

குட்டியை வயிற்றில் சுமந்திருந்த ஒரு யானைக்கு, மனித நேயமற்ற சிலர் வெடிகுண்டை மறைத்துவைத்த அன்னாசிப் பழத்தைக் கொடுத்துக் கொன்றது, நாட்டின் எல்லைகளைக் கடந்து பலரையும் கண்ணீர்விட வைத்தது.
உணவு தேடி வந்ததற்காய்
உயிரைப் பறிப்பதா
ஐந்தறிவு ஜீவனிடத்தில்
மனிதம் மரித்ததா
ஆறறிவுள்ள மனிதா நீ
அன்பைத் துறப்பதா..
என்னும் உணர்ச்சிபூர்வமான வரிகள் தூத்துக்குடியைச் சேர்ந்த இசை ஆசிரியர் இசக்கியப்பனின் சிந்தையில் உதித்தன. உடனே அதற்கு இசை சேர்த்துத் தன்னுடைய மாணவிகளைக் கொண்டே பாடவைத்திருக்கிறார் இசக்கியப்பன்.
விலங்குகளைத் துன்புறுத்தக் கூடாது, ஒவ்வோர் உயிரின் முக்கியத்துவம், இயற்கையைப் பாதுகாப்பதின் மூலமும் விலங்குகளின் வழித்தடங்களைக் காப்பாற்றுவதன் மூலமும் அவற்றுக்கு உண்டாகும் நன்மைகள் என்பது போன்ற விழிப்புணர்வை ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்னும் பாடலைப் பாடி யூடியூபில் பதிவேற்றியிருக்கின்றனர்.
தூத்துக்குடியில் ‘சாரதா கலைக் கூடம்’ எனும் இசைப் பள்ளியை பன்னிரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ம.இசக்கியப்பன், தேசிய அளவில் நடக்கும் இசைப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு மாணவர்களைத் தயார்படுத்திவருகிறார். இதுவரை மூன்று முறை தேசிய இளையோர் திருவிழாவில் இந்தப் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றிருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச இசைப் பயிற்சியை அளிப்பதோடு, தன்னுடைய வருமானத்தில் கால் பகுதியை ஒதுக்கி ஐந்தறிவு உயிர்களுக்கு உணவளித்து வரும் சேவையையும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு உதவும் சேவையையும் இசக்கியப்பன் செய்துவருகிறார்.
‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ பாடலைக் கேட்டு வனத் துறை அதிகாரிகள் பாராட்டியதோடு, இயற்கை பாதுகாப்பு குறித்த பாடல் ஒன்றையும் எழுதிப் பாடுவதற்கு இசக்கியப்பனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். அதற்காகச் சதுப்பு நிலக் காடுகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு தினத்துக்கான பாடலை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இவர் தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கும் கலை வளர் மணி உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
பாடலைக் காண: