஞ்சு கூரை ஒரு பக்கமா தொங்கிட்டிருந்தது. மாடு நிலை கொள்ளாம , அலைஞ்சுது.

மாட்டுச்சாளை

திடீர்ன்னு கீழ படுத்து, ‘அம்மா’ன்னு கத்தி ஒரு ‘முக்கு முக்கு’ச்சு. ‘பொளேர்’னு, பின்னாடி பக்கமிருந்து, பாலிதீன் பையாட்டமா ஒண்ணு வெளியில வந்து விழுந்துச்சு. உள்ளே ‘கரே’ன்னு கன்னுக் குட்டி.

விழுந்த வேகத்தில பாலிதீன் பை ஒடைஞ்சு தண்ணியெல்லாம் வெளியே போயிடுச்சு. சின்ன கன்னுக்குட்டி ‘பொட பொட’ன்னு முடிஞ்சு சுத்திலயும் பார்த்துச்சு.

கால் குழாம்பெல்லாம் மஞ்சக்கலர்ல இருந்திச்சு. கன்னுக்குட்டி மேல இருந்த ஈரத்தை மாடு நக்கி நக்கி சுத்தப்படுத்திச்சு. சித்த நேரத்தில தெம்பு வந்த கன்னுக்குட்டி எழுந்து நிக்க முயற்சி பண்ணுச்சு.

முன்னால காலை எடுத்து வச்சா, அது ‘சைடில’ போகுது. பின்னங்காலும் விரிஞ்சு ‘சைடில’ போகுது. விடாப்பிடியா அஞ்சாறு தடவை முயற்சி பண்ணி எழுந்து நின்னிடுச்சு. நடுங்கிட்டே அம்மா முகத்துக்கிட்ட போயி மோந்து பாத்திட்டே, முன்னங்கால்களை தாண்டி அடி வயிற்றைத் தாண்டி, மடிக்காம்புகளை கண்டு பிடிச்சு ‘சப்பி, சப்பி...’ பால் குடிக்குது.

பொறந்த கன்னுக்குட்டிக்கு இதெல்லாம் யார் சொல்லிக் குடுத்திருப்பா.

விடிந்ததும், கன்னுக்குட்டி சித்த நேரம் பாலூட்ட விட்டுட்டு அதை பிடிச்சாந்து பந்தக்கால்ல கட்டிட்டு அம்மா, பால் கறந்தாங்க.

அதாவது நாலஞ்சு மாசத்துக்கப்புறம் பசுவிலிருந்து கறக்கற பால். பழுப்பு கலர்ல இருக்கும். காய வச்சா திரண்டு, திரண்டு வரும். அதில கொஞ்சம் கரும்புச் சக்கரையை தூவிக் குடுப்பாங்க. அதுக்குப் பேரு ‘சீம்பால்’ தேவாம்ருதம்னு காலங்காலமா பேசீட்டிருக்கறோம். அதை எவன் சாப்பிட்டான்? இதுதான்யா தேவாம்ருதம்.

(சுவைப்போம்)

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x