Published : 06 Jul 2020 12:02 PM
Last Updated : 06 Jul 2020 12:02 PM

‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி

80 வருஷங்களுக்கு முன்னால கொங்கு நாட்டு கிராமத்து ஆம்பிளைகளுக்கு மூணு வேலைகள் நிச்சயம்.

ஒண்ணு, காடுகரைகள்ல அருகு தோண்டறது; ரெண்டாவது சூலூர் குளத்தில தண்ணி வத்தினதும் வண்டல் மண் பாளம்பாளமா, சதுரஞ்சதுரமா வெடிச்சுக் கெடக்கும். செம்மண் பூமிகளுக்கு வண்டல் மண்தான் உரம். அதனால பொழுது கிளம்பறதுக்கு முன்னால வண்டி கட்டிட்டு, சூலூர் குளத்துக்கு போயி, ஒரு லோடு வண்டல் மண்ணை கொண்டாந்து, காட்டுக்குள்ளே குவிச்சுட்டு, வெயில் ஒறைக்கறதுக்குள்ள -இப்ப கணக்குப்படி கார்த்தால 9 மணிக்குள்ளே -மறுக்கா ஒரு தடவை போயி ரெண்டாவது லோடு அடிச்சிட்டு வந்திருவாங்க.

ஒரு வாரம் கழிச்சு, அங்கங்க, குட்டு குட்டா, குமிச்சு வச்சிருக்கற, வண்டல் மண்ணை, மத்த ஏரியாவுக்கு மண் வெட்டியால அள்ளி வீசி, பரப்பி விடுவாங்க.

‘அருகு’ தோண்டறது, ஒரு தலைவலி. ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றின்னு பெரிசுக எந்தக் காலத்திலயோ வாழ்த்தீட்டு போயிடுச்சுக. அந்த அருகு என்னதான் முக்கி முக்கி 2 அடி ஆழம் போயி வேரோட புடுங்கிப் போட்டாலும், அடுத்த மழைக்கு பழையபடி ஒரு வேர்லருந்து கிளைகிளையா பிரிஞ்சு, மறுபடியும் வரப்புலயும், காட்டுக்குள்ளயும் பரவீரும்.

மண் மக்கள்

பழையபடி 2 ஆள் கடப்பாறையும், மண்வெட்டியுமா போயி, அருகு தோண்ட வேண்டியதுதான்.

மூணாவது கிணத்து வெட்டுக்கு போறது. அதை விட கஷ்டமான வேலை அந்தக் காலத்துல எதுவுமே இல்லே.

நொய்யல் ஆத்துப் படுகையில, உள்ள கிணறுகளில எப்பவும் நீர் ஊத்தம் (ஊற்று) இருந்துகிட்டே இருக்கும்.

மேட்டாங்காட்டு கிணத்தில, தண்ணி ஊத்துக்கு (ஊற்றுக்கு) வழியே இல்லை. போதாக்குறைக்கு வட்டப்பாறைக் கிணறுன்னு வச்சுக்குங்க, கிணறு தோண்டறவன், செத்தான்.

6 பட்டையுள்ள நீளக்கடப்பாறை, 12 பவுண்டு சம்மட்டி, இதுகதான் ஆயுதம். 2 உருண்டை ‘களி’யப் போட்டு கெட்டி தயிறு ஊத்தி பெசைஞ்சு (கரைத்து) வெங்கலகிளாசில 4 டம்ளர் அடிச்சிட்டு, கிணத்துக்குள்ளே இறங்கினா, 2 மணி நேரத்திலேயே பசி வயித்த கிள்ளும்.

சாக்கு துணிய கையில சுத்திட்டு, 6 பட்டை கடப்பாரைய ஒருத்தன் புடிச்சுக்கோணும்; மத்தவன் 12 பவுண்டு சம்மட்டிய, கடப்பாறை மேலே ஓங்கி அடிக்கோணும். கடினமான அந்தப் பாறையில 6 அடி ஆழம் குழிதோண்ட உச்சிப்பொழுது ஆயிரும்.

துருத்திப் பெட்டி

போட்ட குழிக்குள்ளே, வெடி மருந்தைக் கொட்டி, நல்லா ‘செடிஞ்சு’ உட்டுட்டு, அதுல திரியை இணைச்சு, கிணத்துக்கு மேலே கொண்டாந்திடுவாங்க.

கிணத்து மேட்டிலருந்து, 200 அடி தூரம் வரைக்கும் நீளமா திரிய கொண்டாந்துருவாங்க. தீ பத்த வக்கறதுக்கு முன்னாடி ரோடில ரெண்டு பக்கமும் வர்ற கார், பைக், பஸ்களை தடுத்து நிறுத்தீட்டு தீ வைப்பாங்க. ‘சொர, சொர’ன்னு தீ வேகமா எரிஞ்சுட்டு கிணத்துக்குள்ளே போயி, அந்த வெடிமருந்துல படும்.

கண்ணை மூடி முழிக்கறதுக்குள்ளே பூமியே அதிர்ற மாதிரி வெடி வெடிக்கும். ரோட்ல போற கார் மேல,

லாரி மேல எல்லாம் கருங்கல் துண்டுக போய் விழுந்து நாசம் பண்ணிடும். கால்பந்து சைசில ஒரு கல் புதுக்கார் மேல உழுந்து பேனட் சப்பளிஞ்சு, எஞ்சின் நின்னு போனதெல்லாம் உண்டு.

