

உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோத கும்பல் ஒன்றால் 8 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியைப் பார்க்கும்போது, ஓடிடி தளத்தில் ஒரு கேங்ஸ்டர் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. அத்தனை ரத்தம், வன்முறை. அந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்ட விகாஸ் துபேயின் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் வலைப்பின்னல்களும் அதே ரகம்தான்!
நடந்தது என்ன?
சில நாட்களுக்கு முன்னர் கான்பூர் மாவட்டத்தின் செளபேபூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் திவாரி எனும் நபர், காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். தன்னைச் சுட்டுக்கொல்ல விகாஸ் முயன்றதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து விகாஸைக் கைது செய்ய, ஜூலை 2-ம் தேதி இரவு, பிக்ரு கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் காவலர்கள் சென்றனர். அங்கு அவர்கள் செல்வதற்குச் சற்று முன்னர் அங்கு மின்சாரம் தடைப்பட்டிருந்தது. விகாஸின் வீட்டுக்கு முன்பு ஒரு ஜேசிபி இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து வாகனங்களிலிருந்து இறங்கிய காவலர்கள், ஒருவர் பின் ஒருவராக ஜேசிபி இயந்திரத்தைக் கடந்து செல்ல ஆரம்பித்தனர். அப்போது விகாஸ் வீட்டின் மேல் தளத்திலிருந்து சரமாரியாகத் துப்பாக்கி குண்டுகள் சீறிவந்தன. ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த காவலர்கள் எதிர்த் தாக்குதலை நடத்தத் தொடங்குவதற்குள் சேதம் கடுமையாக ஏற்பட்டுவிட்டது. ஒரு டிஎஸ்பி, 3 துணை ஆய்வாளர்கள், 4 கான்ஸ்டபிள்கள் என 8 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலை நடத்திவிட்டு, பின் வாசல் வழியாக விகாஸும் அவரது கும்பலும் தப்பிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கும்பலைச் சேர்ந்த 3 பேரைப் போலீஸார் சுட்டுக்கொன்றனர். விகாஸின் கூட்டாளி தயாசங்கர் அக்னிஹோத்ரி கைது செய்யப்பட்டார்.
விகாஸும் அவரது மற்ற கூட்டாளிகளும் இதுவரை பிடிபடவில்லை. அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்கள் என்று ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் தொடங்கி நேபாளம் வரை பல்வேறு இடங்களைச் சொல்கிறார்கள். ஆனால், இதுவரை அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. விகாஸைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகை இப்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
யார் இந்த விகாஸ்?
1990-ல் ஒரு கொலைச் சம்பவத்தின் மூலம் குற்ற உலகில் நுழைந்தவர் விகாஸ். இதுவரை கொலை, ஆட்கடத்தல், கலவரத்தில் ஈடுபடுதல் என 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் அவர் மீது உண்டு.
2001-ல், பாஜக தலைவர் சந்தோஷ் சுக்லாவை, காவல் நிலையத்தில் வைத்துச் சுட்டுக்கொன்ற சம்பவத்துக்குப் பின்னர் பெரிய அளவில் பேசப்பட்டார் விகாஸ். அந்தக் காலகட்டத்தில் லல்லன் பாஜ்பாய் எனும் ரவுடியும் செல்வாக்குடன் இருந்தார். இருவருக்கும் இடையில் தொழில் போட்டி உச்சமடைந்த நிலையில், 2001 அக்டோபர் 12-ல் லல்லனைக் கொல்வதற்காக அவரது வீட்டை விகாஸும் அவரது கும்பலும் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அவரைக் காப்பாற்ற முயன்ற சந்தோஷ் சுக்லா, உதவி கோரி ஷிவ்லி காவல் நிலையத்தை அணுகினார். அந்தத் தகவலை எப்படியோ தெரிந்துகொண்ட விகாஸும் அவரது கூட்டாளிகளும் காவல் நிலையத்துக்கே சென்று சந்தோஷ் சுக்லாவைச் சுட்டுக்கொன்றனர்.
சில மாதங்களுக்குப் பின்னர் சரணடைந்த விகாஸ், சில மாதங்களிலேயே கொலைக்குப் போதிய சாட்சிகள் இல்லை என்று சொல்லி அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். காவல் நிலையத்தில் இருந்த காவலர்களே அந்தச் சம்பவத்தின் நேரடி சாட்சிகள். ஆனால், விகாஸின் அரசியல் செல்வாக்கு காரணமாக காவலர்கள் யாருமே அதுபற்றி வாய் திறக்க மறுத்துவிட்டனர். எப்படியும் விகாஸ் வெளியில் வந்துவிடுவார் என்று பயந்தனர்.
அரசியல் செல்வாக்கு
உண்மையில் விகாஸின் வளர்ச்சியில் பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி என்று மூன்று முக்கியக் கட்சிகளுக்கும் பங்கு உண்டு. பகுஜன் சமாஜ் கட்சியில் மட்டும் 15 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கிறார் விகாஸ். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற பாஜகவினர் பலரும் அதற்கு முன்னர் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளில் இருந்தவர்கள். அவர்களுடன் விகாஸுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, என்கவுன்ட்டருக்குப் புகழ்பெற்ற யோகி ஆதித்யநாத் ஆட்சியிலும், அவரது ராஜ்ஜியம் நீடித்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார் விகாஸ். சிறைவாசம் பற்றிய கவலையும் விகாஸ் கும்பலுக்கு இல்லை என்கிறார்கள். சிறையில் இருந்தபடியே, பல குற்றங்களுக்கு அவர் திட்டமிட்டிருக்கிறார். தனது அடியாட்களை ஏவிவிட்டுப் பலரைக் கொலை செய்திருக்கிறார்- தனது உறவினர்கள் உட்பட!
