Published : 03 Jul 2020 07:59 PM
Last Updated : 03 Jul 2020 07:59 PM

மாதம் ரூபாய் 6000 உதவித்தொகை அளித்தாலே பட்டினிச் சாவுகளைத் தடுக்க முடியும்; மத்திய அரசின் அறிவிப்புகள்: ஒரு அலசல் பார்வை

இந்தியாவில் முறையாகத் திட்டமிடாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, சாமானிய மக்களை வெகுவாகப் பாதித்து வருகிறது. இன்னமும் மக்கள் பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் தவித்து வருகிறார்கள். இதற்கிடையில், மத்திய அரசு அவ்வப்போது சில அறிவிப்புகளை அறிவித்து, மக்களையும், தொழிலாளர்களையும் காக்கத் தீவிர முயற்சி எடுப்பது போல ஒரு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த முயன்று வருகிறது. உண்மையில் இத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்திருந்தால், மக்களுக்கு அரசு எதிர்பார்க்கும் பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டிருக்கும். மாறாக, இந்த அறிவிப்புகளை சற்று கூர்ந்து ஆராய்ந்தால் மட்டுமே உண்மை புலப்படும்.

முதன்முதலாக அறிவிக்கப்பட்ட 1,70,000 கோடி திட்ட உதவிகள் குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். இதில் 63 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு (சுமார் ஏழு கோடி உறுப்பினர்கள்). ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் கடனை உயர்த்தி 20 லட்சமாக அறிவித்தார்கள். இந்தச் சூழலில், ஒரு குழு 20 லட்சம் கடன் பெறுமானால், குழு உறுப்பினர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபட இயலாது. மேலும் பெரும்பாலான உறுப்பினர்கள் நுகர்வுத் தேவைகளுக்காக பணத்தைச் செலவிட்டு விடுவார்கள். இதை வட்டியுடன் அவர்கள் மீண்டும் கட்டுவது மிகவும் சிரமம். இது கூட, எத்தனை குழுக்களுக்கு இதுவரை கிடைத்திருக்கிறது என்ற புள்ளி விவரம் இல்லை. மக்கள் மீது அக்கறை உள்ள அரசு என்றால் மானியமும் வட்டியில்லாக் கடனும் அறிவித்திருக்க வேண்டும்.

கரோனா தடுக்கும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாராமெடிக்கல் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 50 லட்சம் வரை காப்பீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள். குறிப்பாக தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள். அவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. காவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் போன்று பல அரசுத் துறையினர் கரோனா பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது. இவர்கள் அறிவித்த காப்பீட்டில் பயன்பெற்ற நபர்கள் யாரேனும் உதாரணமாக காட்டினால் நன்றாக இருக்கும்.

வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் அவர்கள் கட்டிய தொகையில், 75 சதவீதம் வரை பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் 4.8 கோடி பணியாளர்கள் பயன்பெறுவர். ஆனால், அவரவர் கட்டிய பணத்தை அவரவருக்கு திருப்பித் தருவதில் அரசின் பங்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு முதலாளி மற்றும் தொழிலாளி இருவரின் பங்களிப்பான, 24 சதவீதத்தை அரசே செலுத்தும். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் சந்தோஷப்படத் தோன்றும். ஆனால் நிபந்தனைகளைக் கேட்டால், இதனால் யாருக்கும் பலன் இருக்காது என்பது புரியும். முதல் நிபந்தனை, நிறுவனங்களில் 100 தொழிலாளர்களுக்கும் குறைவாகப் பணிபுரிய வேண்டும். இரண்டாவது, பணிபுரியும் தொழிலாளர்களில் 90 சதவீதத்திற்கு மேல் 15 ஆயிரத்திற்கும் குறைவான ஊதியம் பெற வேண்டும். தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் 20 பேர் பணிபுரியும் தொழிற்சாலைகளில் குறைந்தது 18 பேர் ரூபாய் 15 ஆயிரத்துக்குக் கீழ் ஊதியம் பெற வேண்டும். மேலாளர், கணக்காளர், கண்காணிப்பாளர் மூவர் ,ரூபாய் 15,000க்கு மேல் ஊதியம் பெற்றால் இத்திட்டம் பொருந்தாது. மேலும் வருங்கால வைப்பு நிதி என்பது ஊதியத்தின் அடிப்படையில்தான் பிடித்தம் செய்யப்படும். தற்போது ஊழியர்கள் கேட்பது எங்களுக்கு ஊரடங்கு காலத்திற்கான சம்பளத்தைக் கொடுங்கள் என்பதுதான். சம்பளமே கொடுக்காமல் எதன் அடிப்படையில் பிஎஃப் கணக்கீடு செய்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

புதிதாகக் கட்டிடம் கட்டும்பொழுது, கட்டிட மதிப்பில் ஒரு சதவீதம் தீர்வைத் தொகையாக, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திற்குச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த வாரியத்தில் பணம் இருப்பு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 3.5 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநில நலவாரியங்களில் உள்ள 31,000 கோடி தொகையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அறிவித்துள்ளது. இது மத்திய அரசின் நிதி உதவி அல்ல. இதை இவர்கள் வந்து அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

