Published : 22 Jun 2020 12:19 PM
Last Updated : 22 Jun 2020 12:19 PM

பன்முகக் கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’: 1- கோசாணம்

10 வயதில் சிவகுமார்

கொங்கு ‘தேன்’வாசிக்கும் முன்...

திரைப்பட நடிகர், ஓவியர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் என பன்முக அவதாரமானவர் பன்முகக் கலைஞர் சிவகுமார். வசீகரிக்கும் யதார்த்தமான பேச்சு, எழுத்து, அதில் அவர் கையாளும் கொங்கு மண் மொழி லாவகம் பற்றி தன் வாழ்க்கை அனுபவங்களை அந்த மண்ணின் மொழியில் நமக்குச் சொல்கிறார்.

‘இது ராஜபாட்டை அல்ல’, ‘கம்பன் என் காதலன்’, ‘சிவகுமார் டைரி (1945-1975))’, ‘தமிழ் சினிமாவில் தமிழ், கங்காரு காலனி...’ என வரும் இவர் நூல்களும், இவர் சொற்பொழிவாற்றியிருக்கும் கம்ப ராமாயண, மகாபாரத இதிகாசங்களின் குறுந்தகடுகள், அதில் அப்பாத்திரங்களாகவே மாறி அவர் கதை சொல்லும் பாணி எல்லாவற்றுக்கும் மக்களிடம் வந்த பாராட்டுகளைச் சொல்லில் அடக்க முடியாது.

தற்போது ‘திருக்குறள் கதைகள்-100’ எழுதி மக்கள் முன் அரங்கேற்றம் செய்ய துடித்துக் கொண்டிருக்கும் இந்த மூத்த இளைஞர், கிடைத்த இந்த கரோனா இடைவெளியில் நம் 'இந்து தமிழ்திசை' இணையதள வாசகர்களுக்காக இந்த கொங்கு ‘தேன்’ எனும் அனுபவத் தொடர் காவியத்தைத் தர இசைந்துள்ளார்.

கோவையை அடுத்துள்ள சூலூர் அருகில் உள்ள காசிக்கவுண்டன்புதூர் என்ற சின்ன கிராமத்திலிருந்து புறப்பட்டு ஓவியம், ஓவியக்கல்லூரி, சென்னை வாழ்க்கை, சினிமா எனப் புகுந்து மும்பை, டெல்லி, ஆக்ரா தாண்டி உலகமெல்லாம் பயணித்து வந்தவர்தான். என்றாலும் அவர் இதுவரை அவர் பயணித்த பயணம் என்பது உலகமே சுற்றி வந்த அனுபவங்கள்.

இந்த கொங்கு ‘தேன்’ என்பதோ, அவர் பிறந்து வளர்ந்த சின்ன கிராமத்திற்குள் உள்ள வாழ்வியல் நுட்பங்கள். அம்மண் மண சிணுங்கல்கள். அதற்குள்ளேயே நுழைந்து ஊடுருவி நுண்ணிய வெளியில் உணர்ச்சிக்குவியல்களை உறிஞ்சுவதாகவே அமையும். அதை வாசிப்பவர் மண் மணத் தேனாகவே கருக் கொள்வார்கள். அந்த ஆற்றல் மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு மனிதரையும் விம்ம வைப்பதுடன் அக்காலத்திற்குள்ளேயே வாழ்ந்து அமிழவும் வைக்கும். இனி அவர் தரும் மண் மணக்கும் கொங்கு ‘தேன்’. சுவையுங்கள்...

1. கோசாணம்

கோவை மாவட்ட வரைபடத்துலயே எங்க ஊரு இருக்குமான்னு அப்பப்ப எனக்கு சந்தேகம் வரும்.

ரொம்ப சின்ன ஊரு. ஒரு அம்பது, அறுபது குடித்தனங்க இருந்தா பெரிய விஷயம். அஞ்சு ஏக்கரா, பத்து ஏக்கரா வச்சிருக்கிறவங்க ஒரு பத்துப் பேர் இருப்பாங்க. பாக்கி எல்லாரும் அந்த நிலத்துல பாடு படறவங்க.

