

கரோனா ஊரடங்கிலும் வீட்டிலிருந்தவாறே எதிர்வரும் விநாயகர் சதுர்த்திக்காக நாட்டுமாட்டுச் சாணத்தில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருவாய் ஈட்டி வருகிறார் உசிலம்பட்டி விவசாயி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பி.கணேசன் (50). இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், நாட்டுமாட்டு சாணம், கோமியம் (சிறுநீர்) கலந்து 100 வகையான கலைப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.
மேலும் நாட்டு மாட்டுச்சாணம், கோமியத்தில் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மூலிகை பூச்சிவிரட்டி, இடுபொருட்கள் தயாரித்து கொய்யா, தென்னை, முருங்கை மற்றும் காய்கறிகள் விளையவைத்தும் விற்பனை செய்து வருகிறார்.
தற்போது கரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தவாறே ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.
இதுகுறித்து விவசாயி பி.கணேசன், "கரோனா ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்ல வழியின்றி விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறேன்.
மேலும் மாட்டுச்சாணம், கோமியத்தில் கலைப்பொருட்கள் தயாரிப்பதை அறிந்த சென்னையைச் சேர்ந்த சிலர் ஆர்டர் கொடுத்துள்ளனர். அதன்படி நாட்டுமாட்டுச்சாணம், கோமியம் மட்டும் கலந்து விநாயகர் சிலைகளை நானும், எனது மனைவியும் தயாரித்து வருகிறோம்.
எவ்வித இயந்திரமின்றி கையால் மட்டுமே தயாரிப்பதால் ஒருநாளைக்கு 6 லிருந்து 8 சிலைகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். அதனை வெயிலில் குறைந்தது 15 நாள் காயவைத்து பக்குவப்படுத்தினால் தரமான சிலை கிடைக்கும். தயாரிக்கும்போது ஒருகிலோ
இருக்கும் சிலை வெயிலில் காயவைப்பதால் 250 கிராம் அளவுக்கு மாறிவிடும்.
இதில் 10 செமீ உயரம், 5 செமீ அகலமுள்ள சிலை ரூ. 200-க்கு கொடுக்கிறோம். இந்த கரோனா ஊரடங்கில் வருமானமின்றி இருக்கும் எங்களுக்கு விநாயகர் சதுர்த்திக்கு சிலை தயாரிப்பதால் ஓரளவு வருமானம் கிடைத்துள்ளது" என்றார்.