

ஜனவரியிலேயே கரோனா என்ற வார்த்தை என்னுடைய செவியில் விழத் தொடங்கினாலும், பிப்ரவரியில்தான் அது என்னுள் அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. என்னுடைய அச்சம் கணவருக்கும் மகளுக்கும் புரியவில்லை. மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோதுதான் எனக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது.
நீடிக்காத மகிழ்ச்சி
மகளும் கணவரும் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினர். மகள் எந்நேரமும் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தார். வீட்டிலிருந்து வேலை என்பதால், கணவர் கணினியே கதியென்று இருந்தார். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை டீ கேட்பது தொல்லையாக இருந்தாலும், அது சமாளிக்கத்தக்கதாகவே இருந்தது. 24 மணிநேரமும் அவர்கள் என்னுடனே இருப்பது முதலில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தன. ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை.
சலிப்பும் அலுப்பும்
ஏதாவது பேசினாலோ கேட்டாலோ உம்மென்பதோ ஆமென்பதோதான் பதில். எவ்வளவு நேரம்தான் சும்மா இருப்பது என்று, போனில் ஏதாவது வீடியோ பார்த்தால், அந்தச் சத்தம் தொந்தரவாக இருக்கிறது என்று குறை சொல்வார். சரி, மகளுடன் இருக்கலாம் என்று அவளிடம் வந்தால், அவள் ஏதோ கார்ட்டூன் தொடரில் மூழ்கியிருப்பாள்.
வேலையெல்லாம் முடிந்த பிறகு, சற்று படுத்தால், “என்னம்மா பகலில் இப்படிப் படுத்திருக்கிறாய்” என்று அலுத்துக்கொள்வார். அதன் பிறகு எப்படிப் படுக்க மனமிருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர். எனக்கு மட்டும் செய்வதற்கு எதுவுமில்லாமல் இருப்பது போல் தோன்றியது. தோன்றியது என்பதைவிட அந்த மாதிரித் தோற்றம் எனக்குள் ஏற்படுத்தப்பட்டது என்பதே உண்மை.
கணவரின் சவால்
இது போதாது என்று, அவர் வேறு அறிவுரை என்ற பெயரில் என்மீது குறைகளை அடுக்கத் தொடங்கினார். ஒழுங்காகத் திட்டமிட்டுச் செய்தால், சமையலையும் வீட்டு வேலைகளையும் இரண்டு மணிநேரத்தில் முடித்துவிடலாம் என்று எளிதாகச் சொன்னபோது, நான் வெடித்துவிட்டேன். “எதையும் வாயால் சொல்வது எளிது” என்று நான் கோபத்துடன் சொன்னபோது, வீட்டு வேலைகளை மறுநாள் இரண்டு மணிநேரத்துக்குள் தானே செய்து காட்டுவதாகச் சவால்விட்டார்.
அலங்கோலத்தில் முடிந்த சவால்
அடுத்த நாள் காலையிலேயே அவர் சவாலில் இறங்கிவிட்டார். சொன்னது போல, இரண்டு மணிநேரத்தில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டதாக என்னிடம் வந்து பெருமையுடன் சொன்னபடி, அவருடைய அலுவலக வேலைக்கு ஆயுத்தமானார். பரவாயில்லையே என்று எண்ணியபடியே, நான் சமையலறைக்குச் செல்லும்போது, துணிகளைத் துவைத்து பால்கனியில் அவர் காயப்போட்டு இருந்தது என் கண்ணில்பட்டது. அவரைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று எண்ணியபடி சமையலறையை அடைந்தபோது, எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சமையலறை அவ்வளவு அலங்கோலமாக இருந்தது. தரை முழுவதும் ஈரமாக நசநசவென்று இருந்தது..
எண்ணெய்ப் பிசுக்குடனும் கறைகளுடனும் கேஸ் அடுப்பு பார்க்கவே அருவருப்பாக இருந்தது. சமையல் மேடையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சரி பாத்திரங்களை எடுத்து வைக்கலாம் என்று எண்ணி, பாத்திரங்களைத் தொட்டால், அவையும் எண்ணெய்ப் பிசுக்குடன் இருந்தன. அது போதாது என்று பல பாத்திரங்கள் அடிப்பிடித்துக் கருகிய நிலையிலிருந்தன. அவர் நிகழ்த்தியிருந்த அலங்கோலங்களைச் சரிசெய்வதற்கு எனக்கு ஐந்து மணிநேரத்துக்கு மேல் ஆனது.
தனிமையே ஆசுவாசம்
வீட்டுவேலைகள் எல்லாம் எளிதானவை என்ற எண்ணம் ஆண்களின் மனத்தில் ஊறிக்கிடக்கிறது. இதற்கு இவரும் விதிவிலக்கல்ல. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன், தொலைக்காட்சியிலோ கைபேசியிலோ மூழ்கித் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் ஆண்களுக்கு, பெண்களுக்கும் அது தேவை என்ற புரிதல் இருப்பதில்லை. பெண்களுக்கு ஆசுவாசம் என்பது, கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் கிடைக்கும் தனிமையே. இப்போது அதற்கும் வழியில்லை என்பதால், சிறு சிறு பேச்சுவார்த்தைகளும் பெருத்த சண்டையில் முடிகின்றன.
இந்த சூழலில்தான் பரஸ்பரம் இருவரும் அவரவர் வேலையை மதிக்கத் தொடங்கியுள்ளோம்.
- ஹமிதா நஸ்ரின்.