Published : 04 Jul 2020 05:57 PM
Last Updated : 04 Jul 2020 05:57 PM

சேரிங் கிராஸ் ஆதாம் நீரூற்று மீண்டும் எப்போது ஜொலிக்கும்?- ஊட்டிவாசிகள் எதிர்பார்ப்பு

தங்கள் மண்ணுக்குப் பெருமை சேர்த்த சுற்றுலாத் தலங்கள் கரோனா காரணமாக மூடப்பட்டிருப்பது ஊட்டி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக, ஊட்டி சேரிங் கிராஸில் அமைந்துள்ள ஆதாம் நீரூற்று எப்போது மீண்டும் இயங்கத் தொடங்கும் எனும் ஏக்கம் ஊட்டிவாசிகளிடம் ஏற்பட்டிருக்கிறது.

ஊட்டியின் பெருமைகளாக, தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், ஊட்டி ரயில், நைன்த் மைல் ஷூட்டிங் ஸ்பாட், பைக்காரா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இடங்கள் எல்லாம் கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாய் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பழக்கடை, பூக்கடை, பொம்மைக் கடை, பிஸ்கட் கடை வியாபாரிகள் எல்லாம் எங்கே போனார்கள், ‘வாங்க சார்..’ என்று வாடிக்கையாளர்களை வாஞ்சையுடன் அழைக்கும் லாட்ஜ்காரப் பையன்கள் என்னவானார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. சுற்றுலா முடங்கிவிட்டதால் ஊட்டி நகரம் மட்டுமல்ல, நீலகிரி மாவட்டமே ஒட்டுமொத்தமாய் வியாபாரமின்றி வாடுகிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி சேரிங் கிராஸ் குறித்த கவலைதான் ஊட்டிவாசிகளிடம் அதிகம் காணப்படுகிறது. எந்தத் திசையிலிருந்து ஊட்டியை நோக்கி வருபவர்களும் இந்த மையத்தைக் கடக்காமல் உள்ளே பிரவேசிக்க முடியாது. ஆறு சாலைகளை மையப்படுத்தும் சாலையைவிடவும், இதன் மையமாக வீற்றிருக்கும் ஆதாம் நீரூற்றுதான் பலருக்கும் விருப்பமானது. ஊட்டிக்கே அழகூட்டுவது இந்த ஆதாம் நீரூற்றுதான்.

1886-ல் அப்போது பதவியிலிருந்த ஆளுநரின் நினைவாக இந்த நீரூற்று உருவாக்கப்பட்டது. இதன் மொத்த செலவுத் தொகை சுமார் ரூ.14 ஆயிரம்தான். பொது நிதியுதவி மூலம்தான் இதைச் செய்திருக்கிறார்கள். முதலில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த நீரூற்று வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தேவையான தண்ணீர் வசதி இல்லாததால், 1898-ல் சேரிங் கிராஸ் மையத்திற்கு மாற்றப்பட்டது. அப்போதிருந்து இப்போது வரை ஊட்டிக்கு வருபவர்கள் முதலாவதாகத் தரிசிக்கும் இடமாகவும் விளங்குகிறது. இரவு நேரத்தில் பொங்கும் நீரூற்றும், அதில் ஜொலிக்கும் ஒளி வெள்ளமும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும். பகலிலும், இரவிலும் பல்லாயிரக்கணக்கானோர் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்கும் இடமாகவும் இது விளங்கி வந்திருக்கிறது.

இப்பகுதியைச் சேர்ந்த கடைக்காரர் கிருஷ்ணராஜ், “முக்கியத்துவம் வாய்ந்த ஆதாமின் நீரூற்றில் பொங்கிவரும் நீரையும், மின்னும் வெளிச்சத்தையும் கண்டு 100 நாட்கள் கடந்துவிட்டன. ஊட்டியில் எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் இந்த சேரிங் கிராஸ் ஆதாமின் நீரூற்று செயல்படாமல் இருப்பது ஊட்டியே இருண்டு கிடப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. இதைக் கடந்து போகிறவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் இதை நின்று ஏக்கமாக பார்க்காமல் நகர்வதில்லை. இதே ஆதாமின் நீரூற்று லண்டன் நகரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. அதை அடியொற்றியே இங்கே இதை அந்தக் காலத்திலேயே உருவாக்கியிருக்கிறார்கள். இதைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடாமல், புகைப்படம் எடுக்க விடாமல், நீரூற்றை இயங்க வைத்து ஜொலிக்க வைக்கலாம். இருண்டுபோன ஊட்டிக்குக் கொஞ்சம் வெளிச்சம் வந்த மாதிரியாவது இருக்கும்” என்கிறார்.

மேலும், “பெருந்தொற்று அபாயத்துக்கு நடுவே இது பேராசையாகத் தெரியலாம். ஆனால், முறைப்படி தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் எனும் உத்தரவுடன் இந்த நீரூற்றை மீண்டும் இயக்கினால், எங்கள் மனம் கொஞ்சமேனும் ஆறுதலடையும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x