Last Updated : 09 Jul, 2020 12:41 PM

 

Published : 09 Jul 2020 12:41 PM
Last Updated : 09 Jul 2020 12:41 PM

சினிமாவின் சிகரம்... கே.பி.

திரையுலகில், நடிகர்களின் பக்கம் இருந்த ரசிகர்களின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்தவர்களும் பிரமிக்க வைத்தவர்களும் நிறையபேர் உண்டு. முதன்முதலாக நடிகர்களைச் சொல்லி படத்தின் பெயரச் சொன்னதை மாற்றியவர் புதுமை இயக்குநர் ஸ்ரீதர். ‘இது ஸ்ரீதர் படம்’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். அதேபோல், அந்தப் பாதையில் தனித்துவத்துடன் இன்னும் கூடுதல் அழகையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் வசனங்களிலும் காட்சிகளிலும் வைத்து சிகரமாக்கியவர்... இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

அவர் இயக்கத்தில், ஓடிய படங்கள் ஓடாத படங்கள் என்றிருக்கலாம். நல்லபடம், சரியில்லாத படம் என்றிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும், அதில் ‘பாலசந்தர் படம்’ என்று சொல்லுவதற்கான விஷயங்களை ஆங்காங்கே தூவியிருப்பார். அதை இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

திருவாரூர் பக்கமுள்ள கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். ஒரு பக்கம் வேலை, இன்னொரு பக்கம் நாடகம் என்றிருந்தார். அடுத்து சினிமாவின் பக்கம் வந்தார். பிறகு ரசிகர்களின் பக்கம் சென்றார். அதையடுத்து ரசிகர்களும் தமிழ்த் திரையுலகமும் அவரின் பக்கம் சென்றது.

நாடகத்தைத் தொடங்கும் போது, கடவுள் வாழ்த்து போடுவார்கள். பிறகுதான் நாடகம் ஆரம்பமாகும். ஆனால் தன்னுடைய நாடகங்களை திருக்குறளில் இருந்து தொடங்குவதுதான் பாலசந்தரின் வழக்கம். இதுவே பின்னாளில், திரையிலும் எதிரொலித்தது. படத்தை எந்தக் கம்பெனி தயாரித்தாலும் பாலசந்தர் இயக்கிய படங்களில் மட்டும், திருவள்ளுவர் வந்துவிடுவார். ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ குறளும் குரலும் ஒலித்துவிடும். பின்னர், ‘கவிதாலயா’வின் லோகோவாகவும் திகழ்ந்தது.
எம்ஜிஆரின் ‘தெய்வத்தாய்’ படத்துக்கு கதை, வசனம் எழுதியதில் இருந்து தொடங்கியது திரை வாழ்க்கை. ஆனால் எம்ஜிஆரின் பக்கமே செல்லவில்லை. பின்னர், ‘எதிரொலி’யில் சிவாஜியை இயக்கினார். அடுத்து சிவாஜி பக்கமும் செல்லவில்லை. இவரின் கதை, வசனத்தில் ‘சர்வர் சுந்தரம்’ கிருஷ்ணன் பஞ்சு இயக்கி வந்தது. படம் முழுக்க, பாலசந்தரின் ஸ்டைல் பளிச்சிடும்.

எம்ஜிஆரும் சிவாஜியும் முன்னணியில் இருந்த நேரத்தில், முதல் படத்தை இயக்கினார். அதன் நாயகன் நாகேஷ். டிராமா காலத்துப் பழக்கம்; வாடா போடா பழக்கம். பின்னர் எத்தனையோ படங்களில் நாகேஷுக்கு கேரக்டர் கொடுத்துக்கொண்டே இருந்தார். நாகேஷ் உடம்புக்குள் பாலசந்தரும் அவரின் புத்திக்குள் நாகேஷும் ஊடுருவியிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

மருத்துவமனைக்குள்ளேயே இருக்கும் ‘நீர்க்குமிழி’. அதேபோல், ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’ ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் வெரைட்டி காட்டியிருப்பார். முதல் படம் பண்ணும் போது, எம்.எஸ்.வி.யும் கே.வி.மகாதேவனும் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். தன் நாடகத்தில் இசையமைத்து வந்த வி.குமாரை இசையமைப்பாளராக ‘நீர்க்குமிழி’யில் அறிமுகம் செய்தார்.

