

கரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க கோவில்பட்டியில் ஆயுர்வேத மூலிகைகள் கொண்டு முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி நடந்தது. இதற்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாக சமூக இடைவெளி, ஊரடங்கு உத்தரவு, முகக் கவசங்கள், கையுறைகள், முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள், கிருமிநாசினி திரவங்கள், கபசுரக் குடிநீர் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆனாலும், இந்தியாவில் சுமார் 4.50 லட்சம் பேருக்கு மேல் கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கரோனா அபாயத்தை எதிர் கொள்வதில் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியே அக்கறையோடு செயல்படவேண்டிய வேண்டிய சூழல் அவசியமாக உள்ளது. இதில், முக்கியமானது பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய நேரத்தில் இருந்து முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விதமான முகக்கவசங்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. இதில், அறுவை சிகிச்சையின்போது அணியும் முகக்கவசம், அதிக பாதுகாப்பு கொண்ட என் 95 முகக்கவசம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆனால், என் 95 முகக்கவசம் ரூ.200-க்கும் மேல் விற்பனையாகிறது. அறுவை சிகிச்சையின்போது அணியப்படும் முகக்கவசம் விலை குறைவு என்றாலும், 4 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்த முடியாது. மேலும், துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் சலவை செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதால் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இது பாதுகாப்பற்றது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் கிளாசிக் கிரியேஷன் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் ஆயுர்வேத மூலிகைகள் கொண்ட முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஜெகதீஷ் சீனிவாசன், வெங்கட்ராமன் ஆகியோர் கூறும்போது, கரோனா வைரஸிடம் இருந்து மிக குறைந்த செலவில் பொதுமக்களை காக்கும் விதமாகவும் சர்வதேச தரத்திலும் முகக்கவசங்களை தயாரிக்க முடிவெடுத்தோம். இதில், 3 விதமான முகக்கவசங்களை என் 95 முகக்கவசத்துக்கு இணையாக தயாரித்துள்ளோம்.
எல்.சி.சி. பி.என்.95 கிளாசிக் ஷீல்ட் முகக்கவசம் நான்கு அடுக்குகளை கொண்டது. நூறு சதவிகித பருத்தி துணியாலான இந்த முகக்கவசத்தில் இரண்டு நுண்ணுயிர் வடிகட்டியுடன் தயாரிக்கப்படுகிறது. இதனை 50 முறை சலவை செய்து பயன்படுத்தலாம்.
மேலும், வலை அமைப்பிலான எல்.சி.சி. பிரைம் ஷீல்ட் முகக்கவசங்கள் தூசு மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதில், முகத்துக்கு எந்தவித தொந்தரவும் தராத வகையில் உட்புறம் லைக்ரா பின்னலாடை பயன்படுத்தப்படுகிறது. மேலும் காதுகளை அழுத்தாத வகையில் அட்ஜஸ்டபில் லைக்ரா எலாஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுகிறது.
முக்கியமாக எல்.சி.சி. பி.என்.95 ஆயுர்வேத மூலிகைகள் கொண்ட முகக்கவசங்கள் தயாரிக்கிறோம். இதில், நீர் நொச்சி, கிச்சிலி கிழங்கு, சித்தரத்தை, திருநீற்று பச்சிலை, வெட்டிவேர் உள்ளிட்ட 7 வகையான மூலிகைகளை பொடி செய்து மருத்துவ விகிதாசார முறைப்படி பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.
மூலிகை முகக்கவசங்கள் கிருமிகளை அழித்து தலைவலி, சைனஸ், மூக்கடைப்பு, துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், நாள் முழுவதும் இனிய நறுமணத்துடன் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
முகக்கவசங்கள் தயாரிக்க இந்திய அரசு நிறுவனமான SITRA (SOUTH INDIAN TEXTILES RESEARCH ASSOCIATION) ஆராய்ச்சி நிறுவனத்திடம் அனைத்து விதமான தரச்சான்றிதல்களையும் பெற்றுள்ளோம். 3 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் உற்பத்தி செய்துகிறோம், என்றனர்.