Last Updated : 26 Jun, 2020 08:45 AM

 

Published : 26 Jun 2020 08:45 AM
Last Updated : 26 Jun 2020 08:45 AM

நிறம் மாறும் ஜன்னல்கள்!

வைஃபை (WiFi) மூலம் இணைக்கப்பட்ட, காரணிகளைப் பொறுத்து நிறம் மாறும் தன்மைகொண்ட கண்ணாடி ஜன்னல்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்தக் கண்ணாடியில் உள்ள உணரும் தன்மை கொண்ட சென்சார்கள், அறையில் உள்ளே உள்ள பொருட்கள், ஆட்களின் எண்ணிக்கை, வெளியே உள்ள வெப்பநிலை, சூரிய ஒளி போன்றவற்றை உணர்ந்து அதற்கேற்ப கண்ணாடியின் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.

கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இந்த உயர் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் ஜன்னல் மலிவு விலையில் கிடைப்பது இல்லை. சாதாரண ஜன்னலுக்கு ஆகும் செலவைவிட 50% அதிகச் செலவு பிடிக்கும். அதேசமயம், இது வீட்டினுள் நுழையும் வெப்பத்தைத் தடுப்பதால், ஏசி உபயோகம் வெகுவாகக் குறையும். இதன் மூலம் மாத மின் கட்டணத்தில் 20% வரை சேமிக்கலாம். ஸ்மார்ட் ஜன்னல்களின் வகைகளை இனி பார்ப்போம்.

டைனமிக் கண்ணாடி

இந்த டைனமிக் கண்ணாடிகளின் நிறமாற்றத்தை வைஃபை மூலம் கட்டுப்படுத்தலாம். இது ஒரு வகையில் சொகுசுக் கண்ணாடி. இந்த நிறமாற்றத்தை, ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் கைப்பேசியில் உள்ள ஆப்களின் மூலம் தூண்டலாம். கண்ணாடியின் அளவைப் பொறுத்து இதன் விலை மாறும். சுமாராக சதுர அடிக்கு 6,500 ரூபாய் வரை செலவு பிடிக்கும்.

சொன்டே ஃபிலிம் (Sonte Film)

இதை ஒரு மின்னணுத் திரை என்றும் சொல்லாம். இந்தத் திரையை ஏற்கெனவே உள்ள உங்கள் வீட்டுக் கண்ணாடி ஜன்னலின் மீது ஒட்ட முடியும். இதுவும் வைஃபை மூலம் நிறமாற்றத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வசதியைக் கொண்டது. இந்தத் திரை, ஒளியூடுருவும் தன்மையுள்ள உங்கள் கண்ணாடி ஜன்னலை, தன் நிறமாற்றும் இயல்பு மூலம் ஒளியூடுருவ முடியாத தன்மையுள்ளதாக மாற்றுகிறது.

ஸ்மார்ட் டிண்ட் ஃபிலிம் (Smart Tint Film)

இதுவும் ஜன்னலில் கண்ணாடியில் ஒட்ட முடியக்கூடிய மற்றொரு ஸ்மார்ட் திரை. இது சந்தையில் எளிதாகக் கிடைக்கக்கூடியது. விலையும் மிகக் குறைவு. இதில் ஒட்டும் தன்மையற்ற மற்றொரு வகைத் திரையும் (Smart Tint Non Adhesive) உள்ளது. ஸ்மார்ட் டிண்ட் ஃபிலிம் வகை ஒட்டும் தன்மை கொண்டுள்ளதால் இதை அப்படியே நேரடியாக ஜன்னல் கண்ணாடியின் மீது ஒட்டலாம். இரண்டாம் வகையில் ஒட்டும் தன்மை இல்லாததால் இதை ஜன்னலில் ஒட்டுவதற்கு இருபக்கமும் ஒட்டும் தன்மை உள்ள நாடாவைப் (double-sided tape) பயன்படுத்த வேண்டும்.

மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் டிண்ட் திரையான இதுவும் ஒளியூடுருவும் தன்மையுள்ள உங்கள் கண்ணாடி ஜன்னலை, தன் நிறமாற்றும் இயல்பு மூலம் ஒளியூடுருவ முடியாத தன்மையுள்ளதாக மாற்றுகிறது. இதை ஒட்டுவதற்குத் தேர்ந்த தொழில்முறை வல்லுநரைப் பயன்படுத்துவது முக்கியம். இதன் செலவு சதுர அடிக்கு சுமார் 3,000 ரூபாய் வரை ஆகும்.

இன்விசிஷேட் செல்ஃப்-அதிசிவ் ஃபிலிம் அண்ட் ஸ்மார்ட் கிளாஸ் (InvisiShade Self-Adhesive Film and Smart Glass)

இந்த ஸ்மார்ட் கிளாஸை ஜன்னலில் உள்ள சுவிட்ச் மூலமோ தொலையியக்கி (remote control) மூலமோ இயக்கலாம். இது பல வண்ணங்களில், வடிவங்களில் கிடைக்கிறது. ஜன்னலை மேலும் அழகுபடுத்த வேண்டும் என்று தோன்றினால், அதன் மேல் plug-and-play adhesive film kits-ஐப் பயன்படுத்தி உங்கள் ஜன்னலின் மேற்புறத்தை மின்னணுத் திரையாக மாற்றலாம்.

இந்த ஒட்டும் திரையை வாங்குவதற்கு முன், அதன் மாதிரிக் கருவிகளை (sample kit) வாங்கி உபயோகித்துப் பார்த்து, அதில் உங்களுக்குப் பிடித்த வண்ண மாதிரியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

பொதுவான வீட்டுப் பராமரிப்பு வேலைகளைப் போல், இந்த ஸ்மார்ட் ஜன்னலுக்கு ஆகும் செலவும் உபயோகிக்கும் பொருளின் தரத்தைப் பொறுத்து பெரிதும் மாறும். ஸ்மார்ட் கண்ணாடியா ஸ்மார்ட் திரையா என்பதை உங்கள் பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இனி வரும் காலங்களில் இதன் உபயோகம் பரவலாகும்போது, இதன் விலை குறைவதற்கும் வாய்ப்பு அதிகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x