Published : 02 Jul 2020 12:33 PM
Last Updated : 02 Jul 2020 12:33 PM

தைரியமாக இருப்பதுதான் ஃபேஷனுக்கான தகுதி!

பட்டாம்பூச்சியின் உற்சாகத்தைத் தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்குப் பரப்புவதுதான் இளமையின் பலம். ஊரடங்கு காலத்தில் நண்பர்களிடமிருந்தும் கல்லூரியிலிருந்தும் பிரிக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் செல்போன் மூலமே பெரும்பாலும் தொடர்பில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் செல்போன் வழியாகவே நண்பர்களுடன் விளையாடிவருகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம்விட, இந்த ஊரடங்கில் ஏதாவது பயனுள்ளதாகச் செய்யலாமே என்று செயல்படும் மாணவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சென்னை தரமணியிலுள்ள ‘சீர்மிகு சட்டப்பள்ளி’யில் சட்டம் படிக்கும் சௌஜனி ராஜன். இவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பை ‘பிங்க் இஸ் நாட் அவர் கலர்’ என்னும் தலைப்பில் நோஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பிங்க் நிறத்துக்கு மென்மை, வலுவின்மை என்பதான அர்த்தம் அனைத்தும் கற்பிதமே. பெண்களுக்கு பிங்க் சாயம் பூசப்பட்டு அவர்களுடைய உண்மையான உறுதியும் வலிமையும் மறைக்கப்படுகின்றன. பூசப்பட்ட சாயத்திலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும் என்பதை இவரின் கவிதை வரிகள் முழங்குகின்றன.

தனிமை வாரம்

“சட்டம் படித்துக்கொண்டிருக்கும் போதே, ஃபேஷன் டிசைனிங் துறையில் டிப்ளமோ படித்திருந்தேன். கவிதைகளுக்காகவும் ஃபேஷன் துறையில் என்னுடைய ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும்தான் யூடியூப் சேனலைத் தொடங்கினேன். ஆனால், அந்த நேரத்தில்தான் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கின் ஆரம்பத்தில் நானும் பலரைப் போல நண்பர்களைப் பிரிந்து கல்லூரிக்குச் செல்ல முடியாமல் சோர்வுடன் இருந்தேன். அதன் பிறகு நான் எதற்காக யூடியூப் சேனலைத் தொடங்கினேனோ அதை முன்னிலைப்படுத்தாமல் சில விஷயங்களைப் பற்றி அதில் பேசலாம் என்று முடிவெடுத்தேன்.

ஊரடங்கின்போது நான் அனுபவித்த தவிப்பை ‘குவாரண்டைன் வீக்’ என்றும், 24 மணிநேரம் செல்போன் இல்லாமல் இருந்தால்கூட ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடாது என்பதைப் பற்றியும், லாக்டவுனில் செய்ய முடிகிற 15 விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் என்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டேன். இந்த வீடியோக்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருப்பதை அறிந்து சந்தோஷமாக இருந்தது.

ஊரடங்கின்போது அம்மாவை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் வெறிச்சோடிய தெருக்கள், மக்கள் வெள்ளத்தை இழந்த மால்கள், வாகனங்கள் இல்லாத சாலைகள் போன்றவற்றையே ஒரு வீடியோவாக பதிவேற்றினேன்” என்று சொல்லும் சௌஜனி ராஜன், ஃபேஷன் தொடர்பான வீடியோக்களையும் யூடியூபில் பதிவேற்றிவருகிறார்.

நவீன உடையான அம்மாவின் புடவை

“இந்த ஊரடங்கில் ஷாப்பிங் போக முடியாது. ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கும் வழியில்லை. இப்படிப்பட்ட நாளில் அம்மாவின் புடவையை நவீன உடையாக எப்படி வடிவமைத்தேன் என்பதையே ஒரு காணொலியாக யூடியூப்பில் பதிவேற்றினேன். இதைப் பலரும் பாராட்டியிருந்தனர்.

பொதுவாகவே மெல்லிய உடல் வாகு கொண்டவர்கள்தான் ஃபேஷனாக உடுத்த முடியும், அவர்களுக்குத்தான் நவீன உடைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. நாம் துணிவோடும் தன்னம்பிக்கையோடும் உடை அணிவதில்தான் எல்லாமே இருக்கிறது என்பதைப் புரியவைப்பதற்காகத்தான் இந்த வீடியோவை எடுத்தேன். உடல் அமைப்பு இப்படி இருந்தால்தான் ஃபேஷன் செய்ய முடியும் என்ற கருத்து இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை நம்முடைய துணிவாலும் திறமையாலும் நிச்சயம் கடந்துவர முடியும். அதைத்தான் அந்த வீடியோவில் நான் செய்தேன்.

கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணிக்குச் செல்லும் பெண்கள்வரை பலரும் கமெண்ட் பாக்ஸில் தங்கள் அன்பைப் பொழிந்திருந்தனர். ஊரடங்கு காலம் முடிந்ததும் ஃபேஷனுடன் டிராவல் தொடர்பான வீடியோக்களைப் பதிவேற்றும் எண்ணம் இருக்கிறது” என்கிறார் சௌஜனி.

ஃபேஷன் உடையை உருவாக்கும் காணொலியைக் காண:


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x