தான் வசிக்கும் பிக்ரு கிராமத்திலும் தனது செல்வாக்கை வலுவாக நிறுவியிருக்கிறார். கிராமத்துக்கு வெளியே அவரது பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருப்பதே அதற்குச் சாட்சி. போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், விகாஸ் கும்பலால் அரணாகப் பயன்படுத்தப்பட்ட அதே ஜேசிபியை வைத்தே அவரது வீடு இடிக்கப்பட்டது. அப்போது வீட்டின் சுவர்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. “கள்ளப் பணத்தைப் பதுக்கி வைப்பதுபோல் சுவர்களில் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்ததைப் பார்க்க எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது” என்கிறார் களத்தில் நின்ற காவலர் ஒருவர்.
காவல் துறையினருக்குப் பெருமளவில் லஞ்சம் வழங்கியிருக்கிறார் விகாஸ். தன்னைக் கைதுசெய்ய காவலர்கள் வருகிறார்கள் எனும் தகவல் 5 மணி நேரத்துக்கு முன்பே அவருக்குச் சென்றுவிட்டது. அவருக்குத் தகவல் தெரிவித்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எப்படி என்றும் விசாரணை நடக்கிறது.
யோகி அரசின் தோல்வியா?
“சமூக விரோதிகள், கொலைகாரர்கள், திருடர்கள், ரவுடிகள், மாபியா கும்பல்கள் உத்தரப் பிரதேசத்தை விட்டுத் தயவுசெய்து எங்காவது சென்றுவிடுங்கள். இங்கேயே இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு இரண்டு இடங்கள்தான் (சிறை அல்லது சவக்குழி) காத்திருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தவர் முதல்வர் யோகி ஆதித்யநாத். அவரது ஆட்சிக்காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் பல என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எனும் பெயரில் பலர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களும், சிறுபான்மையினரும்தான் அதிகம் எனும் குற்றச்சாட்டு உண்டு.
ஆனால், முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த விகாஸ் மீது சட்டத்தின் இரும்புக் கரங்கள் நீள்வதற்கு, 8 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்வரை ஏன் யோகி அரசு காத்திருந்தது எனும் கேள்வி தற்போது முன்வைக்கப்படுகிறது. இத்தனை குற்ற வழக்குகள் இருக்கும் நிலையிலும், கான்பூர் மாவட்டத்தின் ‘டாப் 10’ குற்றவாளிகளின் பட்டியலில் விகாஸின் பெயர் இடம் பெறாதது ஏன் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அதேபோல, அதிரடிப் படை வெளியிட்ட 30 முக்கியக் குற்றவாளிகளின் பட்டியலிலும் விகாஸின் பெயர் இடம்பெறவில்லை.
1980-களில் உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற சட்டவிரோதக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதில் முனைப்புடன் ஈடுபட்டார் அப்போதைய முதல்வர் வி.பி.சிங். எனினும், 6 காவலர்களும் ஒரு நீதிபதியும் சமூக விரோத கும்பல்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்று பெரிய அளவில் அரசியல் அழுத்தம் தரப்பட்டது. இதையடுத்து வி.பி.சிங் பதவி விலகினார். இப்போது அதே போன்ற ஒரு சூழலை யோகி எதிர்கொள்கிறார்.
உயிருடன் பிடிபடுவாரா?
“யோகியின் ஆட்சியில் சமூக விரோதச் செயல்கள் முடிவுக்கு வந்துவிட்டன என்று பலமுறை சொல்லப்பட்டது. ஆனால், கான்பூரில் காவலர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதைக் கேள்விக்குறியாக்கி யிருக்கிறது” என சிவசேனா நாளிதழான ‘சாம்னா’ மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.
ஆனால், விகாஸின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகளும் துணை புரிந்தனர் என்று வாதிடும் பாஜகவினர், இந்த விஷயத்தில் அரசைக் கேள்விக்குட்படுத்தும் தார்மிக உரிமை அவர்களுக்கு இல்லை என்று உறுதியாக நிற்கின்றனர். இதற்கிடையே, விகாஸை வழக்கமான பாணியில் ‘முடித்துவிடாமல்’ உயிருடன் கைது செய்ய வேண்டும் என்று மஜ்லிஸ்-இ-இத்ஹாதுல் முஸ்லிமன் கட்சித் தலைவர் ஒவைஸி அழுத்தம் தருகிறார்.
“காவலர்களின் உயிர்த் தியாகம் வீணாகி விடாது” என்று உறுதியுடன் சொல்லியிருக்கும் முதல்வர் யோகி, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளார். “என் மகனைக் கண்டவுடன் சுட்டு வீழ்த்துங்கள்” என்று விகாஸின் தாயாரும் கூறியிருக்கிறார்.
இந்தச் சூழலில், விகாஸ் உயிருடன் பிடிபடுவாரா, அல்லது என்கவுன்ட்டரில் கொல்லப்படுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும். சந்தனக் கடத்தில் வீரப்பன் கொல்லப்பட்டபோது அவரது அரசியல் தொடர்புகள் பற்றிய ஹேஷ்யங்களும் முடிவுக்கு வந்ததைப் போல, விகாஸின் கதையுடன் அரசியல் கிளைக் கதைகளும் முடிவுக்கு வருமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்!