Published : 03 Jul 2020 08:28 PM
Last Updated : 03 Jul 2020 08:28 PM

தொடரும் தூய்மைப் பணியாளர்களின் துயரம்; கரோனா நிவாரண இழப்பீட்டுத் தொகை அவசியம்!    

புலம்பெயர்வுகளால் வைரஸ் தொற்றுப் பரவல் கோரத்தை விதைத்துவிட்டது. கரோனா அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். கரோனாவிற்கு மருந்தில்லா மருத்துவ நிலையே தொடர்வதாக பேசிக்கொண்டிருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொற்று ஏற்பட்டு இறக்கின்றனர்.

குழந்தைகள், முதியவர்கள், காவல்துறையினர், வியாபாரிகள், கர்ப்பிணிப் பெண்கள், அதிகாரிகள், பெரும் தனவந்தர்கள் என வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி மரணித்துக் கொண்டிருக்கின்றனர். தொடரும் அபாயங்களோடு வாழும் இறுக்கமான சூழல். உற்றார் உறவுகளோடு பிணைப்புகள் இன்றி தொடர்பற்றுப் போயுள்ளோம். பதைபதைப்புகளோடு ஊரடங்கில் அண்டை வீடுகளுக்கும் அந்நியமாகிப் போய் தனித்திட்டுகளாகிக் கிடக்கின்றோம்.

கரோனா பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயம். முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்து கொள்வது என்பதே முதற்கட்டமாகவும், முடிவுமாகவும் பாதுகாப்பு முறையை அரசு அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது.

அரசின் கட்டளைகளை மதித்து மக்களும் முடக்கத்தில் இருக்கிறோம். தினமும் கரோனா வார்டுகளாக உருவாக்கப்படும் நூற்றுக்கணக்கான பொதுக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் வார்டுகளாக ஆகிவிட்டன. திரும்பும் திசையெல்லாம் கரோனா வார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வார்டுகளில் மருத்துவர் எண்ணிக்கையை விடக் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

புதிய தூய்மைப் பணியாளர்களைக் களத்திற்கு அழைக்கும் செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. கோரத் தாண்டவம் ஆடி வரும் வைரஸை விரட்டும் ஆயுதமாக "புறந்தூய்மையே" பெரிதும் பேணப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. கரோனா பரிசோதனை மையங்களிலும், மருத்துவமனைகளிலும் இரவு பகலாக அர்ப்பணிப்போடு பணியாற்றி களப்பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர்களைப் பார்க்கிறோம். அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டுகிறோம். கூடுதல் மரியாதையாக தமிழக முதல்வரும் துப்புரவுப் பணியாளர் என்ற கீழ்மையைப் போக்கும் வகையில் "தூய்மைப்பணியாளர்கள்" என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.

வணங்கத்தக்க, போற்றுதலுக்குரிய, பாராட்டத்தக்க மருத்துவப் பணியோடு துப்புரவுப் பணியாளர்களின் களப்பணியும் மக்களால் சமமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது என்பது நிதர்சனம். தங்களது உயிரையும் தற்காத்துக் கொண்டு சிரத்தையோடு மருத்துவப் பணியாற்றும் மருத்துவர்களின் பணி மகத்தானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்களின் பரிந்துரைகளை ஏற்று மருந்தளிக்கும் மனிதநேயப் பணி செய்யும் செவிலியர்களும் மகத்துவத்திற்கு உரியவர்கள். ராணுவத் தளத்தில் ஆற்றும் பணிக்கு நிகராக கரோனா வைரஸ் தொற்றிலிருந்தும் மக்களைக் காத்திட போர்க்கால அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் களம் இறங்கியிருக்கிறார்கள். எனினும் பாரபட்சம் காட்டாத கோவிட்-19 உயிர்க்கொல்லி வைரஸ் துர்மரணங்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத அவல நிலை.

