

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சந்தைப் பகுதியில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்தனர். பொதுமுடக்க சமயத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்திருந்ததாக இருவரையும் போலீஸார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் இருவரும் கடுமையாகப் போலீஸாரால் தாக்கப்பட்ட பின்னர் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய சார்பு ஆய்வாளர்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தைத் தாமாகவே முன்வந்து மதுரை உயர் நீதிமன்றம் வழக்காக விசாரணைக்கு எடுத்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால், லாக்கப் மரணங்கள் தொடர்கதையாக நீள்வதும், அப்படியான சம்பவங்கள் நிகழ்ந்த ஒரு வாரதுக்கு மட்டும் அது பேசுபொருளாவதுமே தொடர்கிறது. இப்படியான சூழலுக்கு மத்தியில் லாக்கப் மரணத்துக்கு எதிரான இரு முக்கியத் திருப்புமுனை சம்பவங்களை சம காலத்தில் கேரளம் சந்தித்தது. அந்த மனிதர்களின் கதைதான் இது...
பாசப்போராட்டத்தில் ஜெயித்த பிரபாவதி!
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபாவதியின் மகன் உதயகுமார். இவரைக் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில், சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்துச் சென்றனர். அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர், விசாரணையின் போது லாக்கப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் மரணமடைந்தார்.
உறவு என சொல்லிக்கொள்ளத் தன்னோடு இருந்த ஒரே மகனையும் இழந்துவிட்ட பிரபாவதி அம்மா, மூலையில் சோர்ந்து அமர்ந்துவிடவில்லை. மகனின் இறப்புக்கு நீதிகேட்டுத் தொடர்ச்சியாகப் போராடினார். 13 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. விசாரணைக்காகப் பூங்காவில் இருந்து உதயகுமாரை அழைத்துச் சென்று லாக்கப்பில் வைத்து விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்றதாக ஜிதகுமார், ஸ்ரீகுமார் என்ற இரு காவலர்களுக்கு தூக்குத் தண்டனையும், சாட்சிகளைக் கலைத்தல், பொய் ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அப்போது பணியில் இருந்து பிறகு ஓய்வுபெற்ற எஸ்.பி-க்கள் டி.கே.ஹரிதாஸ், ஷாபு, டிஎஸ்பியான அஜித்குமார் ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாசர் அளித்த இந்தத் தீர்ப்பு, காவல்துறையின் அத்துமீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட காவலர்கள் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு போட்டுக் காத்திருக்கிறார்கள். இப்படியான வழக்கின் தீர்ப்பு குறித்து, காவலர்களுக்குப் பயிற்சிக் காலத்திலேயே ஏன் பாடம் நடத்தக்கூடாது என்னும் கேள்வியும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
தனி ஒருவர் தொடரும் யுத்தம்!
கேரளத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தில் தனது சகோதரனது காவல் நிலைய விசாரணை மரணத்துக்கு நீதி கேட்டு மூன்றாண்டுகளைக் கடந்தும் போராடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீஜித். திருவனந்தபுரத்தில் உள்ள கேரளத் தலைமைச் செயலகத்தின் முன்பு கூடாரம் போட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த அவரது போராட்டத்துக்குக் கரோனா சின்ன இளைப்பாறுதல் கொடுத்துள்ளது.
கேரளத்தின் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த ஸ்ரீஜித்தின் சகோதரர் ஸ்ரீஜிவ்வை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கடந்த 2014-ம் வருடம், மே 19-ம் தேதி பாறசாலை போலீஸார் அழைத்துச் சென்றனர். இரண்டு நாள்களிலேயே ஸ்ரீஜிவ் லாக்கப்பில் தானாகவே விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் சொல்லப் போராட்டம் வெடித்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்திரசேகர குருப் இதுகுறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்டார். பாறசாலை ஆய்வாளர் கோபக்குமார், சார் ஆய்வாளர் பிலிப்போஸ் ஆகியோருக்குத் தலா பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை ஸ்ரீஜிவ் குடும்பத்துக்குக் கொடுக்கவும் நீதிபதி, அரசுக்குப் பரிந்துரை செய்தார். இதை எதிர்த்து எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் இரு போலீஸாரும் வழக்குப் பதிந்து தடை வாங்கினர்.
அதேநேரம் எங்களுக்குத் தேவை இழப்பீடு அல்ல. என் தம்பியின் மரணத்துக்குக் காரணமான இரு போலீஸாரும் தண்டிக்கப்பட வேண்டும் என மூன்றாண்டுகளுக்கும் மேலாகக் களத்தில் இருந்து போராடுகிறார் ஸ்ரீஜிவ்வின் சகோதரர் ஸ்ரீஜித். கேரளத்தில் இயல்பாகவே இப்படி இருக்கும் லாக்கப் மரணங்களுக்கு எதிரான போராட்ட உணர்வும், அதை சட்டரீதியாக அணுகும் தன்மையும் அங்கு லாக்கப் மரணங்களின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். அதிலும் பிரபாவதி அம்மா வழக்கில், காவல்துறையினருக்கு மரண தண்டனை விதித்த தீர்ப்புக்குப் பிறகு கடந்த ஓராண்டில் கேரளத்தில் லாக்கப் மரணங்கள் ஏதும் நடக்கவில்லை.
எழுப்பப்படும் கேள்விகள்
கேரள சம்பவங்களுக்குச் சற்றும் குறைவில்லாததுதான் சாத்தான்குளம் சம்பவமும். இந்த வழக்கில் சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை. அந்தக் கேள்விகளை முன்வைத்து நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று காலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ''சிறைக்கு அனுப்பும் முன்பு மருத்துவச் சான்று வழங்க வேண்டும் என்பது கட்டாயம். அப்படியானால் அரசு மருத்துவர் இந்த அளவுக்கு உடல் நலம் குன்றியோருக்கு, எப்படி சிறைக்கு அனுப்ப மருத்துவச் சான்று வழங்கினார்? முறையாக இதுகுறித்து விசாரிக்காமல் குற்றவியல் நடுவர் ரிமாண்ட் செய்தது ஏன்? இவ்வளவு பெரிய காயங்களைப் பரிசோதனை செய்யாமல் சிறைத்துறை அதிகாரிகள் சிறையில் அடைத்தது எப்படி?'' எனக் கேள்விகளை எழுப்பினர். காவலர்களோடு சேர்த்து கூடவே இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கேட்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விசாரணை என்னும் பெயரில் தொடர்ந்து கொண்டே இருக்கும் லாக்கப் மரணங்களுக்கு முடிவு எப்போது?