Last Updated : 09 Jul, 2020 11:03 AM

 

Published : 09 Jul 2020 11:03 AM
Last Updated : 09 Jul 2020 11:03 AM

தடம் பதித்த பெண்: எரிமலைகளை நேசித்த கட்டியா க்ராஃப்ட்!

எரிமலையைப் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட எரிமலைகளின் மீது அளவற்ற காதல்கொண்டிருந்தார் ஒரு பெண். எரிமலை ஆராய்ச்சி மிக ஆபத்தான துறை. உலகம் முழுவதிலுமே சொற்பமான அளவில்தான் எரிமலையியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எரிமலையியலுக்காகத் தன் உயிரையே கொடுத்தவர் கட்டியா க்ராஃப்ட்.

பிரான்ஸில் பிறந்த கட்டியாவுக்குக் கேள்விகள் கேட்பதும் துணிச்சலான காரியங்களைச் செய்வதும் இயல்பு. அறிவியலின் துணைகொண்டு, ஒவ்வொன்றையும் கேள்விக்கு உட்படுத்தினார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எரிமலையியலாளர் ஆக வேண்டும் என்றார். பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றவுடன், க்ரைம் நாவல் எழுத்தாளராகப் போகிறேன் என்றார். இரண்டுமே ஆண்களுக்கான துறை, வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும், எரிமலையியலாளர் ஆகும் லட்சியத்தில் உறுதியாக இருந்தார் கட்டியா.

18-வது பிறந்த நாளின்போது கட்டியாவின் நச்சரிப்பு தாங்காமல், அவரை எட்னா மலைக்கு அனுப்பி வைத்தார்கள். ஒரு வாரம் அங்கே தங்கி எரிமலையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். படங்களை எடுத்தார். மாதிரிகளைக் கொண்டுவந்தார். ஆனாலும் எரிமலையியலாளராவதற்குச் சம்மதம் கிடைக்கவில்லை.

கட்டியா தினமும் இரவில் வீட்டுக்குத் தெரியாமல் எங்கோ சென்று வருகிறார் என்பதை அவரது அப்பா கண்டுபிடித்தார். பூமி உருண்டைக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டும் சாகசத்தைச் செய்துவிட்டே திரும்புகிறார் என்பதை அறிந்ததும் பெற்றோர் அதிர்ந்து போனார்கள். முதலில் பட்டப்படிப்பை முடித்தால், பிறகு விருப்பப்பட்டதைச் செய்யலாம் என்றார்கள்.

கடினமாக உழைத்தார். படிப்பை நிறைவு செய்தபோது தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியாளராகும் வாய்ப்பு வந்தது. 20 வயதில் பிரதமரிடம் விருது பெற்ற கட்டியா, எரிமலை ஆராய்ச்சியாளரானார்.

ஒருநாள் பள்ளி நண்பரைச் சந்தித்தபோது, எரிமலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மெளரிஸ் க்ராஃப்ட்டைச் சந்திக்க வேண்டும் என்று கட்டியாவைக் கேட்டுக்கொண்டார். இருவரும் சந்தித்தார்கள். நண்பர்களானார்கள். 1970-ம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்கள். ஓர் எரிமலைக்குத்தான் தேனிலவுக்குச் சென்றார்கள்!

கட்டியாவும் மெளரிஸும் பெரும்பான்மையான நேரத்தை ஆய்வுக்கூடத்திலேயே செலவிட்டனர். எரிமலை பற்றிய தகவல்களைப் படிக்க நேர்ந்தால், உடனே அந்த இடம் நோக்கிக் கிளம்பிவிடுவார்கள். பயணத்துக்கான நிதியை உள்ளூர் மக்களிடமும் அருங்காட்சியகத்திடமும் பெற்றோரிடமும் பெற்றுக்கொள்வார்கள்.

மெளரிஸ் எரிமலையைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக்கொள்வார். கட்டியா படங்களையும் மாதிரிகளையும் எடுத்துக்கொள்வார். வீட்டு வேலைகளுடன் ஆராய்ச்சிகளையும் செய்துகொண்டே இருப்பார். ஆராய்ச்சியில் கவனம் இருந்ததால் பொது நிகழ்ச்சிகள் அவருக்குச் சலிப்பைக் கொடுத்தன. ஆனால், எரிமலைகள் குறித்து குழந்தைகள், பெரியவர்களிடமிருந்து வரும் மெயில்களுக்கு உடனடியாக பதில் அளிப்பதை விருப்பத்துடன் செய்தார்.

எரிமலைக் கற்கள், பாறைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்று உலகிலேயே மிகப் பெரிய எரிமலை அருங்காட்சியகத்தை உருவாக்கினார் கட்டியா. பல்வேறு இடங்களில் உரைகள் நிகழ்த்தினார். ஆவணப்படங்களைத் திரையிட்டார். எரிமலைகள் குறித்து ஏராளமான தகவல்களை அறிந்திருந்த கட்டியா, அவற்றின் ஆபத்துகளைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

1985-ம் ஆண்டு கொலம்பியாவில் உள்ள ஓர் எரிமலை வெடித்ததால் 23 ஆயிரம் மக்கள் இறந்து போனார்கள். அதற்குப் பிறகே எரிமலை வெடிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கட்டியா. யுனெஸ்கோ உதவியுடன் ஆவணப்படத்தை வெளியிட்டு, ஏராளமான உயிர்களைக் காப்பாற்றினார்.

கட்டியாவும் மெளரிஸும் தங்கள் வாழ்க்கையில் 175 எரிமலை வெடிப்புகளைப் பார்த்திருக்கிறார்கள். நெருங்கி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக உள்ள ஆயிரம் எரிமலையியலாளர்களில் `உயிருடன் இருக்கும் எரிமலைகள்’ குறித்து ஆராய்ச்சி செய்த 50 நபர்களில் கட்டியாவும் மெளரிஸும் இடம்பெற்றனர்.

“எரிமலைகளை நேசிப்பதைப் போலவே அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் அறிந்தே இருக்கிறோம். உயிர் பற்றிய பயம் இருவருக்கும் இல்லை. ஒருவேளை எரிமலையால் கொல்லப்பட்டாலும் அதில் எங்களுக்குப் பெருமிதம்தான்” என்றார் கட்டியா.

1991 ஜூன் 3... ஜப்பானின் அன்ஸென் எரிமலை வெடித்து கட்டியா, மெளரிஸ் உட்பட 41 பேரின் உயிர்களைப் பறித்துவிட்டது. 23 ஆண்டுகாலம் இருவரும் ஆராய்ச்சி செய்ததன் மூலம் கிடைத்த தகவல்கள், இன்றும் அறிவியலாளர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x