

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த விழாக்கள் மற்றும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றதன் மூலமாக இங்கே அரசு ஆய்வுக்கூட்டம் நடத்திய முதல் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் பின்னணியில் சுவாரசியமான அரசியல் இருக்கிறது.
இன்று கோவையில் ரூ.72.86 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர் பழனிசாமி, ரூ.779.86 கோடியில் பில்லூர் 3-ம் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், கரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
எந்த முதல்வரும் இங்கு கூட்டம் நடத்தியதில்லை
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழையது, புதியது என இரண்டு பெரிய கட்டிடங்கள் உள்ளன. தவிர, மாவட்டக் கருவூலத்திற்கென தனியாக மிகப் பழமையான கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் பழைய மற்றும் புதிய கட்டிடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூட்ட அரங்குகள், டிஆர்ஓ, ஆர்டிஓ மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்களின் அலுவலகங்கள் உள்ளன. மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறை, வழங்கல் துறை, கனிம வளத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத் துறை என பல்வேறுபட்ட அரசுத் துறை அலுவலகங்களும் இயங்கிவருகின்றன.
கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்த காலகட்டங்களில், இந்த வளாகத்தில் எந்த ஒரு விழாவிலும் அவர்கள் கலந்து கொண்டதில்லை. கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்டிடம், பாலங்கள் திறப்பு விழாக்கள் நடத்துவதாக இருந்தால் வ.உ.சி. மைதானம் அல்லது கொடீசியா போன்ற கண்காட்சி வளாகங்களில்தான் விழாக்கள் நடக்கும்.
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத் திறப்பு விழாவுக்கு மட்டும் அந்தக் கட்டிடத்திற்கே அன்றைய முதல்வரை அழைத்து வந்து திறப்புவிழா செய்ய வைத்தார் அப்போதைய கோவை போலீஸ் கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன். செம்மொழி மாநாடு பிரம்மாண்டமாய் நடந்தபோதுகூட முதல்வர் கருணாநிதி வ.உசி. மைதானத்தில் நடந்த அலங்காரச் சிற்பங்கள் பணியைப் பார்வையிட்டுச் சென்று ஓட்டலில் தங்கினார். செம்மொழி மாநாடு கொடீசியா கண்காட்சி வளாகத்திலும் வெளியே பிரம்மாண்ட அரங்கிலும்தான் நடந்தது.
இதற்கான ஆய்வுக் கூட்டங்கள் கோவை ஆட்சியர் அலுவலக ஆய்வுக் கூட்டரங்கில் நடந்தன என்றாலும் கூட அதில் தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, துணை முதல்வர் ஸ்டாலின் போன்றோர்தான் கலந்துகொண்டிருக்கிறார்கள். அன்றைய முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. இப்படி 20-30 ஆண்டுகளில் எந்த முதல்வரும் இங்கு வந்து ஆய்வுக் கூட்டம் ஏதும் நடத்தியதில்லை.
இன்றைக்கு முதல்வர் பழனிசாமி அந்த வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார். மூன்றாண்டுகளுக்கு முன்பு இங்கு ஆட்சியர் அலுவலகப் புதிய கட்டிடத்தை நேரில் வந்து திறந்து வைத்தார். ஆனால், அப்போது அரசு ஆய்வுக்கூட்டங்கள் ஏதும் நடத்தவில்லை. இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் விழாவுடன் ஆய்வுக்கூட்டமும் நடந்திருக்கிறது.
பலத்த ஏற்பாடுகள்
இங்கே கூட்டம் நடப்பது உறுதியானதும் நேற்றே கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. குறிப்பாக, முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக்கூட்ட அரங்கில் ஒவ்வொரு நாற்காலியும், கதவு, ஜன்னல்களும் பளிச்சென சுத்தம் செய்யப்பட்டன. அரசியல் கட்சியினர், வெளியாட்கள் என யாருமே முந்தைய தினத்திலிருந்தே அரங்கினுள் அனுமதிக்கப்படவில்லை.
