

திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதில் பங்கேற்ற ஊடகத்துறையினரும், திமுக நிர்வாகிகளும் தங்களைப் பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகளை முன்வைத்தும், விமர்சனம் செய்தும் அதிமுகவும், திமுகவும் மாறி, மாறி அரசியல் செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்தச் சூழலில் முதல்வர் பழனிசாமி நேற்று திருச்சிக்கு வந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், குடிமராமத்துப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதன்பின் முக்கொம்பில் புதிய அணை கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு சேலம் சென்றார். இடையே நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தார்.
இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கும் வகையில் தில்லை நகரிலுள்ள திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்தால் கரோனா தொற்று பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக நாளிதழ் செய்தியாளர்களை அழைக்காமல், சில தொலைக்காட்சிகளின் நிருபர்கள் மற்றும் வீடியோகிராபர்களை மட்டுமே அழைத்து கே.என்.நேரு பேட்டி கொடுத்தார். குளிரூட்டப்பட்ட அறையில் சுமார் 25 நிமிடம் நடைபெற்ற இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு முடிந்த சில மணி நேரத்தில் அதில் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி செய்தியாளருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சளி, இருமல் இருந்ததால் இரு தினங்களுக்கு முன்பாக திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக மாதிரி கொடுத்திருந்த அந்த நிருபருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக அவர் தானாகச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துகொண்டார்.
இதற்கிடையே இந்தத் தகவல் வேகமாகப் பரவியதால் கே.என்.நேரு சந்திப்பில் பங்கேற்ற செய்தியாளர்கள், வீடியோகிராபர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் சிலர் உடனடியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைக்காக மாதிரி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. சிலர் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.