Published : 03 Jul 2020 02:10 PM
Last Updated : 03 Jul 2020 02:10 PM

என்று தணியும் யானைகளின் துயரம்?காதைத் துளைத்து மண்டையில் புகுந்து மூளைக்குள் பாய்ந்த குண்டு!

கேரள மாநிலத்தில் அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் காயமடைந்து கர்ப்பிணி யானை மரணமடைந்தது அனைவரையும் உலுக்கியது. யானைகளின் அகால மரணம் குறித்த விவாதத்தையும் அது எழுப்பியது. எனினும், யானைகள் கொடூரமாகக் கொல்லப்படும் அவலம் தொடரவே செய்கிறது. தமிழகத்திலும் இதே நிலைதான். நேற்று மேட்டுப்பாளையத்தில் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான பெண் யானையின் மரணம் அந்த அவலப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

கரோனா பொதுமுடக்கம் அமலில் இருக்கும் இந்த மூன்று மாத காலத்தில் கோவை வனக்கோட்டத்தில் மட்டும் 12 யானைகள் இறந்திருப்பது வன உயிரின ஆர்வலர்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வனத் துறையினரின் அலட்சியம்தான் யானைகளின் தொடர் மரணங்களுக்குக் காரணம் எனும் விமர்சனமும் எழுந்திருக்கிறது.

தமிழக- கேரள எல்லையான கோவை ஆனைகட்டி அருகே உள்ள ஜம்புகண்டி மலைக் கிராமப் பகுதியில், 12 வயது ஆண் யானை வாயில் அடிபட்ட நிலையில் எதுவும் சாப்பிட முடியாமல் சுற்றித் திரிந்தது. அதைக் காப்பாற்ற வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் கடந்த ஜூன் 22-ம் தேதியன்று அந்த யானை இறந்தது.

“உயிரிழந்த யானை சின்னக் கொம்பன் ஆகும். இது தன் கூட்டத்தைச் சேர்ந்த பெரிய கொம்பனுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அப்போது பெரிய கொம்பனுடைய தந்தம், சின்னக் கொம்பனின் தாடையில் பட்டுக் காயம் ஏற்பட்டிருக்க வேண்டும்” என்பதுதான் வனத்துறையினர் சொன்ன காரணம்.

ஆனால், வன உயிரின ஆர்வலர்களோ, ‘குட்டிக் கொம்பனைப் பெரிய கொம்பன் விளையாட்டுக்குக்கூட இப்படிக் காயப்படுத்த வாய்ப்பு இல்லை. வேறு ஏதோ நடந்திருக்கிறது. அதை வனத்துறை மூடி மறைக்கிறது” என்கிறார்கள்.

குண்டு துளைத்து இறந்த யானை

ஜூன் மாதம் மேட்டுப்பாளையம், சிறுமுகை டேம் காடு பகுதியில் அடுத்தடுத்த நாளில் இரண்டு யானைகள் இறந்திருக்கின்றன. ‘காடுகளில் தீவனம் இல்லை. வயிற்றில் புழு’ என்றெல்லாம் இதற்கு வனத்துறையால் காரணம் சொல்லப்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் நேற்று சிறுமுகை லிங்காபுரம் வனப்பகுதியில் ஒரு யானையும், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஐடிசி பம்ப் ஹவுஸ் அருகே ஒரு பெண் யானையும் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

லிங்காபுரத்தில் இறந்த யானை ரொம்பவும் மெலிந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததால், அதன் இறப்புக்கும், ‘தீவனம் இல்லை. உடல்நலக் குறைவு’ என்றே காரணம் சொல்லப்பட்டது. ஆனால், ஐடிசி பம்ப் ஹவுஸ் பகுதியில் இறந்து கிடந்த யானைக்கு அப்படிச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அதன் ஒரு பக்கத்தில் காதோரம் ரத்தம் வழிந்து உறைந்திருந்தது. அதைப் போஸ்ட்மார்ட்டம் செய்ததில் அதன் காதுகளைத் துளைத்து மூளைக்குள் ஒரு ஈயத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

