Published : 08 Jul 2020 10:38 am

Updated : 08 Jul 2020 10:38 am

 

Published : 08 Jul 2020 10:38 AM
Last Updated : 08 Jul 2020 10:38 AM

கோவிட்-19 சிகிச்சை: ஒருங்கிணைப்பும் ஊழியர் பாதுகாப்பும் மேம்படுத்தப்பட வேண்டும்; இரட்டை நோய்களுடன் வென்றவரின் அனுபவப் பகிர்வு

covid-19-treatment

கரோனா வைரஸால் ஏற்படும் கோவிட்-19-யை உலக சுகாதார நிறுவனம் ஜனவரி மாதம் பெருந்தொற்றுநோயாக அறிவித்த உடனே, மனதில் சிறு கலக்கம் தொற்றிக்கொண்டது. காரணம் ஆறு ஆண்டுகளாக எனக்கிருக்கும் டைப்-1 சர்க்கரை நோயும் நுரையீரல் பிரச்சினைகளும்தாம். அதுவும் உலகில் சர்க்கரை நோயாளிகள், காசநோயின் உற்பத்திக் கூடம் போன்றிருக்கும் இந்தியா போன்ற நாட்டை, பெருந்தொற்றுகள் மூச்சுத் திணற வைக்கக்கூடியவை.

ஆனாலும், தமிழக அரசின் தொடக்ககால முன்னேற்பாடுகள் குறித்த செய்திகள் நிம்மதி அளித்தன. எல்லா வசதிகளும் நம்மிடம் உள்ளன என்று அரசு அறிவித்தது மகிழ்ச்சி தந்தது. தொற்று ஏற்பட்டாலும் வென்று விடலாம் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஆனால், களச்சூழல் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதுபோல் இல்லை. இதற்கு நானே ஒரு சாட்சியம்.


தானே முன்வந்து சோதனை

சென்னை கல்லூரி ஒன்றில் இளங்கலை படித்துவரும் நான், சென்னை டிரேட் சென்டர் அருகிலுள்ள மணப்பாக்கம் பகுதியில் வசித்துவருகிறேன். அரசு ஊரடங்கை அறிவித்த பிறகு, பெரிதாக வெளியில் செல்லவில்லை. காய்கறிக் கடை, மளிகைக் கடை போன்றவற்றுக்குச் செல்வதைத் தவிர. ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன் எனக்கு காசநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டு, அதற்கு மருந்து உட்கொண்டுவருகிறேன்.

இதற்கிடையில் கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நானே பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவசர ஊர்தியில் முகாமுக்குப் புறப்பட்டேன். தொடக்கமே சற்று ஏமாற்றமாக அமைந்தது. எந்தவித உயிர்காக்கும் கருவிகள் இல்லாதது மட்டுமில்லாமல், சுகாதாரமற்ற அவசர ஊர்தியில்தான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

வழக்கமான பரிசோதனைகள் முடிந்தபின் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி முகாமுக்கு அனுப்பப்பட்டேன். தனிப்பட்ட முறையில் அங்குதான் எனக்குக் கடும்சோதனைகள் தொடங்கின. "சர்க்கரை நோயாளிகளைப் பராமரிக்க இங்கு சரியான வசதி இல்லை, நீங்கள் காத்திருங்கள்" என்று என்னை மட்டும் காத்திருப்பு அறைக்கு அனுப்பினார்கள். 5 மணி முதல் 9 மணி வரை காத்திருப்பு தொடர்ந்தது. சர்க்கரை நோயாளி என்பதால் இருவேளை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதுடன், சரியான நேரத்துக்குச் சாப்பிடவும் வேண்டும். அறை ஒதுக்கப்படாததால் கழிவறைக்குள் சென்று ஊசி போட்டுக்கொண்ட பின் சாப்பிட்டேன்.

சற்று நேரத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவே, அவர்களிடம் என் பிரச்சினை குறித்து முறையிட்டேன். பிறகு அவசரஊர்தி மூலம் மேலும் மூன்று முதியவர்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (கே.எம்.சி.) என்னை அனுப்பினார்கள். அங்கு சென்ற பிறகு இடம் இல்லை என்று கூறி, இரவு 12 மணி அளவில் மீண்டும் ஜெயின் கல்லூரி முகாமுக்கே அனுப்பிவிட்டார்கள். இந்த அலைக்கழிப்பு எனக்கு சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தியது.

சில அதிர்ச்சிகள்

ஒரு பெருந்தொற்று நோயைக் கையாள்வதும், அதிக நோயாளிகள் இருக்கும்போது ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளும் சிக்கலானவை என்பது எனக்குப் புரிகிறது. அதேநேரம், யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், ஒருவரை எங்கு அனுப்ப வேண்டும், எப்படிக் கையாள வேண்டும் என்ற அடிப்படை வழிகாட்டுதல்கள் இருந்திருக்க வேண்டுமில்லையா? அப்போதுதானே பெருந்தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அடுத்த நாள் மீண்டும் அதே நபர்களுடன் கே.எம்.சி.க்கு என்னையும் அனுப்பினார்கள். அங்கு கண்ட காட்சிகள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. ஊடுகதிர் பரிசோதனை செய்யப் போயிருந்தபோது, அந்த அறைக்கு அருகிலேயே வராண்டாவில் கேட்பாரற்று மூடப்பட்ட சடலம் இருந்தது. வெளியே கரோனா நோயாளிகள் உட்காரும் இடத்திலேயே சாதாரண நோயாளிகளும் பார்வையாளர்களும் அமர்ந்திருந்தார்கள். அதேபோல் மருத்துவமனைக்குள் இருந்த டீக்கடையில் தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் நின்றுகொண்டும் பொருட்களை வாங்கிக்கொண்டும் இருந்தார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் கோவிட்-19 எளிதில் பரவுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும். மருத்துவமனையிலேயே இதுபோன்று இருப்பது எவ்வளவு ஆபத்தானது?

மீண்டும் அலைக்கழிப்பு

நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின் கே.எம்.சி. கோவிட் பிரிவில் தனியறை கொடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் அங்கே கடந்தன. கோவிட் முகாம்களில் பரிமாறப்படும் உணவு குறித்து, ஆங்காங்கே பிரச்சினைகள் எழுந்ததைக் கேள்விப்பட்டிருந்தேன். அரசு மருத்துவமனையின் உணவு விதிமுறைப்படி சர்க்கரை நோயாளிகளுக்குப் பத்திய சாப்பாடு தரப்பட வேண்டும். அவர்களது உடல்நலத்தைப் பேணுவதில் சர்க்கரைச் சத்து குறைந்த சரிவிகித உணவு முக்கியம். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கும் பொது நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவே வழங்கப்பட்டது.

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் இடமாற்றம் செய்வதாகக் கூறி அண்ணா சாலை காயிதே மில்லத் கல்லூரிக்கு அவசர ஊர்தியில் 13 பேருடன் அழைத்துச் செல்லப்பட்டோம்! அங்கு மூன்று பேருக்கு இடமில்லை என்று மீண்டும் ஜெயின் கல்லூரி முகாமுக்கே அனுப்பிவிட்டார்கள். அந்த மூன்று பேரில் நானும் ஒருவன். சர்க்கரை நோயாளிகளைப் பராமரிக்க இங்கே வசதி இல்லை என்று கூறி, என்னோடு மற்றொருவரை மீண்டும், புறப்பட்ட கே.எம்.சி. மருத்துவமனைக்கே அனுப்பினார்கள். அங்கேயும் இடமில்லை என்று கூறப்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவனைக்கு அனுப்பப்பட்டேன். ஏற்கெனவே கூறியதுபோல், இதுபோன்ற சிக்கல்கள் எழுவதற்கு சாத்தியம் உண்டு என்றாலும், எந்தத் திட்டமும் இல்லாமல் இதுபோல் நோயாளிகளை வெவ்வேறு இடங்களுக்கு அலைக்கழிப்பதில் ஆபத்தும் இருக்கிறது.

தன்னம்பிக்கை எனும் மருந்து

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நீண்ட நேரக் காத்திருப்புக்கு பிறகு மறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அங்கிருந்து அடுத்த கட்டடத்துக்குச் சென்று கவுன்டரில் அனுமதிச் சீட்டு பெற்றுவர அனுப்பப்பட்டேன். பிறகு அந்த மருத்துவமனையின் கோவிட் பிரிவில் சேர்க்கப்பட்டேன். அவசர அவசரமாக கோவிட் பிரிவாக மாற்றப்பட்ட இடம் என்பதால், அங்கே குளியலறை இல்லாமல் இருந்தது. கோவிட் நோயாளிகள் என்றாலும் , குளியலறை அவசியம்தானே?

நான் சிகிச்சை பெற்ற இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளைச் சிறந்த முறையில் கவனித்துக்கொண்டார்கள் என்பதில் கேள்விக்கு இடமில்லை. ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் கோவிட் நோயாளிகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது உறுதி.

நோயை நாம் வென்று விடுவோம் என்ற நம்பிக்கையை எல்லா கரோனா நோயாளிகளும் தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். கோவிட் சிகிச்சையில் மருந்து மாத்திரைகளைத் தாண்டி, தன்னம்பிக்கையே முக்கியமான பங்காற்றுகிறது. திருவள்ளூரில் 76 வயது முதியவர் அரை டஜன் நோய்களுடன் கரோனாவை வென்றார் என்ற செய்தி எனக்குப் பெரும் நம்பிக்கை ஊட்டியது. டைப்-1 சர்க்கரை நோய், காசநோய்க்கான நடப்பு சிகிச்சை ஆகிய இரண்டு துணைநோய்கள் இருந்தாலும், 10 நாள் கோவிட்-19 சிகிச்சையில் நலம்பெற்று வீடு திரும்பிவிட்டேன்.

அரசு கவனத்தில் கொள்ளுமா?

என்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகள் ஒருபக்கம் இருந்தாலும் கே.எம்.சி., ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் கண்ட மற்றுமொரு அதிர்ச்சிகரமான உண்மை தூய்மைப் பணியாளர்கள், உணவு விநியோகம் செய்பவர்கள் என அத்தியவாசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் யாருமே முறையான பாதுகாப்பு வசதிகளுடன் இல்லாமல் பணிபுரிந்ததுதான். கையுறை, தனிநபர் பாதுகாப்பு உடை என எதுவும் இல்லாமல் அவர்கள் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் தற்காலிக ஊழியர்களாக இருக்கலாம். கோவிட்-19 சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்களின் வாழ்க்கையும் உயிரும் அனைவருக்கும் இணையானதுதானே, அவர்களுடைய பாதுகாப்பு முக்கியமில்லையா? ஆனால், அவர்களோ கோவிட்-19 தொற்றைப் பற்றிக் கவலைப்படாமல் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அதேபோல் மருத்துவமனை சார்ந்த நிர்வாக நடைமுறைகள், ஏற்பாடுகளில் ஒருங்கிணைப்பு இன்மையையும் சற்றே அலட்சியத்தையும் பார்க்க முடிகிறது. உணவு ஒப்பந்ததாரர்கள், தூய்மைப் பணி ஒப்பந்ததாரர்கள், நிர்வாகப் பிரச்சினைகள் ஆகியவற்றைக் களைந்து சரியான திட்டமிடலுடன் அரசு முன்னேறிச் சென்றால் மட்டுமே கோவிட் பெருந்தொற்றை முழுமையாக வெற்றிகொள்ள முடியும்.

கோவிட்-19 பெருந்தொற்றைச் சமாளிக்கப் போதுமான படுக்கை வசதிகள் இருக்கின்றன என்று அரசு மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்கிறது. அதற்கேற்ப ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் மேம்பட்டு இருக்க வேண்டும். அத்துடன் ஊழியர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்துவது, முறையான உணவு வசதியை உத்தரவாதப்படுத்துவது, படுக்கை வசதிகளை அதிகரிப்பது, கோவிட்-19 பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, மக்களிடம் தெளிவான-திட்டவட்டமான தகவல்களைத் தெரியப்படுத்துவது போன்றவை முக்கியம். அப்போதுதான் முன்களப் பணியாளர்களும் மக்களும் நம்பிக்கை பெற்று, நாம் அனைவரும் இணைந்து இந்த நோயை வெற்றிகொள்ள முடியும் என்ற உறுதியுடன் அரசுக்குப் பக்கபலமாகச் செயல்படுவார்கள்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: sram72451@gmail.com

தவறவிடாதீர்!கோவிட்-19 சிகிச்சைஊழியர் பாதுகாப்புஇரட்டை நோய்அனுபவப் பகிர்வுCovid 19 treatmentகரோனா வைரஸ்கோவிட் 19கரோனா தொற்றுBlogger specialதானே முன்வந்து சோதனை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x