Published : 05 Jul 2020 03:46 PM
Last Updated : 05 Jul 2020 03:46 PM

தடையை மீறி உலா வரும் டிக் டாக்; தகவலே தெரியாத தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள்!

பிரதிநிதித்துவப் படம்.

சீன ராணுவத்தினரின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, சீனாவின் 'டிக் டாக்', 'வி சாட்', 'ஹலோ' உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருக்கிறது. எனினும், மொழி அமைப்பில் மாறுதல்களைச் செய்து மீண்டும் பலர் 'டிக் டாக்'கைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகளுக்கே தகவல் தெரியவில்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவின் இளம் தலைமுறையினர் மத்தியில் இது ஏக பிரபலம். 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 'டிக் டாக்' செயலி 30 கோடிக்கும் அதிகமாகப் பதிவிறக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டாளர்கள், சில மணித் துளிகள் ஓடும் இசை அல்லது வசனத்துக்கு ஏற்ப நடித்து வெளியிடும் காணொலிகள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளும். சாமானியனும் தன் திறமையைக் காட்டுவதற்கு, ஒரு தளமாக 'டிக் டாக்' இருந்தாலும், நமது நாட்டில் ஒருபுறம் சாதிப் பெருமை பேசும் இடமாகவும், மற்ற சாதிக்காரர்களை மிரட்டி காணொலியைப் பதிவிடும் இடமாகவும் இருந்து வந்தது. இதனால்தான் 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ததைப் பலரும் ஆதரித்தனர்.

ஆனால், அரசின் ஆணைக்கிணங்க தடை செய்யப்பட்ட 'டிக் டாக்' சில நாட்களிலேயே மீண்டும் இந்திய மக்கள் மத்தியில் உலா வர ஆரம்பித்துள்ளது. தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 'டிக் டாக்' செயலி அகற்றப்பட்டிருந்தாலும் இணையத்தில் அந்தச் செயலிக்கான 'செட்டப் ஃபைல்' இன்னமும் கிடைக்கவே செய்கிறது. தடை செய்யப்பட்ட ஆரம்பத்தில், புதிதாகத் தரவிறக்கம் செய்தாலும் சரி, தடைக்கு முன்பிருந்தே செல்போனில் இருக்கும் டிக் டாக் செயலியைத் திறந்தாலும் சரி அது எந்தக் காணொலியையும் காட்டாமல் செயலற்று இருந்தது.

ஆனால், நம் மக்கள் அதற்கும் குறுக்குவழி கண்டுபிடித்துவிட்டனர். 'டிக் டாக்' செயலியில் இயங்கு மொழியாகத் துருக்கிய மொழியைத் தேர்ந்தெடுத்து, செல்போனை அணைத்துவிட்டு மறுபடியும் ஆன் செய்தால் 'டிக் டாக்' செயலி முன்பைப் போலவே இயங்குகிறது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 'டிக் டாக்'கைத் தடை செய்த மத்திய அரசு, இந்த வழிமுறையைக் எப்படி கவனிக்காமல் விட்டது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதுகுறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) மக்கள் தொடர்பாளர் பவன் விஜுவை அழைத்துப் பேசினோம். விஷயத்தைச் சொன்னதும் அதிர்ச்சியடைந்த அவர், "அப்படியா, எனக்குத் தெரியாதே" என்றார். தொடர்ந்து, "மத்திய அரசு தடைவிதித்த பின்னரும் இந்தச் செயலியை மக்கள் பயன்படுத்துவது சரியல்ல. இது நாட்டுக்கு எதிரானது" என்று கூறினார்.

இந்தப் பிழை எப்படிச் சரி செய்யப்படும் என்று கேட்டபோது, "இதற்கு நான் பதில் சொல்ல முடியாது" என்றார். யாரிடம் கேட்டால் பதில் கிடைக்குமோ அவர்களின் தொடர்பு எண்ணைத் தருமாறு கேட்டதும் தன் செல்போனில் எண்களைச் சிறிது நேரம் தேடிய அவர், தன்னிடம் அந்த எண் இல்லையென்றும், எண் கிடைத்த பின் அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். ஆனால், அவர் எந்த எண்ணையும் அனுப்பவில்லை.

இது தொடர்பாக, இந்திய தொலைத்தொடர்புத் துறையின் மக்கள் தொடர்பாளர் மோனிகாவிடம் விசாரித்தபோது, "இந்த விஷயத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதை நீங்கள் ஓர் எழுத்துபூர்வமான புகாராக அளித்தால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

'டிக் டாக்' செயலிக்குப் போடப்பட்ட தடையில் உள்ள இந்தக் குறை சாமானிய மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்பது புரியாத புதிர்தான்!

- க.விக்னேஷ்வரன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x