Published : 08 Sep 2015 11:06 am

Updated : 08 Sep 2015 11:06 am

 

Published : 08 Sep 2015 11:06 AM
Last Updated : 08 Sep 2015 11:06 AM

தேவன் 10

10

பிரபல நகைச்சுவை எழுத்தாளரும், ஜனரஞ்சக எழுத்தின் முன்னோடிகளில் ஒருவருமான தேவன் (Devan) எனப்படும் ஆர்.மகாதேவன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கும்பகோணம் அடுத்த திருவிடை மருதூரில் (1913) பிறந்தார். அங்குள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சாரணர் படைத் தலைவர் கோபாலசாமி ஐயங்கார் நிறைய கதை சொல்வார். கதை கூறச் சொல்லி மாணவர்களை ஊக்குவிப்பார். அதனால், இவருக்கும் கதையில் ஆர்வம் உண்டானது.


l கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஆங்கிலப் பேராசிரியர் மூலம் இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்டது. சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

l ‘ஆனந்த விகடன்’ இதழில் 21 வயதில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை அதன் நிர்வாக ஆசிரியராக இருந்தார். விகடனில் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், 20-க்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதியுள்ளார். ‘தேவன்’ என்ற புனைப்பெயரில் எழுதினார். ‘துப்பறியும் சாம்பு’ இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு. அந்த வரிசையில் மட்டும் 50 கதைகள் எழுதியுள்ளார்.

l இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வந்தன. ‘கோமதியின் காதலன்’ திரைப்படமாக வந்தது. ‘மிஸ்.ஜானகி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘கல்யாணி’, ‘மைதிலி’ போன்ற நாவல்கள் மேடை நாடகங்களாக அரங்கேறின.

l தான் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். அவை, ‘ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ என்ற புத்தகமாக வெளிவந்தது. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி இவர் விரிவாகப் படைத்த ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

l சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, அன்றைய நாட்டு நிலவரம் ஆகியவை குறித்து மிக நேர்த்தியாகவும், எளிமையான நகைச்சுவையோடும் இருப்பது இவரது படைப்புகளின் சிறப்பம்சம்.

l ‘குழந்தைகளின் அற்ப சந்தோஷங்கள், துக்கங்கள் மட்டுமல்லாது, வயதானவர்களின் மகா அற்ப சுக துக்கங்களைக்கூட அவ்வளவு அற்புதமாக எழுதக்கூடியவர் தேவன்’ என்று பாராட்டியுள்ளார் கல்கி.

l ஆங்கிலக் கதைகள் மட்டுமே படித்தவர்களைக்கூட தன் இயல்பான, நகைச்சுவை கலந்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் என்று போற்றப்பட்டார். ‘வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ்’ என்று அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார்.

l நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள், அபாரமான குடும்ப நாவல்கள் என அனைத்து வகைகளையும் அநாயாசமாக கையாண்டவர். பத்திரிகை துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். தனித்துவம் வாய்ந்த படைப்பாளி.

l கால் நூற்றாண்டு காலத்துக்கு கதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிக் குவித்தார். உழைப்பால் உயர்ந்தவர், எழுத்தால் வளர்ந்தவர், பழகுவதற்கு எளிமையானவர், உலக விஷயங்களை ஜனரஞ்சகமாக, எதார்த்தமாக, கதைப்போக்காக மாற்றி உள்ளங்களில் புகுந்து குதூகலமடையச் செய்தவர் என்றெல்லாம் போற்றப்பட்ட தேவன் 44-வது வயதில் (1957) மறைந்தார்.நகைச்சுவை எழுத்தாளர். தேவன்முத்துக்கள் பத்து

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

10

பாப்பா உமாநாத் 10

வலைஞர் பக்கம்
10

மே.வீ.வேணுகோபாலன் 10

வலைஞர் பக்கம்
10

ஹோமி சேத்னா 10

வலைஞர் பக்கம்
x