இன்று காலை இந்த வழியே வந்த வாகனங்கள் யாவும் ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன. பத்திரிகையாளர்கள், அத்தியாவசியப் பணியில் உள்ள அரசு ஊழியர்களின் வாகனங்கள் எல்லாம் ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறம் உள்ள தனியார் பள்ளியின் வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டன. காலை 10.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி வந்தார். அவரைச் சந்தித்துப் பேச அனுமதி கேட்டிருந்த தொழிலதிபர்கள், ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பட்டியல் முன்பே தயாரிக்கப்பட்டு அவர்கள் மட்டுமே ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஊடகங்களுக்கும் கட்டுப்பாடு
அரசுப் புகைப்படக்காரர்கள் 8 பேர் புகைப்படம் எடுப்பதால் பத்திரிகைகளுக்குச் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்களே படம், வீடியோக்கள் தருவார்கள் என்றும், அதிகாரிகளே செய்திகள் அனுப்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்குக் கரோனா தொற்று, தனிமனித இடைவெளி ஆகியவை காரணமாகச் சொல்லப்பட்டன. அதையும் மீறி நேரலை செய்யும் 25 செய்தி சேனல்கள், 2 அச்சுப் பத்திரிகை புகைப்படக்காரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும்பான்மையோருக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதனால் அந்த அலுவலகங்கள் எல்லாம் வெறிச்சோடின. கட்சிக்காரர்கள், வேறு பல பிரமுகர்கள் ஆட்சியர் அலுவலகக் கட்டிட வளாகத்திற்கு வெளி வாசலிலேயே தடுக்கப்பட்டனர். அந்த வாசல் அருகில் 30-க்கும் மேற்பட்ட பத்திரிகை புகைப்படக்காரர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
10.30 மணிக்கு அரங்கில் நுழைந்த முதல்வர் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக அங்கே இருந்தார். அவருக்காக வெளியில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களிடம் 12.30 மணிக்கு ஒரு சலசலப்பு. ‘பிரஸ் மீட் இல்லை. காந்திபுரம் மேம்பாலத்தைப் பார்வையிட முதல்வர் போகிறார்’ என்றெல்லாம் தகவல் வந்தது. அதை நம்பிப் பலர் அங்கு கிளம்பிச் சென்றனர்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகப் பிரதானக் கட்டிட முகப்புக் கதவருகே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் முதல்வர். அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த அந்தச் செய்தியாளர் சந்திப்பில், “கோவையில் மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டங்களிலும் இனி ஆய்வுக்கூட்டம் நடத்துவேன். அங்கெல்லாம் நடக்கும் பணிகளை ஆய்வு செய்வேன்” எனத் தெரிவித்தார் முதல்வர்.
விமர்சனங்களும் வரவேற்பும்
‘கோவையில் கரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பங்கேற்கும் விழா ஏன் நடத்தப்பட வேண்டும்?’ என்று சிலர் முணு முணுத்ததைக் கேட்க முடிந்தது. ஆனால், ‘ஆட்சியர் அலுவலகம் என்பதால் எளிமையாக விழா நடக்கும். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படும். கட்சிக்காரர்களுக்கு அனுமதியில்லை. அந்த வகையில் இது வரவேற்கத்தக்கதுதானே’ என்கிறார்கள் முதல்வரின் விசுவாசிகள்.
இதில் அரசியல் உள்குத்தும் இருக்கிறது என்கிறார்கள் சிலர். ‘ஒவ்வொரு மாவட்டத்து அமைச்சரும் அந்தந்த மாவட்டத்தில் தனி அதிகாரம் செலுத்தி வருகிறார்கள் அதை உடைக்கும் வியூகமும் இதற்குள் இருக்கிறது’ என்பது அவர்களின் கருத்து.
இதில் எது உண்மையோ, கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு நீண்ட காலமாக முதல்வர்கள் யாரும் வந்ததில்லை என்ற வரலாற்றை உடைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.