தூய்மையே நோயின் மருத்துவம் என்பதால் தூய்மைப் பணியாளர்களும் மருத்துவப்பணிகளுக்கு நிகராகப் பார்க்கப் பட வேண்டியவர்கள். தூய்மை பொது என்ற நிலையில் துப்புரவுப் பணியாளர்களின் பணியைப் பொதுவான மரியாதையோடு பணிப் பாதுகாப்பு அளித்து ஆவன செய்வதுதான் நாம் அவர்களுக்கு ஆற்றும் கடமை. அதுவே அவர்களின் பணியை பாதப் பூஜை செய்வதெனினும் சிறந்ததாகப் பார்க்கப்படும். மருத்துவர்கள் பணிக்காலங்களில் இறந்தால் அரசின் நிவாரணம் 50 லட்சம் எனத் தீர்மானிக்கும் ஆணையுடன் கரோனா ஊரடங்கு என்ற சொல்லானது பொதுமக்களின் நலனுக்குரியது என்ற அரசின் ஆணையை ஏற்றுக்கொண்டவர்கள் கால நேரம் பார்க்காமல் மருத்துவக் களங்களில் வைரஸ் தொற்றை விரட்டும் தூய்மைப் பணியைச் செய்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கும் "கரோனா நிவாரண இழப்பீட்டுத் தொகை" அவசியமானது.

பன்னெடுங்காலமாக பொருளாதார விளிம்பு நிலைக்குக் கீழ் இழுத்துச் செல்லப்படுபவர்களாக தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். நிரந்தரப் பணிப் பாதுகாப்பு இல்லாமல் தினக்கூலி அடிமைகளாகப் பாவிக்கப்படுகின்றனர். தூய்மைப் பணியாளரின் பறிபோகும் உரிமைகளைப் பற்றி நாம் பேசாமலே நகர்ந்து கொண்டுடிருக்கிறோம். அவர்களது மாந்த நேய சேவைக்கு பணிப் பாதுகாப்பு அளிப்பதே அவர்களுக்குச் செய்யும் மரியாதை. மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் படுக்கை உறைகளைச் சுத்தம் செய்வது, அவர்கள் பயன்படுத்திய கழிவுகளைச் சுத்தம் செய்வது, முகக்கவசங்கள், ஊசி, மருந்துக் குப்பைகளை அகற்றுவது, தமிழகம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களைப் பெருக்கி, சுத்தம் செய்வது மருத்துவக் கழிவுத் தொட்டிகளைக் கழுவி சுத்தம் செய்வது என மொத்தத்தில் மருத்துவம் என்ற சொல்லுக்குள் உறைந்திருக்கும் "சுத்தம் சுகாதாரம்"" என்ற அத்தனை பரிமாணங்களின் மொத்த உருவாக மருத்துவ வளாகங்களில் உள்ளும் புறமும் தூய்மைத் தோற்றத்தை கண்முன் நிறுத்தும் இவர்களின் பணி மகத்துவமானது.

அவர்கள் பணியின்போது ,உடல் பலவீனத்தால் சோர்வடைந்தால் ஓய்வு எடுத்துக்கொள்ளுவதற்கான இடம் குறித்து எண்ணிப் பார்க்கிறோமா? பல ஆண்டுகளாக அரசுப் பணியாளர் என்ற நிலையில் இருந்து விலக்கி, படிப்படியாக தனியார் மயப்படுத்தியும், ஒப்பந்த அடிபடையிலான பணிமுறைக்குத் தள்ளியும் பாவிக்கும் நிலை தொடர்கிறது. இத்தகைய துயரத்திலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் நினைக்கின்றனர்.

ஊராட்சி , நகராட்சி, பேரூராட்சி , மாநகராட்சி, காலிப் பணியிடங்களை அரசுப் பணியாக நியமனம் செய்திட வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்படும் நிலையில் அவை ஏற்கப்படல் வேண்டும். பல ஆண்டுகளாக நான்கில் மூன்று பங்கு தனியாரிடம் ஒப்பந்தத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதாக செய்தி. அது குறித்து கோரிக்கைகளும் வைக்கப்படுவதான நிலை. ஒப்பந்ததாரர்கள் தனியார் என்பதும் அவர்கள் தன்னிடமிருந்து இடைத்தரகரிடம் ஒப்படைக்க நினைப்பதும் அதனால் தூய்மைப் பணியாளரின் முழுமையான உழைப்பின் ஊதியமும் கைமாறி கைமாறி விவசாய நிலத்திலிருந்து இடைத்தரகர் மூலமாக கடைக்கு வந்த கதையாகிப் போய்விடுகிறது.

