Published : 29 Jun 2020 04:56 PM
Last Updated : 29 Jun 2020 04:56 PM

குழந்தைகளைப் படமெடுக்க (Kids Photography) ‘க்யூட்’ ரகசியங்கள்!

தமிழ்த் திரையுலகில் இன்று பிரபலமான ஒளிப்படக் கலைஞர்களாக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ‘தீரன்’ நரேன் முக்கியமானவர். திரைப் பிரபலங்களின் நேரத்தைப் பெற்றுப் படமெடுத்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில் அவர்களது உணர்வுத் தருணங்களைப் படமெடுத்தாலும் இது ‘தீரன் ஒளிப்படத் தருணம்’ என்று கூறும் அளவுக்கு தனித்த அடையாளங்களைத் தனது ஒவ்வோர் ஒளிப்படத்திலும் பதிப்பவர். வளரும் ஒளிப்படக் கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் தனது தொழில்நுட்ப ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வதிலும் திரைத்துறையில் இவருக்கு நல்ல பெயர் உண்டு.

‘தீரன்’ நரேன்

இவரது ‘வெளிப்புற’ போட்டோகிராபி ஒளிப்படவுலகில் பேசுபொருளாக இருந்து வருகிறது. பிரபலங்களைப் படமெடுப்பதற்கு அப்பால் திருமணங்களையும் குழந்தைகளையும் படமெடுப்பதிலும் வீடியோ செய்வதிலும் பிஸியாக இருந்துவருகிறது. அதிக எண்ணிக்கையில் குழந்தைகளையும் சிறார்களையும் படமெடுத்தவர் என ‘பானசோனிக் லூமிக்ஸ்’ கேமரா நிறுவனம் இவரைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ‘உலக ஒளிப்பட தின’மான இன்று அவரிடம் ‘குழந்தைகள் ஒளிப்படக் கலை’ பற்றிக் கேட்டதும் தனது அனுபவங்களையும் குழந்தைகளின் ‘க்யூட்’டான தருணங்களை எப்படிப் படம்பிடிப்பது எனும் ரகசியங்களையும் 'இந்து தமிழ் திசை'க்காகப் பகிர்ந்துகொண்டார்.

இனி அவர் பேசுவதைக் கேளுங்கள்:

குழந்தைகளைப் படமாக்குவது எளிதானதா?

“இன்னிக்கு இருக்கற காலகட்டத்தில் போட்டோகிராஃபி மிகப் பெரிய வளர்ச்சி அடைஞ்சிருக்கு. எத்தனை போட்டோ வேணும்? உங்க போன எடுங்க. விதவிதமா போஸ் குடுங்க. நீங்களே போட்டோ எடுத்துக்கோங்க. செல்ஃபிக்களால் நிறைஞ்சது தான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு. உலகில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பிகள் அளவுக்கு நம்ம கையடக்கக் கருவிகள்ல உலகம் முழுவதும் பில்லியன்களில் ஒளிப்படங்கள் குவிந்து கிடக்குது. ஆனால், அதையும் தாண்டி புரொஃபஷனல் போட்டோகிராஃபியோட பரிணாம வளர்ச்சி அளவிட முடியாதது. அதுல ஒரு வகைதான் குழந்தைகளை மட்டும் ஷூட் பண்றது. இதுக்கு சைல்ட் போட்டோகிராஃபி, கிட்ஸ் போட்டோகிராஃபி, பேபி போட்டோகிராஃபி அப்படின்னு பல பெயர்கள் இருக்கு.

எல்லாப் பெற்றோர்களுக்கும் குழந்தைகள விதவிதமா அழகழகா போட்டோஸ் எடுத்துப் பாக்க ஆசை. குழந்தையோட செல்ஃபியா எடுத்துத் தள்ளினாலும் ஒரு புகைப்படக் கலைஞர் குழந்தையை ஷூட் பண்றது வேற விதமான அழகு. சைல்ட் போட்டோகிராஃபி பண்ணும்போது சில விஷயங்கள்ல கவனமா இருக்கணும்.

பழகலாம் வாங்க!

