

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது கை, கால் செயல்படாத நிலையிலும் தன் ஓவியத் திறமையினால் அசத்தி வருகிறார் முதியவர் ஒருவர். அரசு உதவித் தொகை எதுவும் கிடைக்காத நிலையில் வறியநிலையில் இருக்கும் அவர் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
புளியங்குடி அருகில் உள்ள திருவேட்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி(70) . தச்சு வேலை செய்துவந்த இவருக்குக் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதில் அவரது வலது கை, வலது கால் ஆகியவை செயல்படாமல் போனது. கூடவே அவரது பேச்சுத் திறனும் முற்றாக நின்றுபோனது. இந்நிலையில் வீட்டிலேயே முடங்கிய மாடசாமி இடது கையாலேயே மிகத் தத்ரூபமாக ஓவியங்கள் வரைந்து அசத்துகிறார்.
இதுகுறித்து முதியவர் மாடசாமி ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், ‘’எனக்கு மூணு பிள்ளைங்க. இதில் மூத்தவன் மாரிமுத்துகூடத்தான் இப்போ இருக்கேன். பக்கத்துல அருணாச்சலபுரம் கிராமத்துல மெடிக்கல் ஸ்டோர் வைச்சுருக்கான். பெரிய வருமானம் கிடையாது. ஆனாலும் என்னைய இந்த நிலமையில நல்லா கவனிச்சுக்குறான்.
நான் சின்ன வயசுல இருந்தே தச்சுவேலை பார்க்குறேன். எங்க திருவேட்டநல்லூர் கோயில் சப்பரம் நான் செஞ்சதுதான். அதுபோக சுத்துப்பட்டு கிராமத்துல நிறைய கோயில்களில் சிங்க வாகனம், மயில் வாகனமெல்லாம் செஞ்சுருக்கேன். இதுபோக கதவு, ஜன்னல்ன்னு நிறைய வீடுகளில் மரவேலை செஞ்சுருக்கேன். மர வேலையைத் தொடங்குறதுக்கு முன்னாடி அதை ஓவியமா வரைவோம். அந்த டிசைனிங் பார்த்துதான் செய்வோம். அதனால இயல்பாகவே ஓவியம் வரையத் தெரியும்.
பக்கவாதம் வந்து முடங்குனாலும் உடலுக்குத்தான் முடக்கமே தவிர, நம்ம திறமைக்கு இல்லைன்னு ஒரு வைராக்கியத்தோடதான் படம் வரைஞ்சுட்டு இருக்கேன். பொதுவாவே பக்கவாதம் வந்தவங்க தன்னால ஒன்னுமே முடியாதுன்னு சோர்ந்திடுவாங்க. நான் அப்படிச் சோர்ந்துடாம ஓரளவு இயங்கக் காரணமே இந்த ஓவியங்களை வரையுறதுதான். ஒவ்வொரு ஓவியமும் முடியும்போதும் மனசுக்குள்ள ஒரு உற்சாகம் பிறக்கும்.
பொருளாதாரரீதியாக ரொம்பக் கஷ்டமான சூழலில் இருக்கேன். கரோனாவால் பையனோட கடையிலும் ஆள்கள் வர்றதில்லை. அது கிராமத்தில் இருக்கும் கடைங்குறதால சொல்லிக்குற அளவுக்கு வருமானம் இல்லை. அரசிடம் முதியோர் பென்சனுக்கு பலவருசமா முயற்சி பண்ணியும் இதுவரை கிடைக்கல. அரசு என்னோட திறமையையும், இந்த நிலையையும் கவனத்தில்கொண்டு முதியோர் உதவித்தொகை வழங்குனா என்னோட மருந்து, மாத்திரை செலவாச்சும் வீட்டுப் பாரம் இல்லாம ஓடும்’என்றார்.