தன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க, நாகேஷ் போல் அடுத்து அவர் தேர்வு செய்தவர் மேஜர் சுந்தர்ராஜன். சுந்தர்ராஜனுக்கு முன்னே ‘மேஜர்’ எனும் அடைமொழிக்குக் காரணமே பாலசந்தர்தான். ‘மேஜர் சந்திரகாந்த்’ படமும் பாத்திர வார்ப்புகளும் புது தினுசு என்று கொண்டாடப்பட்டது.

இவர்களைப் போலவே, ஜெமினி கணேசனை ஒவ்வொரு விதமாகவும் பயன்படுத்தினார். ‘வெள்ளி விழா’ ‘தாமரை நெஞ்சம்’, ‘காவியத்தலைவி’, ‘புன்னகை’, ;பூவாதலையா’, ‘நான் அவனில்லை’ என இன்னும் எத்தனையோ படங்கள். வாணிஸ்ரீ, ஜெயந்தி, ராஜஸ்ரீ, சரோஜாதேவி என பலருக்கும் இன்று வரை சொல்லும்படியான கேரக்டர்கள் அளித்தார்.

’அனுபவி ராஜா அனுபவி’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’ என்று ஒரு பக்கம் காமெடிப் படமும் ‘நாணல்’ , ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘நூற்றுக்கு நூறு’ என த்ரில்லிங் படங்களும் குடும்பத்துக்குள் நிலவுகிற குழப்பங்களையும் நேர்மையும் வாய்மையும் கொண்ட வாழ்க்கையையும் பாலசந்தர் படங்களில் வெளிப்படுத்தியதே வேறு மாதிரியானவை.
’அரங்கேற்றம்’ பிரமீளா, ’அபூர்வ ராகங்கள்’ ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நூல்வேலி’களில் சுஜாதா, ‘மூன்று முடிச்சு’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ஸ்ரீதேவி, ‘மரோசரித்ரா’, ‘தப்புத்தாளங்கள்’, ‘நூல்வேலி’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அக்னி சாட்சி’ சரிதா, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா,‘நூற்றுக்கு நூறு’ லட்சுமி, ‘எதிர்நீச்சல்’ ஜெயந்தி என இன்னும் எத்தனையோ படங்களில் பெண் கதாபாத்திரங்கள் ஒளிரும்; மிளிரும். இதைக் கொண்டே பி.ஹெச்டி செய்யலாம்.

ஒரு காட்சியை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஆரம்ப - இறுதிக்கு நடுவேயும் நகாசு பண்ணிக் கொண்டே இருப்பார். இவையெல்லாம் ‘பாலசந்தர் டச்’ என்று பிரமிக்கவும் ரசிக்கவும் வைத்தன.

நாகேஷ் ஹிட் லிஸ்ட்டில் பாலசந்தர் வந்துவிடுவார். ஜெமினிக்கும் அப்படித்தான். ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன் ஆகியோர் படங்களின் வரிசையில் பாலசந்தர் படங்களுக்கு முதலிடம் இருக்கும். இப்படி எத்தனையெத்தனை நடிகர்களுக்கு முகமும் முகவரியும் கொடுத்தவர்.

நாகேஷை வைத்து 36 படங்களுக்கும் மேல் இயக்கினார். கமலை வைத்து 27 படங்கள் பண்ணினார். ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஸ்ரீவித்யா, சுஜாதா, ஜெயந்தி, சரிதா, கீதா, ஜெயப்ரதா, சுமித்ரா, ஷோபா என நடிகைகளை நடிக்கப் பயன்படுத்துகிற அளவுக்கு கேரக்டர்கள்.

தமிழ் சினிமாவில் அதிக அளவில் நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்தது பாலசந்தராகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்டவர்களை அறிமுகப்படுத்தி, இதில் முக்கால்வாசிபேரை நம் மனதில் நிற்கவைத்தும் சாதித்தவர் பாலசந்தர். எம்ஜிஆர் - சிவாஜிக்குப் பிறகான அந்த இடத்தை, கமல் - ரஜினியை உருவாக்கி நிரப்பினார்.
தன்னைச் சுற்றியுள்ள கலைஞர்களை அற்புதமாகப் பயன்படுத்துவார். எம்.எஸ்.வி.யின் மிகச்சிறந்த இசையை தன் படங்களுக்குள் இணைத்திருக்கிறார். ‘எத்தனையோ இயக்குநர்களின் படங்களுக்கு பாட்டு எழுதியிருக்கிறேன். பாலசந்தருக்கு பாட்டு எழுதுவதுதான் சிரமமாக இருக்கும். ஒரு பாட்டுக்குள் படத்தின் ஜீவன் மொத்தத்தையும் சொல்லச் சொல்லுவார்’ என்று தெரிவித்துள்ளார் கவியரசு கண்ணதாசன். இசையைப் போலவே பாடல்களும் தனியிடம் பிடித்தன.

‘தெய்வம் தந்த வீடு’ ஒரு மாதிரி. ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ இன்னொரு மாதிரி. ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலும் ‘கேள்வியின் நாயகனே’வும் புதுவிதம். ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’, ‘இலக்கணம் மாறுமோ’, ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’, ‘ஓடுகிற தண்ணியில’, ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’, ‘ஆண்டவனின் தோட்டத்திலே’, ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ , ‘பூமாலை வாங்கி வந்தால்’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’, ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’, ‘காதோடுதான்’... என்று இன்னும் இன்னுமாகச் சொல்லிக் கொண்டே போக பாடல்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

‘அரங்கேற்றம்’ டால்டா டப்பாவுடன் திரியும் மனப்பிறழ்வுப் பெண், ‘மூன்று முடிச்சு’ மனசாட்சி, ‘எதிர்நீச்சல்’ இருமல் தாத்தா என்று இவர் கேரக்டர்கள் நம்மை ஏதோ செய்யும். எனக்குத் தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களை கலர் பட காலகட்டத்திலும் அதிகமாய் எடுத்தது பாலசந்தராகத்தான் இருக்கும்.அவள் ஒரு தொடர்கதை விகடகவி கோபால், அவர்கள் ராமனாதன், அபூர்வ ராகங்கள் பிரசன்னா, சிந்துபைரவி ஜே.கே.பி. மனதில் உறுதி வேண்டும் நந்தினி, எதிர்நீச்சல் மாது, வறுமையின் நிறம் சிகப்பு திலீப், நினைத்தாலே இனிக்கும் சந்துரு, அவர்கள் அனு, அபூர்வ ராகங்கள் பைரவி... என ஒவ்வொரு கேரக்டர்களிலும் உயிர்ப்பு... ஜீவன்! அதுதான் கே.பி. டச்!

இன்றைக்கு ரெண்டு மணி நேர சினிமாவில், காமெடி டிராக், புரியாத அஞ்சு பாட்டு, தூக்கிப் பிடிக்கும் ஹீரோயிஸம். ஆனால் ஹீரோ பேர் மறந்து கேரக்டர் பெயர், கதை, உணர்வு, வலிகளைச் சொல்லும் பாடல், படம் முழுவதும் விரவியிருக்கும் காமெடி... என நிரம்பி வழியும் கே.பி.யின் படங்களில்!

ஊருக்குப் போய்விட்டதைக் காட்ட ரயிலைக் காட்டுவார்கள் சினிமாவில். ஆனால் பத்துப்பையன்கள், ஒருவர்பின் ஒருவராகச் சட்டையைப் பிடித்துக் கொண்டு, ரயில் மாதிரி செல்வதைக் காட்டுவார். ஒரு வாரத்தைக் காட்ட, படபடவெனப் பறக்கும் தினசரிக் காலண்டரைக் காட்டுவார்கள். கல்கி, விகடன் என ஒவ்வொரு நாளும் வருகிற புத்தகங்களைக் கொண்டே ஒருவாரத்தைக் காட்டியிருப்பார்.