யானையைச் சுட்டுக் கொன்றதாக, தேக்கம்பட்டியைச் சேர்ந்த ராமசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். யானையைக் கொல்ல அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, யானையின் உடல் கிடந்த இடத்தின் அருகே ஓடைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வனத்துறையினர் அதைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், “இப்படிப்பட்ட துப்பாக்கிகளும், ஈயத் தோட்டாக்களும் இங்குள்ள விவசாயிகளிடம் சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் தங்கள் தோட்டங்காட்டுக்குள் நுழையும் காட்டு யானைக் கூட்டத்தைத் துப்பாக்கியால் சுட்டே விரட்டுகிறார்கள். அதில் காயமடையும் யானைகள் காயம் அழுகி சீழ் பிடித்து ஒரு கட்டத்தில் மரணமடைந்துவிடுகின்றன. அவை அடர் வனத்திற்குள் சென்று உயிரை விடுவதால் ஓரிரு வாரங்கள், சில சமயம் மாதக்கணக்கில் ஆன பின்புதான் வனத்துறைக்கே தகவல் தெரியவருகிறது. அதனால் யானைகளின் மரணம் எதனால் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. வனத்துறை மருத்துவர்களும், பெயரளவு போஸ்ட்மார்ட்டம் செய்து, ‘தீவனம் இல்லை. வயிற்றில் புண்’ என்று சொல்லி விஷயத்தை ஊற்றி மூடிவிடுகிறார்கள்.

இப்போது இந்த யானை மண்டைக்குள் ஈயக்குண்டு பாய்ந்திருந்த விவகாரம்கூட, சுடப்பட்ட சில நிமிடங்களில் தோட்டத்திற்கு அருகிலேயே அது இறந்துகிடந்ததால்தான் தெரியவந்துள்ளது. கால், வயிறு, தொடைப் பகுதிகளில் குண்டு பாய்ந்திருந்தால் இந்த யானையும் காயத்துடன் மாதக்கணக்கில் காட்டுக்குள் அலைந்து திரிந்து பின்னர் இறந்திருக்கும். அந்த விஷயம் வெளியே வராமலே போயிருக்கும். குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். இப்படியானவர்கள் உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்களா என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்கு இப்படி யானைகளைச் சுட அதிகாரம் கொடுத்தது யார்? இதை ஏன் வனத் துறையினர் இன்னமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்?” என்றெல்லாம் வன உயிரின ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதுகுறித்து கோவை ஆனைகட்டியைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ஜோஸ்வா கூறுகையில், “கடந்த சில மாதங்களில் உயிரிழந்திருக்கும் யானைகள் எல்லாம் 10 வயதிலிருந்து 20 வயதிற்குள்ளான இளம் யானைகள். அவற்றுக்கு வயிற்றில் புண்ணோ, புழுவோ, வேறு நோய்களோ வருவதற்குச் சாத்தியமில்லை. அவை விவசாயத் தோட்டத்தில் காய்வெடி போன்றவற்றால் காயமடைந்தோ, துப்பாக்கியில் சுடப்பட்டோ மரணமடைகின்றன. அல்லது பசியால் தண்ணீர் இல்லாமல் போதிய தீவனம் இல்லாமல் சாகின்றன. வனத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள தோட்டங்காடுகளில் சட்டவிரோதமாகத் துப்பாக்கிப் பயன்பாடு, வெடிகள் பயன்பாடு இருந்தால் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு போலீஸார் மற்றும் வனத்துறையினர் கையிலேயே இருக்கிறது.

கைது செய்யப்பட்ட இருவர்

அடுத்தது, காடுகளில் யானைகளுக்கான நீராதாரத்தையும் தீவனத்தையும் ஏற்படுத்தும் பொறுப்பும் வனத் துறையினர் கையிலேயே உள்ளது. முன்பெல்லாம் வேனிற்காலத்தில் காடுகள்தோறும் போய் வனவிலங்குகளுக்கு உப்புக் கட்டிகள் வைப்பது, நீர்நிலைகள் அமைப்பது, நீர்த்தொட்டிகளை நிரப்புவது போன்ற பணிகளை இடையறாது செய்து வந்தார்கள். இப்போது கரோனா காலத்தில் அவர்கள் அப்படிச் செய்கிற மாதிரியே தெரிவதில்லை. தோட்டங்காடுகளைக் கண்காணிப்பது போலவும் தகவல் இல்லை.

இப்போதும்கூட ஆனைகட்டி, பனப்பள்ளி மலைக்காடுகளில் மூன்று கூட்டத்து யானைகள் சுற்றுவதைப் பார்க்கிறேன். அவை யாவும் மிகவும் மெலிந்தே இருக்கின்றன. இதற்கெல்லாம் வனத் துறையினரே பொறுப்பு. வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. காடுகளை சரியாகக் கண்காணிப்பதில்லை. ஒரு ரேஞ்சர் மூன்று ‘ரேஞ்சு’களை கவனிக்கும் கொடுமையெல்லாம் நடந்து வருகிறது. இதனால், இன்னமும் இப்படியே எத்தனை யானைகளை இவர்கள் சாக விடுவார்களோ?” என்று வேதனையுடன் சொன்னார்.

இப்போதுகூட சிறுமுகை டேம் காடு பகுதியில் ஒரு யானை மெலிந்து எலும்பும் தோலுமாக உயிருக்குப் போராடி வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

என்றுதான் ஓயுமோ யானைகளின் துயரம்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x