அடுத்து 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம். அதில், 3 லட்சம் கோடி, சிறு /குறு தொழில்களை மேம்படுத்த அறிவிக்கப்பட்டது. 45 லட்சம் சிறு / குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும் என்று சொல்லப்பட்டது. முதலாவதாக இது வங்கிகள் வட்டிக்கு வழங்கும் கடன். இதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. இரண்டாவதாக அவர்கள் கணக்குப்படி, சராசரியாக ஒரு நிறுவனத்திற்கு சுமார் 6 லட்சம் மட்டுமே வழங்க இயலும். இது பல நிறுவனங்களுக்கு ஒரு மாத சம்பளம் தரக் கூடப் போதாது. இறுதியாக, வங்கிகள் கடன் தர அரசு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. வங்கிக்கும், நிறுவனத்திற்கும் இருக்கும் தொடர்பைப் பொறுத்து, வங்கிகளே கடன் வழங்கும். அரசு உண்மையாக உதவி செய்ய எண்ணினால் வட்டியில்லாக் கடன், மானியம் என்று அறிவித்து, தொழிலை மேம்படுத்த வேண்டும்.

அடுத்தது 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, 3500 கோடியில் திட்டம். இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி / கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு. ஒரு மாதத்திற்கு 219 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு குடும்பம் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் என்ற மத்திய அரசின் எண்ணத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். புலம்பெயர் தொழிலாளிக்கு ஒரு மாத உணவுக்கு என்ன தேவைப்படும் என்று தெரியாமல் அறிவிப்புகளை வெளியிடுவது ஆபத்தானது. இதில் எத்தனை பயனாளிகள் பயனடைந்தார்கள் என்ற விவரத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

அடுத்தது, 3 கோடி சிறு விவசாயிகளுக்கு 30,000 கோடி ரூபாய் மற்றும் 50 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு 5000 கோடி ரூபாய் கடன் என்ற அறிவிப்பு. சராசரியாக, ஒரு நபருக்கு ரூபாய் 10,000 கடன் வழங்கப்படும். கடனைப் பெற்றவர்கள் வங்கிகளுக்கு வட்டியுடன் செலுத்த வேண்டும். இதில் மத்திய அரசின் உதவி எதுவும் இல்லை.

தற்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரூபாய் ஐம்பதாயிரம் கோடியில் ஒரு திட்டத்தை அறிவித்தார்கள். மொத்தம் ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பி உள்ளதாகவும், இது 67 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை 125 நாளைக்கு வழங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறைந்தது 25,000 புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வந்த மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, ஏற்கெனவே இருக்கக்கூடிய அரசுத் திட்டங்களை, இணைத்து தேசிய நெடுஞ்சாலை அமைத்தல், ஊரக சாலை அமைத்தல், ரயில்வே பணிகள், சமுதாய சுகாதார வளாகம், பஞ்சாயத்து அலுவலகம், குளங்கள் வெட்டுதல், கால்நடைக் கூடாரங்கள் போன்ற 25 வகையான பணிகளைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதைக் கேட்டவுடன் அரசைப் பாராட்டத் தோன்றியது, ஆனால் விவரமாகப் பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கிறது.

இந்தத் திட்டம் பிஹார் (32 மாவட்டம்), மத்தியப் பிரதேசம் (24 மாவட்டம்), உத்தரப் பிரதேசம் (31 மாவட்டம்), ராஜஸ்தான் (22 மாவட்டம்), ஜார்க்கண்ட்- (3 மாவட்டம்), மற்றும் ஒடிசா (4 மாவட்டம்) ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் 94% பாஜக ஆளும்/ கூட்டணி உள்ள மாநிலங்கள். 66 சதவீதம் நேரடியாக பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள்.

அவர்களில் 67 லட்சம் பேருக்கு ஏற்கெனவே அரசு திட்டமிட்டுள்ள 25 வகையான பணிகளில் திறனுக்கு ஏற்ற வேலைக்கு ஈடுபடுத்தப்பட்டு, அந்த மாநிலத்தில் எந்தெந்த திட்டத்தில் என்ன ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அது வழங்கப்படும். முதலாவதாக இதன் மூலம் அனைவருக்கும் 125 நாள் உறுதியாகத் தரப்படுமா என்று தெரியவில்லை. இரண்டாவதாக 125 நாள் கழித்து இவர்கள் என்ன வேலை செய்வார்கள் என்ற விளக்கமும் இல்லை. இது ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவது, ரோடு போடுதல், உட்கட்டமைப்பு வேலைகள் மேம்படுத்துதல் என 25 வகையான வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும். இதில் பெருமளவு தொகை இடுபொருள்களுக்கே செலவிடப்படும். இதில் கூலி எவ்வளவு என்ற விஷயம் தெளிவாகச் சொல்லப்படவில்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வங்கிகளில் கொடுக்கப்படும் கடன்கள், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களின் மதிப்பீடு இவற்றையெல்லாம் திட்டங்களாக அறிவிப்பது அபத்தமானது. புரியும்படி சொல்லவேண்டும் என்றால், மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடம் தோறும் 8% GDP-யை ஊதியமாகக் கொடுக்கிறார்கள். இது சுமார் 15 லட்சம் கோடி என்று வைத்துக் கொள்வோம். இந்த ஊதியம் வழங்கப்பட்டுதான் ஆகவேண்டும். இதை, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 15 லட்சம் கோடியில் திட்டம் என்று அறிவிப்பது நகைச்சுவைக்கு உரியது. தற்போது மத்திய அரசு அறிவிக்கும் பெரும்பாலான திட்டங்கள் இதைப் போலத்தான் இருக்கிறது

