Published : 29 Jun 2020 07:58 PM
Last Updated : 29 Jun 2020 07:58 PM

கண்ணீர் விட்டுத் தவித்த தாய்;  மகனின் இறுதிச் சடங்குக்கு உதவிய சென்னை காவல்துறை 

சிறுநீரகங்கள் செயலிழந்து மூன்றாண்டுகளுக்கு மேல் போராடி சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார் சிவசங்கரன் (36). இறந்துபோன சிவசங்கரன் உடலை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஆதம்பாக்கம் மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதிக்காரியங்கள் அனைத்தையும் சென்னை மாநகரக் காவல்துறையினர் செய்து கொடுத்தனர்.

சென்னை ஆலந்தூர் பகுதியில் வசித்து வரும் மீராதேவி அம்மாவின் மகன் சிவசங்கரனுக்கு, கிட்னி பழுதடைந்தது. இதனால் 3 வருடங்களாக வாரத்துக்கு மூன்று முறை, மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள லயன்ஸ் கிளப் டயாலிசிஸ் சென்டரில், டயாலிசிஸ் செய்து வந்தார். கணவர் இல்லாத நிலையில், மகனைக் காப்பாற்றக் கையில் காசு பணமுமின்றி மீராதேவி அம்மா ரொம்பவே போராடி வந்தார்.
நானும் என்னால் முடியும்போதெல்லாம் உதவி வந்தேன்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி, ஜி.வி.பிரகாஷ், சூரி, யோகிபாபு, இயக்குநர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ், பத்திரிகையாளர் பிஸ்மி, அமெரிக்காவில் உள்ள ஆனந்த், அருண் முதலானோரிடம் உதவி கேட்டபோது தயங்காமல் சிவசங்கரனுக்கு உதவினார்கள்.

இந்தநிலையில், சிவசங்கரனின் உடல்நிலை மோசமானது. ஜூன் 26-ம் தேதி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘வயிற்றில் ரத்தக்குழாய் வெடித்துவிட்டது’ என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிவசங்கரனின் உடல் மோசமாகிக் கொண்டே வந்தது. ‘மூளையில் ரத்தக்கசிவு’ ஏற்பட்டது. 27-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சிவசங்கரன் காலமானார்.

மீராதேவியம்மா போன் செய்து விவரம் சொன்னபோது துடித்துப் போனேன். ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பினர், ‘எங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்கிறோம்’ என முன்வந்தனர். கரோனா காலம் என்பதால், சிவசங்கரனின் உடல் பரிசோதனைக்குப் பிறகே ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 28-ம் தேதி ஞாயிறு சென்னையில் முழு ஊரடங்கு. எனவே, இன்று (29-ம் தேதி) சோதனைக்குப் பிறகு உடல் ஒப்படைக்கப்பட்டது. பரிசோதனையில் சிவசங்கரனுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

மீராதேவியம்மாவின் நிலையை நமது இணையத்தில் செய்தியாகப் பதிவிட்டிருந்தோம். அந்தச் செய்தி மூலம் மகனை இழந்து வாடும் மீராதேவியின் நிலையை அறிந்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உடனடியாக உதவிட முன்வந்தார். துணை ஆணையர் திருநாவுக்கரசு வழிகாட்டுதலில் சென்னை மாநகரக் காவல்துறையினர் களம் இறங்கினார்கள்.

ஆலந்துர் வீட்டிலிருந்து மீராதேவியம்மாவை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் காவல்துறையினர் அழைத்து வந்தார்கள். செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் உதவி ஆணையர் மணி மற்றும் காவலர்கள், மீராதேவியம்மாவின் விருப்பப்படியே மருத்துவமனையில் இருந்து ஆதம்பாக்கம் மயானத்துக்கு எடுத்துவந்தனர். சுகாதாரத்துறை ஆய்வாளர் உள்ளிட்ட பலரின் உதவியுடன் அங்கே சிவசங்கரனுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

மேலும் மகனை இழந்து தவிக்கும் மீராதேவி அம்மாவிற்குத் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் ஆறுதல் அளித்தனர். ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற தாயின் வலி உணர்ந்து அவருடைய மகனின் இறுதிச் சடங்குகளைச் செய்து கொடுத்த காவல்துறையினரின் அர்ப்பணிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கணவரை இழந்து, இப்போது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மகன் சிவசங்கரனையும் இழந்து, ஆதரவற்ற நிலையில் நிற்கும் மீராதேவியம்மாவுக்கு, இதுவரை உதவிய உள்ளங்கள் உதவி செய்யத் தயார் என்று ஆறுதலும் அன்புமாகத் தெரிவித்ததில்தான் இருக்கிறது, எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதநேயம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x