Published : 08 Sep 2015 11:06 AM
Last Updated : 08 Sep 2015 11:06 AM

தேவன் 10

பிரபல நகைச்சுவை எழுத்தாளரும், ஜனரஞ்சக எழுத்தின் முன்னோடிகளில் ஒருவருமான தேவன் (Devan) எனப்படும் ஆர்.மகாதேவன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கும்பகோணம் அடுத்த திருவிடை மருதூரில் (1913) பிறந்தார். அங்குள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சாரணர் படைத் தலைவர் கோபாலசாமி ஐயங்கார் நிறைய கதை சொல்வார். கதை கூறச் சொல்லி மாணவர்களை ஊக்குவிப்பார். அதனால், இவருக்கும் கதையில் ஆர்வம் உண்டானது.

l கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஆங்கிலப் பேராசிரியர் மூலம் இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்டது. சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

l ‘ஆனந்த விகடன்’ இதழில் 21 வயதில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை அதன் நிர்வாக ஆசிரியராக இருந்தார். விகடனில் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், 20-க்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதியுள்ளார். ‘தேவன்’ என்ற புனைப்பெயரில் எழுதினார். ‘துப்பறியும் சாம்பு’ இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு. அந்த வரிசையில் மட்டும் 50 கதைகள் எழுதியுள்ளார்.

l இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வந்தன. ‘கோமதியின் காதலன்’ திரைப்படமாக வந்தது. ‘மிஸ்.ஜானகி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘கல்யாணி’, ‘மைதிலி’ போன்ற நாவல்கள் மேடை நாடகங்களாக அரங்கேறின.

l தான் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். அவை, ‘ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ என்ற புத்தகமாக வெளிவந்தது. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி இவர் விரிவாகப் படைத்த ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

l சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, அன்றைய நாட்டு நிலவரம் ஆகியவை குறித்து மிக நேர்த்தியாகவும், எளிமையான நகைச்சுவையோடும் இருப்பது இவரது படைப்புகளின் சிறப்பம்சம்.

l ‘குழந்தைகளின் அற்ப சந்தோஷங்கள், துக்கங்கள் மட்டுமல்லாது, வயதானவர்களின் மகா அற்ப சுக துக்கங்களைக்கூட அவ்வளவு அற்புதமாக எழுதக்கூடியவர் தேவன்’ என்று பாராட்டியுள்ளார் கல்கி.

l ஆங்கிலக் கதைகள் மட்டுமே படித்தவர்களைக்கூட தன் இயல்பான, நகைச்சுவை கலந்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் என்று போற்றப்பட்டார். ‘வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ்’ என்று அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார்.

l நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள், அபாரமான குடும்ப நாவல்கள் என அனைத்து வகைகளையும் அநாயாசமாக கையாண்டவர். பத்திரிகை துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். தனித்துவம் வாய்ந்த படைப்பாளி.

l கால் நூற்றாண்டு காலத்துக்கு கதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிக் குவித்தார். உழைப்பால் உயர்ந்தவர், எழுத்தால் வளர்ந்தவர், பழகுவதற்கு எளிமையானவர், உலக விஷயங்களை ஜனரஞ்சகமாக, எதார்த்தமாக, கதைப்போக்காக மாற்றி உள்ளங்களில் புகுந்து குதூகலமடையச் செய்தவர் என்றெல்லாம் போற்றப்பட்ட தேவன் 44-வது வயதில் (1957) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x