

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராகத் தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மாற்றம் மட்டுமே போதுமா? சீருடைப் பணியாளர்கள் தேர்வில் கல்வித் தகுதியை மாற்றியமைப்பதற்கான நேரமாக இதைக் கருதலாமா? என்று யோசிக்க வேண்டிய தருணம் இது.
தமிழகக் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராகச் சேருவதற்கான தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி. இதனால், ஒவ்வொரு முறை காவலர் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் போதும், காலியிடங்களைப் போல 10 மடங்கிற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கிறார்கள். முதலில் எழுத்துத் தேர்வு. பிறகு, உடல் தகுதித் தேர்வு, அதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை. அனைத்திலும் தேர்ச்சி என்றால், அவர்கள் தமிழகத்தில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி அல்லது அவ்வப்போது ஏற்படுத்தப்படும் தற்காலிகப் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டு 6 மாத காலப் பயிற்சி அளிக்கப்படும்.
பிறகு ஒரு மாத காலம் காவல் நிலையங்களில் நேரடிப் பயிற்சி வழங்கப்படும். அதன் பிறகு அவர்களுக்குப் பணியிடம் ஒதுக்குவதே நடைமுறை. இந்த 6 மாத பயிற்சிக் காலத்தில், கவாத்து (ட்ரில்), துப்பாக்கி சுடுதல், சட்டம் தொடர்பான பயிற்சிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மக்களுக்காக, அவர்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுவதுதான் காவல் நிலையங்கள்.
"மக்களுக்குப் பணியாற்றவே நமக்குச் சம்பளம். அவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் போதுமான அளவுக்கு அவர்களுக்குக் கற்றுத் தரப்படுவதில்லை" என்கிறார் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்து படிப்படியாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக உயர்ந்த காவலர் ஒருவர்.
"காவல் நிலையப் பணி ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அதைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. சீனியர் காவலர்களும், அதிகாரிகளும் மக்களை எப்படி நடத்துகிறார்களோ அதுதான் சரியான முறை என்று கருதி இவர்களும் அதையே பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். உயர்ந்த எண்ணத்துடன் காவல்துறையில் சேரும் இளைஞர்களும் கூட முரட்டுப் போலீஸாக மாறும் சூழலே நம்முடைய சிஸ்டத்தில் இருக்கிறது.
எனவே, காவல் துறையில் சேர்வதற்கான கல்வித் தகுதியை உயர்த்த வேண்டும். அல்லது பயிற்சிக் காலத்தில் இதுகுறித்த விஷயங்களை அதிகமாகச் சொல்லித் தரலாம். பள்ளிகளிலேயே காவல்துறை குறித்த பாடத்தையோ, பாடப் பிரிவையோ உருவாக்குவது கூடுதல் பலன்களைத் தரும். இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அவ்வாறு சொல்லித் தரப்படுகிறது என்பதையும் நம்முடைய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் அவர்.