

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தகராறொன்றில் அடித்து ஊரைவிட்டு விரட்டப்பட்டு நாடோடிகளாக அலைந்து திரிந்த 23 குடும்பங்களை வருவாய்த்துறை உதவியுடன் அதே தெருவுக்குள் மீள் குடியமர்த்தி இருக்கிறது பண்ருட்டி காவல் துறை.
2017-ம் ஆண்டு மார்ச் மாதம், பண்ருட்டி அம்பேத்கர் நகரில் வசித்த ஒரே சாதியைச் சேர்ந்த மக்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு, குழு மோதலாக மாறியது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 13 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. உயிர் பயம் காரணமாக அந்தக் குழுவைச் சேர்ந்த 23 குடும்பங்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.
அதன் பிறகு அவர்கள், தங்களது உறவினர்கள் வீடுகளில் தங்கிக்கொண்டு காவல்துறைக்கும் வருவாய்த் துறைக்கும் நியாயம் கேட்டு நடையாய் நடந்தார்கள். ஆனால், எதிர்த் தரப்பினர் செல்வாக்கு உடையவர்கள் என்பதால் இவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் ஒருகட்டத்தில் சோர்ந்து போனவர்கள் சென்னை, கேரளா, விழுப்புரம் என்று பல்வேறு ஊர்களுக்குப் பிழைக்கப் போய்விட்டார்கள்.
பண்ருட்டி நகராட்சியில் வேலை பார்க்கும் ரமேஷ் என்பவர் உட்பட ஐந்து குடும்பத்தினர் மட்டும் பண்ருட்டி நகரிலேயே வாடகைக்குக் குடியிருந்து வந்தார்கள். இந்த நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக அம்பேத்கர் நகருக்குச் சென்ற பண்ருட்டியின் தற்போதைய காவல் ஆய்வாளர் அம்பேத்கர் அங்கு சிதிலமடைந்து கிடக்கும் வீடுகளைப் பார்த்துவிட்டு இவை ஏன் எப்படி இருக்கிறது என்று விசாரித்திருக்கிறார். அவருக்கு விவரம் சொல்லப்பட்டி ருக்கிறது. இதற்கிடையே ஆய்வாளர் விசாரித்தார் என்ற தகவல் கிடைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர், அவரைச் சந்தித்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் ஆசையைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து அவர்களை வட்டாட்சியர் உதயகுமாரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார் ஆய்வாளர். அதற்குப் பிறகு வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பையும் அழைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை ஆய்வாளரும், வட்டாட்சியரும் பாதிக்கப்பட்டவர்களில் வெளியூர்களில் இருப்பவர்களைத் தவிர்த்து மீதமுள்ள 19 குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு அம்பேத்கர் நகருக்குச் சென்றனர். அங்குள்ள எதிர்த் தரப்பினரின் கைகளில், தான் வாங்கிச் சென்றிருந்த இனிப்பைக் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை வரவேற்கச் செய்தார் ஆய்வாளர் அம்பேத்கர்.
தங்கள் வீடுகளுக்குப் போனதும் ஆனந்தக் கண்ணீரில் கையெடுத்துக் கும்பிட்டு வாழ்த்தினார்கள் பெண்கள். பலரும் தெருவில் விழுந்து வீட்டை வணங்கினார்கள். அந்த உணர்ச்சிகரமான நேரத்தில் இரு தரப்புக்கும் அறிவுரைகளை வழங்கி இனியாவது சமாதானமாக வாழவேண்டும் என்று ஆய்வாளரும் வட்டாட்சியரும் அறிவுறுத்தினார்கள்.
முற்றிலும் பாழடைந்த நிலையில் உள்ள வீடுகளில் மக்கள் உடனடியாகக் குடியேறி வசிக்க முடியாது என்பதால் தங்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவவேண்டும் என்று வட்டாட்சியரிடமும், ஆய்வாளரிடமும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இயன்றவரை உதவிகளைச் செய்வதாக இருவரும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
வீடு திரும்பிய ரமேஷ் மற்றும் தயாளன் குடும்பத்தினர் கூறும்போது, “சொந்த வூட்டை விட்டுனு நாடோடி போல பல ஊர்களுக்கு அலைஞ்சு திரிஞ்சுனு இருந்துது வேதனையா இருந்துச்சு. பலதபா இந்தவழில போனாலும்கூட எங்க அம்பேத்காரு நவருக்குள்ள நுழைய முடியாம இருந்துச்சு. வெள்ளேர்ந்து ஏக்கமா பாத்துக்கினே போவம். அதுக்கு இனுசுபெக்டர் சார்தான் ஒரு முடிவு கண்டுனுக்கிறாரு. அவருக்கு நாங்க காலாகாலத்துக்கும் நன்றி சொல்லிகினுருப்போம்” என்கிறார்கள்
இனியாவது இவர்களுக்குள் பழைய சச்சரவுகள் ஓய்ந்து, ஒற்றுமை தழைக்கட்டும்!