

உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவான 377-ஐ நீக்கி தீர்ப்பு வழங்கியதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த வானவில் பெருமிதப் பேரணியில் மாற்றுப் பாலினத்தவரின் நண்பர்கள், அவர்களின் குடும்பத்தினர், நலன் விரும்பிகள் என திரளாகப் பங்கேற்று தங்களின் ஆதரவையும் அன்பையும் மாற்றுப் பாலினத்தவர்க்கு அளித்தனர்.
இந்த ஆண்டு கரோனா பேரிடரால் பேரணிகள் எதுவும் நடக்காத நிலையில் மாற்றுப் பாலினத்தவர் நடத்தும் கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பலவும் சமூக வலைதளங்கள் மூலமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.
ஊரடங்கின் காரணமாக பலவிதமான சமூகச் சிக்கல்களை எதிர்கொண்டாலும், மாற்றுப் பாலினத்தவரிடம் வெளிப்படும் சில நம்பிக்கையான முயற்சிகளைக் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் மாலினி ஜீவரெத்னம்.
`லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்’ ஆவணப்படத்தின் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்திருப்பவர் மாலினி ஜீவரெத்னம். ஆவணப்பட இயக்குநர், சமூகச் செயற்பாட்டாளர், மாற்றுப் பாலின மற்றும் தன்பால் ஈர்ப்புள்ள மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து பேசிவருபவர் மாலினி.
விடுதலைக்கான மாதம் ஜூன்
“எதிர் பாலின ஈர்ப்பை நாங்கள் யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. எங்களின் பால் ஈர்ப்பை முடிவுசெய்யும் சுதந்திரம் எங்களுக்கு உண்டு. அதைத்தான் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதி செய்தது. இந்த அடிப்படை அங்கீகாரம், அடுத்து எங்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தொடக்கமாக இருக்க வேண்டும்.
உலக அளவில் பிப்ரவரி மாதம் காதலருக்கான மாதமாகக் கொண்டாடப்படுவதைப் போல உலக அளவில் மாற்றுப் பாலினத்தவர், தன் பால் ஈர்ப்புள்ளவர்கள் தங்களுடைய விடுதலை எண்ணங்களைப் பேசும் மாதமாகவே இந்த ஜூன் மாதத்தை நான் பார்க்கிறேன். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, லண்டன், கனடா என உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மாற்றுப் பாலினத்தவரின் குரல்கள் சமூக வலைதளங்களின் வழியாக ஒலிப்பதைக் கேட்கிறேன். லண்டனிலிருந்து ஒரு தமிழ் அமைப்பு நடத்திய இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில்கூட இதை நான் பகிர்ந்து கொண்டேன்.
உலகம் தழுவிய இந்தக் குரல்கள் என்னைப் போன்றவர்களுக்கும் பெரும் நம்பிக்கையை அளிக்கின்றன.
முன்னோடி மாநிலமான உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில், தன் பால் உறவாளர்கள் சேர்ந்து வசிப்பதற்கு இருந்த தடையை அந்த மாநில அரசு இந்த மாதம் நீக்கியுள்ளது. இந்தியாவின் வடக்கே கடைக்கோடியில் இருக்கும் ஒரு மாநில அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு, இந்த ஊரடங்கு காலத்தில் மிகப் பெரிய ஆசுவாசமான நம்பிக்கையை மாற்றுப் பாலினத்தவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தன் பால் ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ்வதில் இருக்கும் விழிப்புணர்வை வளர்ப்பதோடு, இதை இந்தியாவின் எல்லா மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும்.
அதிகரிக்கும் பெற்றோரின் விழிப்புணர்வு
சமீபத்தில் `ஒரே பேச்சு’ என்னும் கலந்துரையாடலில் நான் பேசும்போது, ஒரு தாய் தன்னுடைய மகளுக்கு எட்டுவயது ஆகிறது என்றும் அவள் தன்னிடம் நாளை வளர்ந்து வந்து, தன்னிடம் பாலினம், பால் ஈர்ப்பு ஆகியவற்றைக் குறித்து என்னிடம் பேசவந்தால் அவளிடம் நான் எப்படிப் பேசவேண்டும் என்று கேட்டார். அந்தத் தாயிடம் ஏற்பட்ட இந்த நேர்மறையான சிந்தனைதான் நல்ல விதமான குழந்தை வளர்ப்பிற்கான அடையாளமாக நான் பார்க்கிறேன். கடந்த ஓராண்டில் பொது நிகழ்ச்சிகளில், கலந்துரையாடல்களில் நிறைய பெற்றோர் தங்களின் சந்தேகங்களை என்னிடம் கேட்டுத் தெளிவு பெற்றிருக்கின்றனர். ஒருமுறை ஓர் இளம் பெண்ணின் தந்தை என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர் சொன்னது இதுதான்:
“என்னுடைய பெண் (லெஸ்பியன்) தன் பால் ஈர்ப்புள்ளவர் என்பதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அவளின் இந்த நிலையை என்னுடைய மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்குத் தெரியவில்லை. அவரிடம் விளக்குவதற்கு உங்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்…” என்றார்.
வாழ்க்கையில் எனக்கு இதுவரை வந்த தொலைபேசி அழைப்புகளிலேயே இந்த அழைப்பைத்தான் மிகவும் முக்கியமானதாக நினைக்கிறேன்.
90 வயது தடையல்ல…
சமீபத்தில் 90 வயதில் இருக்கும் ஒரு முதியவர், தன்பால் ஈர்ப்புள்ளவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். “இது ஒன்றும் காலம் கடந்த செயலாக நான் நினைக்கவில்லை” என்றும் அவர் பேசியிருக்கிறார். இதையும் நம்பிக்கை அளிக்கும் விஷயமாகவே நான் பார்க்கிறேன். எல்.ஜி.பி.டி. என்றாலே ஏதோ தங்களின் திமிரால் பதினைந்து, இருபது வயதுகளில் இருப்பவர்கள் ஆர்வக் கோளாறில் தங்களின் பாலின அடையாளங்களையும் பால் ஈர்ப்பையும் சொல்வதாகவே இந்த உலகம் இதுவரை நம்பியிருந்த நிலையில், 90 வயதில் இருக்கும் ஒருவர் தன்னுடைய பால் ஈர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதை மகிழ்ச்சியாகவே பார்க்கிறேன். இன்னமும் தமிழ்நாட்டின் கிராமங்களில் திருமணம் எனும் பந்தத்தில் ஈடுபடாமல் தன்னந்தனியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எதிர்காலத்திலும் சிறிய வெளிச்சத்தை இதன் மூலமாக நான் பார்க்கிறேன்.
நம்பிக்கை மூச்சு
ஊரடங்கால் குடும்பத்துக்குள்ளேயே தனிமைத் துயரில் வாடும் மாற்றுப் பாலினத்தவர்கள் தங்களின் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய செய்தி. “நெருக்கடியான எல்லா சூழல்களிலிருந்தும் விடுபடுவதற்கான வழி ஒன்று இருக்கும். அதை நாம் கண்டடைய வேண்டும்” என்னும் வங்காரி மாத்தாயின் நம்பிக்கை வாசகங்கள்தான் இந்த ஊரடங்கு காலத்திலும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன'' என்கிறார் மாலினி ஜீவரெத்னம்.