பூவா தலையா படம். அத்தைக்கு கட்டுப்படும் மருமகப்பிள்ளை. தலையாட்டி பொம்மை ஆடுவதையும் பீரோவில் தொங்கும் சாவிக்கொத்தையும் காட்டியிருப்பார். ’எதிர்நீச்சல்’ படத்தில் இருமல் தாத்தா, ’அவர்கள்’ பொம்மை, டெலிபோன், அருவி, ஃபடாபட் எனும் சொல், விளக்கை அணைத்து எரிய வைத்து அணைக்கும் லவ் சிக்னல்... அவள் ஒரு தொடர்கதை வில்லனின் கை மடக்கி விரிக்கும் ஸ்டைல் என கே.பி. விடும் ரகளைக்கும் அவரின் ரசனைக்கும் பஞ்சமே இல்லை.

அழுகாச்சி கேரக்டராகவே செளகார் ஜானகிக்குக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா என்று எதிர்நீச்சலிலும் தில்லுமுல்லுவிலும் வாய்ப்பை வழங்க, அதைக் கொண்டு அதகளம் பண்ணியிருப்பார் செளகார் ஜானகி.

எதிர்நீச்சல் படத்தில், திருடி விட்டு மாட்டிக் கொள்வார் தேங்காய் சீனிவாசன். அடித்ததில் விழுந்திருப்பார். போலீஸில் சொல்லிவிடலாம் என்று ஒருவர் சொல்ல, ‘வேணாம் சார். விழுந்துட்டாரு. எழுந்திருக்கும் போது, நல்லவனாத்தான் சார் எழுந்திருப்பாரு’ என்று வசனம்.

அவள் ஒரு தொடர்கதையில், ‘பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ கர்வமா இருக்கா’ என்று விஜயகுமாரின் அம்மா கேரக்டர் சொல்ல, ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’ என்று சட்டெனச் சொல்லுவார் சுஜாதா.

நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா, தலையை ஆட்டி ஆமாம் சொல்லிவிட்டு, பிறகு மெல்ல மெல்ல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிவிட்டு, இல்லை என்று சைகையில் சொல்வதை, செய்யாத, செய்து பார்க்காத ரசிகர்களே அப்போது இல்லை.

காட்சி கவிதையாய் இருக்கும். பாடலில் கதையே சொல்லப்படும். வசனத்தில் அவ்வளவு ஷார்ப் வைத்திருப்பார். நடிப்பில் அவ்வளவு யதார்த்தம் குடிகொண்டிருக்கும்.

தட் இஸ் கமால் சொல்லும் சொல்லத்தான் நினைக்கிறேன், எவ்ளோ பெட்டு கேட்கும் கவிதாலயா கிருஷ்ணா, முடிச்சுகள் போடும் நட்ராஜ், கையசைப்பில் வாயசைக்கும் ஜூனியர், ஃபடாபட், ரெண்டு கை பத்தலை எஸ்.வி.சேகர், அந்த திலீப் எனும் கேரக்டரே இல்லாத கேரக்டர் என எல்லாமே பாலசந்தரின் பரீட்சார்த்த முயற்சிகள்; வெற்றிகள்; புதுமைகள்.

வி.குமார், எம்.எஸ்.வி., இளையராஜா, வி.நரசிம்மன், மரகதமணி என்றும் கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்றும் இசைக்கும் பாட்டுக்குமாக அப்டேட்டாகிக் கொண்டே இருந்தார். ஆனால் ஒரு பக்கம் அனந்துவும் இன்னொரு பக்கம் ரகுநாத ரெட்டியும் வேண்டும் பாலசந்தருக்கு.

நூறு படங்களை இயக்கிய பாலசந்தரின் படங்கள்... ஒவ்வொரு நூறு வருடங்கள் என பாலசந்தரை அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கும் கொண்டு செல்லும். படத்துக்கு இப்படித்தான் பெயர், கேரக்டருக்கு இப்படித்தான் பெயர், காட்சிகள் இப்படித்தான் என்று எந்த வரையறைகளும் செய்துகொள்ளாமல் எல்லைகளற்று படங்களைக் கொடுத்தவர் பாலசந்தர்.

இயக்குநர் சிகரம் பாலசந்தரின் 90 வது பிறந்தநாள் இன்று. சினிமாவின் சிகரத்தைக் கொண்டாடுவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x