Published : 23 Jun 2020 03:34 PM
Last Updated : 23 Jun 2020 03:34 PM

கரோனாவுக்கு மத்தியிலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் தாராளமாய் புழங்கும் போதை வஸ்துகள்: அரசின் கடமை என்ன?

கரோனாவால் குழந்தைகள் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் முறையில் கல்வி கற்கின்றனர். எப்போது இயல்பு நிலை திரும்பும் எனத் தெரியாமல் பலரும் விழிபிதுங்கியுள்ள இந்த சூழலிலும்கூட, தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகளின் புழக்கம் சரளமாக இருக்கிறது.

அரசின் கவனம் முழுக்கக் கரோனாவிலேயே இருக்க, இளைஞர்களை டார்கெட் செய்து போதைப்பொருள் விற்பனையும் சமூக விரோதிகளால் சூடுபிடித்துள்ளது.

சிகரெட், மது, கஞ்சா என தேடிப்போய் வாங்கும் போதைப் பொருள்களை மட்டுமே பெற்றோர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், வீட்டுக்குள் சகஜமாகக் கிடைக்கும் பொருள்களையே போதையாக்கி நுகரும் கலாச்சாரம் மாணவர்களிடம் இருப்பது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்தான்.

“சாதாரண பெட்ரோலைக் கொண்டே போதை ஏற்றும் பழக்கம் குமரிமாவட்ட பள்ளிச்சிறார்கள் சிலரிடம் இருக்கிறது. அவர்களது மொழியில். இதேபோல் இயல்பாகவே வீடுகளுக்குள் இருக்கும் பொருட்கள் மூலமாகவும் போதை ஏற்றிக்கொள்ளும் மாணவர் கூட்டமும் இருக்கிறது. பிள்ளையின் சட்டைப் பையில் வொயிட்னரும், நெயில் பாலீஷும் கிடந்தால் பெற்றோர் சந்தேகிப்பார்களா என்ன? ஆனால், இதெல்லாம் நேரடியாக மூளைக்குள் போய் எதிர்வினையாற்றி விடுகிறது” என்கிறார் எழுத்தாளர் பிரபு தர்மராஜ்.

இந்தவகை பொருள்கள் எல்லாமே அதிகம் செலவில்லாமல் கிடைக்கும் சமாச்சாரங்கள். இதற்கு அடுத்தபடியாக பள்ளி மாணவர்கள் அதிகம் மயங்கிக் கிடப்பது கஞ்சாவுக்குத்தான். கன்னியாகுமரி பகுதி மாணவர்கள் மத்தியில், ‘போஸா, லீஃப், போஞ்சான்’ என இதற்கு சங்கேத பாஷைகள் வைத்திருக்கிறார்கள்.

இப்போது கல்விக் கூடங்கள் மூடிக்கிடந்தாலும் மாணவர்களின் வீடுதேடி வந்து சப்ளை செய்யுமளவுக்குத் துணிந்துவிட்டார்கள் சமூகவிரோதிகள். ஆனாலும் இதன் தொடக்கப்புள்ளி கல்விக்கூடங்கள்தான்.

பள்ளிக்கூடங்களை ஒட்டியே சுற்றிவரும் இந்த கஞ்சா விற்பனையாளர்கள் ஆரம்பத்தில் ஏதேனும் ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு இலவசமாகவே கஞ்சா கொடுக்கிறார்கள். நாள்பட அந்த மாணவன் கஞ்சாவுக்கு அடிமையானதும், அவன் மூலமே அந்தப் பள்ளியில் பலருக்கும் சப்ளை செய்யவைத்து தங்களின் வியாபார வலையை விரித்துக் கொள்கின்றனர். இலவசமாகக் கிடைக்கும் போதையின் சுகத்தில் மதிமறக்கும் மாணவர்கள் சிலர், படிக்கும் வயதிலேயே அவர்களையும் அறியாமல் கஞ்சா வியாபாரி ஆகிவிடுகிறார்கள்.

பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்க இங்கே பாதுகாவலரின் பொறுப்பில் வளரும் மாணவர்கள், சகோதரிகள் இருக்கும் மாணவன், லட்சணமான பிள்ளைகள் என குறிப்பிட்ட சிலரை மட்டுமே தேர்ந்தெடுத்து கஞ்சா விநியோகிக்கும் இந்த கும்பல், அதன் பின்னணியில் அரங்கேற்றும் கொடூரங்கள் அதிகம். பணம் கறப்பது, பெண்களை வளைப்பது என கஞ்சாவின் பின்னணியில் நிகழ்த்தப்படும் குற்றங்களும் கணக்கில்லாதவை என்கிறார் குமரி பகுதி தலைமைக் காவலர் ஒருவர். குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 81 பேரில் 12 பேர் கஞ்சா விற்றவர்கள். அதுவும் சிறார்களுக்கு விற்றவகையில் கண்காணிப்பு வளையத்தில் இருந்தவர்கள்!

நாகர்கோவில் கோட்டாறு பகுதி, அறுகுவிளை, பறக்கின்கால் பகுதிகளில் இப்போது சரளமாகக் கஞ்சா புழக்கம் இருக்கிறது. கஞ்சாவுக்கு அடுத்தபடியாக போதை ஊசி கலாச்சாரமும் இந்த கரோனா காலத்திலும் தங்கு தடையின்றித் தொடர்கிறது. மருந்தகங்களில் மருத்துவர் சீட்டு இருந்தால் மட்டுமே தரப்படும் சில வலி நிவாரணி மருந்துகளையும், அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய நிலையில் கொடுக்கப்படும் மயக்க மருந்தின் மூலப்பொருள்களையும் கொண்டு இந்த போதை ஊசிகளைத் தயாரிப்பதற்கென்றே குமரியில் பல கும்பல்கள் இருக்கிறார்கள்.

ஊசி முலம் போதையை ஏற்றிக்கொண்டு மாணவன், வகுப்பறையில் இருந்தால் ஆசிரியரால் கண்டுபிடிக்க முடியாது. வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் இருந்தே போதை வேலைசெய்யும் என்பதாலும் இதைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் குமரியில் அதிகம். பள்ளி வளாகங்கள் சிலவற்றில் போதை ஊசிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு.

இதேபோல் பஞ்சர் ஒட்டப் பயன்படுத்தும் பசை போன்ற வேதிப்பொருளுக்கு குமரியில் ஏக கிராக்கி. அதிகபட்சம் முப்பது ரூபாய்க்குள் மட்டுமே விலை இருக்கும் இதை வாங்கி அத்துடன் இன்னும் சில வேலைகளைச் செய்து போதையாக அனுபவிக்கிறது மாணவர் கூட்டம். ஆனால், இது எதையுமே பெற்றோர் அறிந்திருக்கவில்லை என்கிறார் மதுபோதைக்கு எதிராகத் தொடர் விழிப்புணர்வு மேற்கொண்டுவரும் ரமேஷ்.

ரமேஷ், பிரபு தர்மராஜ்

இபோல் ‘கூல் லிப்ஸ்’ என்னும் பெயரில் பெட்டிக் டைகளில் கிடைக்கும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களின் கவர்கள் பள்ளிக்கூடக் கழிப்பறைகளில் அதிகம் கிடப்பதாக ஆசிரியர்களே வேதனைப்பட்டுச் சொல்கிறார்கள். இப்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை என்றாலும் வீடுகளில் குழந்தைகளிடம் தெரியும் சின்னச் சின்ன அசைவுகளையும்கூட கண்காணிக்க வேண்டும் என்கிறார் அந்த ஆசிரியர்.

ரவுடியாக ஒரு காலகட்டம்வரை கோலோச்சியவர்கள் வயதான பின்னர் தங்களுக்கு எளிதான தொழிலாக கஞ்சா, போதை ஊசி விற்பனையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தூத்துக்குடியிலோ பள்ளிக் கூடங்களின் அருகில் தெருமுனைகளிலேயே சர்வசாதாரணமாகக் கஞ்சா கிடைக்கிறது. அதுவும் இந்த கரோனா காலத்திலும்.

டூவிலரில் டிப்டாப் உடையில் வரும் ஆசாமிகள் கஞ்சாவை மாணவர்களின் கையில் சேர்க்கிறார்கள். பள்ளிக்கூடம் இல்லாதபோதும் பள்ளியை நோக்கிக் குழந்தைகள் சென்றாலே கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக பல பகுதிகளுக்கு கஞ்சா கடத்தும் கும்பல்களும் இருக்கிறார்கள்.

பள்ளிகள் நீண்ட காலத்துக்கு மூடியிருக்கும் நிலையில் இந்த ரக போதைப் பழக்கங்கள் மாணவர்களைத் தொற்றிவிடாமல் பார்க்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. அதேசமயம், பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x