புரொஃபஷனல் போட்டோகிராஃபில ரொம்பவே சுலபமான விஷயம் குழந்தைகள போட்டோ எடுக்கறதுதான். ஆனா அதுக்குச் சில விஷயம் மட்டும் மெனக்கெடணும். குழந்தைகளோட பழகணும். பொறந்த குழந்தைக்குக்கூட செல்போன் செல்ஃபி அப்படின்னா கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஆனா ஒரு புரொஃபஷனல் கேமராவ பாத்தா கண்டிப்பா பயம் இருக்கும். என்னடா இது இவ்ளோ பெரிய பெட்டி அப்படின்னு சில பல கேள்விகள் குழப்பங்கள்! அதை உடைக்கணும். அது மட்டுமில்லாம ஒரு போட்டோகிராஃபரா அந்தக் குழந்தையோட வீட்டுக்குப் போகும்போது அந்தப் பாப்பாவோட பார்வைல நீங்க ஒரு புது ஆள். அறிமுகம் இல்லா மனிதர்கள் எனும் பாதுகாப்பு இல்லாத ஒரு தன்மைய குழந்தைகள் உணரும். தயக்கம், பயம் காரணமா உங்க கிட்ட வராமையே இருக்கும். அதனால ‘வாங்க பழகலாம்’னு ரெண்டு மூணு முறை குழந்தைய மீட் பண்ணணும், பழகணும்!

இயற்கையும் விழித் திரையும்

ரொம்ப முக்கியமான விஷயம், இயற்கையான லைட்டிங்ல குழந்தைகளைப் படம் எடுக்கறது. எந்த ஒரு காரணத்துக்காகவும் கேமராவில் ஃப்ளாஷ் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் புகைப்படம் எல்லாமே எந்த விதமாக இருந்தாலும், எந்த எடத்துல எடுக்க விரும்பினாலும் அது நேச்சுரல் லைட்டிங்ல மட்டும்தான் எடுக்கணும். முக்கியக் காரணம் அவங்களோட ரெட்டினா எனப்படும் விழித்திரை. ரெட்டினாவோட முக்கிய வேலை ஒளியை உள்வாங்கி அதை சிக்னல்களா மாற்றி, என்ன காட்சி அப்படின்னு புரிந்துகொள்ள மூளைக்கு அனுப்பும். இது எல்லாமே மைக்ரோ நொடியில நடந்துரும். குழந்தைக்கு இந்த ரெட்டினா முழுமையா வளர்ச்சி அடைஞ்சு இருக்காது. அதனால குறிப்பட்ட அளவு வரைக்கும் வெளிச்சத்தை மட்டுமே உள்வாங்க முடியும். கேமராவில் இருக்கும் ஃப்ளாஷ் அதீத வெளிச்சம். ஃப்ளாஷ் பயன்படுத்தும்போது, குழந்தையோட கண்பார்வையில் குறைபாடு வர வாய்ப்புகள் இருக்கு. இதை நீங்க மனசுல வெச்சுக்கணும்.

அவர்களின் போக்கில்...

குழந்தைகள் ப்ரொஃபஷனல் மாடல்கள் அல்ல. ஒரு பழகிய குழந்தையைப் படமெடுக்கும்போது ‘இப்படி நில்லு... அப்படி கை வெச்சிக்கோ... இங்க பாரு... இப்படிச் சிரி..’ அப்படின்னு எல்லாம் சொல்ல முடியாது. சொல்ல அவசியமும் இல்ல. எந்த ஒரு காரணத்துக்காகவும் அவங்கள வற்புறுத்தக் கூடாது.
குழந்தையோட ஒவ்வோர் அசைவும் அவ்ளோ அழகா இருக்கும். சிரிக்கறது மட்டும் இல்ல. லேசா முறைக்கறது... சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ் எல்லாமே. ‘இப்படி நில்லு செல்லம்’ அப்படின்னு சொல்லி ஒரே ஒரு போட்டோ எடுக்கறது கூட ரொம்ப கஷ்டமான விஷயம். அவங்கள அந்த இயல்போட அப்படியே விடணும். அப்போ அந்த இயல்ப உங்க கேமரால படம் எடுக்கறது எவ்ளோ ஈஸி?” என்று மொத்த ரகசியங்களையும் கொட்டித் தீர்த்தார் ‘தீரன்’ நரேன்.

தொடர்புக்கு:jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x