மக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பது உண்மையான, நேர்மையான அறிவிப்புகள். வெறும் கவர்ச்சிகரமாக ஆடம்பரமாக அறிவிக்கப்படும் வெற்று அறிவிப்புகளால் மக்களுக்குப் பயனில்லை.

பிஎம் கேர்ஸ் என்ற நிதி கரோனா ஊடரங்குக் காலத்தில் தொடங்கப்பட்டது. வெளிப்படைத்தன்மைப் பற்றி பேசும் அரசு, இந்த நிதியை யாரெல்லாம் கொடுத்தார்கள்? எதற்காகச் செலவிடப்பட்டது? என்று இதுவரை கூறவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் வசதி ஏற்பாடு செய்வதற்குக் கூட மனமில்லாமல் நடந்து கொண்ட விதம் வேதனை. ஏற்கெனவே அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டண உயர்வு என அதிர்ச்சி கொடுப்பது நியாயமற்றது.

அரசின் சாயங்கள் வெளுக்கத் தொடங்கிவிட்டன. இனியாவது மக்களுக்குப் பயனுள்ள வகையிலான திட்டங்களை யோசித்துச் செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டுக் கார்களில் பயணித்துக் கொண்டு ஆண்ட்ராய்டு அலைபேசி பயன்படுத்திக்கொண்டு, பல் விளக்க, குளிக்க, சவரம் பண்ண என அனைத்திலும் வெளிநாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, உலகமயமாக்கலில் உள்நாட்டுப் பொருள் எதுவென்று தெரியாத மக்களிடம், சுயசார்பு இந்தியா என்ற ஜாலத்தைப் பயன்படுத்தாதீர்கள். யாரும் சுயசார்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் அதற்கான திட்டம் எதுவும் இல்லாமல் இருப்பது சரியல்ல. ஏற்கெனவே அரசு செயல்படுத்திய ஸ்மார்ட் சிட்டி, ஸ்வச் பாரத், மேக் இன் இந்தியா, GST, கருப்பு பணம் ஒழிப்பு போன்றவற்றின் நிலை அனைவருக்கும் தெரியும்.

கனடா நாட்டில் மாதம் 1,400 அமெரிக்க டாலர் வீதம் நான்கு மாதங்களுக்கும், அமெரிக்காவில் 1200 டாலர்களும், ஹாங்காங்கில் 1280 டாலர்களும், ஜப்பானில் 931 டாலர்களும், தென்கொரியாவில் 820 டாலர்களும், சிங்கப்பூரில் 422 டாலர்களும் நேரடியாக வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரான்சில் 86 சதவீதம் ஊதிய இழப்பை சரி செய்ய நிதி வழங்கப்படுகிறது. ஜப்பான் நாட்டில் அவர்களது ஜிடிபியில் சுமார் 20 சதவீதமும் அமெரிக்காவில் 14 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 11 சதவீதமும் கரோனாவை எதிர்கொள்ள நிதி ஒதுக்கியுள்ளனர்.

ஆகவே,

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”

என்பதைப் புரிந்துகொண்டு, இனிமேலாவது மக்களின் அல்லல் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு மாதம் ரூபாய் 6000 உதவித்தொகை அளித்தாலே இந்தியாவில் பட்டினிச் சாவுகளைத் தடுக்க முடியும். அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிதிஉதவி, தொழில்களை மேம்படுத்த வங்கி கொடுக்கும் கடனுக்கு வட்டியை அரசு செலுத்துவது, வட்டியில்லாக் கடன்கள், மானிய உதவி, ஊரடங்கு காலத்திற்கான ஊதியங்களை வழங்குவது, அநியாய பெட்ரோல் / டீசல் விலையை குறைப்பது என ஆக்கபூர்வமாக செயல்பட்டால் மக்கள் அரசைப் போற்றுவார்கள்.

- ப.இளவழகன்,
சமூகச் செயற்பாட்டாளர்,
தொடர்புக்கு: ilavazhagan2020@gmail.com.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x