

மதுரை என்றாலே மல்லியுடன் பரோட்டாவும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது.
பரோட்டோ பிரியர்களை அதிகமாகக் கொண்ட மதுரையில் உணவக உரிமையாளர் ஒருவர் மாஸ்க் வடிவில் பரோட்டா தயாரித்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மதுரை டெம்பிள் சிட்டி உணவகத்தில் தான் இந்த மாஸ்க் பரோட்டா தயாராகிறது. இது குறித்து கடை உரிமையாளர் கே.எல்.குமார் கூறியதாவது:
"இப்படியொரு பரோட்டாவைத் தயாரிக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை காலையில் தான் எனக்குத் தோன்றியது. உடனே மதியமே அதற்கு ஆயத்தமாகி மாஸ்க் பரோட்டாவை செய்துவிட்டோம். அதற்குப் பெரிதாக மெனிக்கிடல் ஏதும் தேவைப்படவில்லை. எங்களின் இலக்கு, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கலாம் என்பதை உணர்த்துவதாகவே இருந்தது.
மதுரையில் சமீப காலமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது முக்கியத்துவம் வாய்ந்ததே.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அன்றாடம் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜூன் 8 - ஜூன் 23 காலகட்டத்தில் அமலில் இருந்த ஊரடங்குக்குப் பின்னர் உணவகங்கள் இயங்கத் தொடங்கின. அப்போது எங்கள் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முகக்கவசம் அணியச் சொல்லி வற்புறுத்தினோம். மாஸ்க் இல்லாமல் வந்தவர்களுக்கு நாங்களே இலவசமாக வழங்கினோம். தற்போதும் உணவகங்களுக்கு வரும் ஹோம் டெலிவரி ஊழியர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்குகிறோம்" என்றார்.
வீச்சு பரோட்டா ஸ்டைலில் மாஸ்க் பரோட்டா..
டெம்பிள் சிட்டி கடையின் பரோட்டா மாஸ்டர் எஸ்.சதீஷ் கூறும்போது, வீச்சு பரோட்டா செய்முறையிலேயே மாஸ்க் பரோட்டா செய்தோம். பரோட்டா மாவில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. நாங்கள் பரோட்டாவை மடிக்கும் விதத்தில் மட்டுமே சில மாறுதல் செய்தோம். முதல் முயற்சியிலேயே சிறப்பாக வந்துவிட்டது என்றார்.
"மாஸ்க் பரோட்டா பற்றி அறிந்ததுமே மதுரைவாசிகள் ஹோட்டலுக்கு வந்து பார்சல் வாங்கிச் செல்வதும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதும் அதிகரித்துள்ளது. 2 மாஸ்க் பரோட்டாக்கள் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. மதுரையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. ஆனால், பெரும்பாலானோருக்கு முகக்கவசம் பிடித்தமானதாக இருக்கிறது. எனவே நாங்கள் மதுரை மக்களுக்குப் பிடித்த பரோட்டா வாயிலாக கரோனா விழிப்புணர்வு மேற்கொள்கிறோம்" என்றார் உரிமையாளர் குமார்.
-சஞ்ஜனா கணேஷ்