அரசு நிரந்தரப் பணியாளர்களாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படாமல் இருக்கும். இந்நிலையில்தான் அவர்களது எதிர்பார்ப்பும் நிறைவேற்றிட வேண்டப்படுகிறது. அதாவது, ஒப்பந்தப் பணிக்காலங்களிலும் துர்மரணங்கள் நேரிட்டாலோபணி ஓய்வு பெற்றாலோ ரூபாய் 10 லட்சம் தொகையை இறந்தவரின் இழப்பீட்டுத் தொகையாக குடும்பங்களுக்கு வழங்குவது எனவும் அத்தொகையினை உயர்கல்வி பெறாத சமூகச் சூழலில் அவரது வாரிசுக்கு அத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையிலும் திட்டம் வரையறுத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே தனியான "தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்குவது" அவர்களது இட ஒதுக்கீட்டு அடிப்படையில் உரிய உரிமைகளை முழுதாகப் பெற வழி வகுக்கும். சமூகத்தில் சமத்துவ நிலை உருவாகிட பயனுள்ளதாய் அமையும்.

மேலும் பணி சார்ந்த நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் பயனாக அமையும். சமூக சீர்திருத்தப் பங்காற்றிட ஏதுவாக அமையும். அதற்கான முன்னெடுப்பு அவசியம். அவர்களின் விவரங்களைப் பொதுவாக அறிந்து கொள்வதற்கு உரிய விவரணைகள் அடங்கிய குறிப்பேடுகளும் உருவாக்கிட வேண்டும்/ ஆதலால், தூய்மைப் பணியாளர் பணியில் சேரும்போதே அவரது தன் விவரப்பட்டியலை மின்னணுப் பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள தூய்மைப் பணியாளர்களை அரசு மின்னணு இயந்திரத்தில் பதிவேற்றம் செய்து வெளிப்படைத் தன்மையோடு எல்லா மண்டலங்களிலும் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் பதிவுகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றுவரை அத்தகைய நடைமுறை பயன்பாட்டில் இருந்தால் அதனை மேலும் வரை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் அவர்களது பணி விவரங்களோடு தகவல் தொகுப்பாக பதிவிடல் வேண்டும்.

கரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பலனின்றி உயிரிழந்த நிலையில் அரசின் நிவாரண நிதியும் கிடைப்பதில் அக்குடும்ப உறுப்பினர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதால் கரோனா காலத்ததில் இறந்தவரின் தூய்மைப் பணியாளர் பட்டியல் அந்தந்த மாவட்டம் வாரியாக பதிவுசெய்திட வேண்டும். வாரிசுகளுக்கு நிவாரணம் கிடைத்திடும் வகையிலும் கருணை அடிப்படையிலான பணி வழங்கிடும் வகையிலும் ஆக்கப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என அரசிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் ஒப்பந்தப் பணிகளால் பணி நிரந்தரம் இன்றி, பணிநிரந்தரப்படுத்தப்படும் உத்தரவாதமும் இன்றி, நிர்கதியோடு வாழும் அவர்களை கரோனா காலத்திலும் மரணபயத்தோடு பயணிக்க வைக்கும் துயர நிலையே தூய்மைப் பணியாளர்களுக்குத் தொடர்கிறது. துயர் துடைக்க ஆவன மேற்கொள்ளும் அரசு தூய்மைப் பணியாளரின் பெயர் மாற்றத்தைப்போல் வாழ்வாதாரத்திலும் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என நம்புவோம்.

முனைவர்.க.அ.ஜோதிராணி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரி. சென்னை- 600 002.
தொடர்புக்கு: jothirani.ka@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x