இந்த மாதிரி மாசக்கணக்கில குழியடிச்சு, வெடி மருந்து செடிஞ்சு வேட்டு வச்சுத்தான் 50 அடி, 60 அடி கிணறு வெட்டுவாங்க.

பொம்பளைகளுக்கு, ஏர் உழும்போது சால் போடறது, தண்ணி பாய்க்கறது, களையெடுக்கிறது, கதுர் அறுக்கறது, காஞ்ச சோளக்கதுருகளை, தடியால அடிச்சு சோளத்தைப் பிரிக்கறது, அதை காத்துல தூத்தறது, மூட்டை கட்டறதுக்கு ஒதவறது, இதுபோக மாடு மேய்க்கறது, பால் கறக்கறது, சோறாக்கறது, புள்ளை பெத்துக்கறது - இதுதான் அவங்க வேலை.

‘எங்கப்பார(ற)ய்யன்’ கொஞ்சம் ‘சோக்காளி’. ஒடம்பை வளைச்சு எந்த வேலையும் செய்ய மாட்டாராம். கிணத்து வெட்டுக்கு மருந்து வேணும்னு சொல்ல இவரே சந்தைக்குப் போயி ஒரு மூட்டை வெடிமருந்து வாங்கிட்டு வந்திருக்காரு.

எங்கள் வாழ்வாதாரமாக இருந்த தோட்டமும் கிணறும்

ஊட்டுக்குப் போற வழியில, தச்சாசாரி பட்டறை இருந்திருக்கு. சித்தாசாரி எங்கய்யன்கிட்ட பேச்சுக் குடுக்க, வெடிமருந்து மூட்டைய கீழே போட்டு அது மேலே உட்கார்ந்து சித்த நேரம் பேசீட்டு இருந்திருக்காரு.

சித்தாசாரி பட்டறையில, கரித்துண்டுகளைப் போட்டு, நெருப்பு வச்சு, துருத்திப் பொட்டிய சுத்த ஆரம்பிச்சதும், அதிலருந்து காத்து நெருப்பில பட்டு ‘மடமட’ன்னு கரில படர்ந்து ‘செக்கச் செவே’ன்னு ஆயிடுச்சு.

உள்ளே வச்சிருந்த மழுவு (கலப்பையில் உழுவதற்கு பயன்படும் இரும்பு பட்டை) நல்லா சூடாயி, ஆரஞ்சு கலர்ல மின்னிருக்கு. ஆசாரி சாக்குப்பைல அந்த மழுவை தூக்கி கல்லுமேல வச்சு சம்மட்டியால ஓங்கி அடிச்சிருக்காரு. நெருப்பு கங்கு ஒண்ணு தெறிச்சு வந்து எங்கப்பாரய்யன் உட்கார்ந்திருந்த வெடிமருந்து மூட்டை மேல உழுந்திருக்கு.

‘‘டமால்ல்...ல்..!’’ ஒரே புகை மண்டலம். எங்கய்யன் உட்கார்ந்திருந்த எடத்துல வெறும் ‘சாம்பல்’. கட்டிப்புடிச்சு அழுகவோ, அள்ளீட்டுப் போய், சுடுகாட்டில அடக்கம் பண்ணவோ அங்கெ ஒண்ணும் மிஞ்சலே.

கிணறு வெட்டிய ராமண கவுண்டர், ரங்கசாமி கவுண்டர்

இவரு கதை இப்படி முடிய சித்தாசாரி பொழைச்சது உலக அதிசயம். வெடிமருந்து வெடிச்சதில, ஆசாரி ஒடம்பு மேல இருந்த ‘பிய்த்தோல்’ (புறத்தோல் பகுதி) மொத்தமும் உறிஞ்சிடுச்சு. தோலுரிச்ச கோழி எப்படி இருக்கும், அப்படி ஆயிட்டாராம்.

ஏதோ அவருக்கு நல்ல நேரம் -பாலக்காட்டிலருந்து, சித்த வைத்தியரு, மீன் எண்ணெய் கொண்டாந்து, ஆள் படுக்கறளவுக்கு, மரத்தொட்டி ரெடி பண்ணி, அதில வாழை எலைய விரிச்சு விட்டு உரிச்ச கோழியாட்டமா இருந்த சித்தாசாரிய எலை மேல படுக்க வச்சு, முதுகுப்பகுதி நனையற மாதிரி, மீன் எண்ணெய ஊத்தி ஊற வச்சாராம். 2 மணி நேரம் ஆனதும், மல்லாக்க படுத்திருந்தவரை, திருப்பி குப்புற படுக்க வைப்பாங்களாம், முன்பக்கம் எண்ணெய்படணும்னு..

இப்படி ஆறுமாசமோ, ஒரு வருஷமோ போராடி, சித்தாசாரிக்கு ஆயுசு கெட்டியா இருந்ததனால -பொழைக்க வச்சிட்டாங்களாம்.

‘‘ஊட்டுக்குப் போன கவுண்டரை கூப்பிட்டு, ‘சித்த உக்காருங்க!’ன்னு கேட்டு அவரு உசிருக்கே ஒலை வச்சுட்டனே, பாவி!’’ன்னு, சாகற வரைக்கும் ஆசாரி சொல்லீட்டே இருந்தாராம்.

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x