அது ஒரு மேட்டாங்காடு. எப்பவாச்சும் நெனச்சா மழை பெய்யும். ஏரைப்பூட்டி உழுது விதை போடுவோம். பருத்தி, சோளம், ராகி போட்டு விவசாயம் பண்ணுவோம். பயிர் ஓரடி வந்ததும் களை எடுப்பாங்க. கதிர் விளைஞ்சதும், கதிர் அறுத்துக் களத்துல போட்டு மாடுகளை விட்டு தாம்பு ஓட்டுவாங்க. ‘தாம்பு’ன்னா எருதோட கால்ல மிதிபட்டு அந்த சோளம் பிரிபிரியா பிரிஞ்சு விழுந்துடும்.

அதுக்கப்புறம் மேகாத்து அடிக்கும்போது அதையெல்லாம் கூடையில போட்டு தூத்துவாங்க. தூத்தி அந்த தூசி, துப்பெல்லாம் போனதுக்கப்புறமா அந்த சோளத்தை வெயில்ல காயப்போட்டு மூட்டை கட்டி ஊட்டுக்கு எடுத்துட்டுப் போவாங்க. இதுதான் எங்களுக்குச் சாப்பாடு. உணவு ஆதாரம்.

கூலியாளுகளுக்கு பருத்தியா இருந்தா நாலு கூறு போட்டு ஒரு கூறு கூலியா போட்டு கொடுப்பாங்க. தவசமா (தானியம்) இருந்ததுன்னா ரெண்டு படி, நாலுபடி விளைஞ்சதுல கொடுப்பாங்க. இப்படி மனுசன் உசிரோட இருக்கிறதுக்கு பூமி ஆதாரமா இருக்குது. அப்புறம் எதுக்கு படிப்பு?

70 வருஷத்துக்கு முன்னாடி அதைப் பத்தி யோசிக்கிறதுக்கே ஊர் ஜனங்களுக்கு நேரமில்ல. அதுலயும் சில பேரு ‘ஆயிரந்தான் இருந்தாலும் பசங்க நாலு எழுத்து படிச்சிக்கட்டும்’ன்னு பள்ளிக்கூடத்துல கொண்டு போய் சேர்த்தாங்க.

அப்படி சேர்க்கறப்ப, ‘வாத்தியாரே பையன் மொடக்கடி பண்ணுனான்னா கண்ணு மூக்கை உட்டுப் போட்டு மீதியெல்லாம் உரிச்சு எடுத்துருங்க‘ன்னு சொல்லீட்டுத்தான் சேர்ப்பாங்க. அப்புறம் வாத்தியார் சும்மாயிருப்பாரா?

எங்கூருக்கு கிழக்கால ஒரு மைல்தூரத்துல ‘ஏரோ ப்ளேன்’ காடு. அதாவது விமான நிலையம். அதை சுத்தி ஒரு நூறு ஏக்கரா திறந்தவெளி, புல்வெளி.

அதுலதான் நாங்க எல்லாரும் மாடு மேய்ப்போம். காலுக்கு தளைய (கயிற்றில் கால் கட்டு) போட்டு விட்டுட்டா அது பாட்டுக்கு மேய்ஞ்சுட்டிருக்கும். குட்டி ஏரோப்ளேன் (டகோடா விமானம்) நிறுத்தறதுக்கு 100 அடி நீளம் 60 அடி அகலத்துக்கு கான்கிரீட் தளம் போட்டிருப்பாங்க. சுற்றியும் பத்தடி உயரத்துக்கு மண் மேவி விட்டிருப்பாங்க. மண் ஏரி போட்டிருப்பாங்க.

வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போயிட்டான். எந்த பிளேனும் இங்கே நிக்கறது கிடையாது. அந்த மண் ஏரியில வங்க நரி (வங்கு: பொந்து) ஓட்டை போட்டு குடியிருக்கும். உள்ளே போறதுக்கு ஒரு துவாரம். வெளியே போறதுக்கு மறுபக்கத்துல ஒரு ஓட்டை இருக்கும். நடுவுல 50 அடி தூரத்துக்கு வங்கு பண்ணி அந்த பொந்துக்குள்ளேதான் நரிகள் இருக்கும். இந்த துவாரத்தைப் பார்த்தவுடனே எப்படியும் மோப்பம் புடிச்சுக்குவானுக பசங்க.

நரி உள்ளே இருக்கிறதை தெரிஞ்சுகிட்டு காய்ஞ்சு போன சாணி உருண்டை பத்து. வைக்கோல் புல்லு கொஞ்சம் அந்த துவாரத்துக்குள்ளே திணிச்சு தீ பத்த வச்சு ஊத ஆரம்பிச்சுருவாங்க. அதுக்கு புகைமுட்டி போடறதுன்னு பேரு.அப்படி புகை ஊத, ஊத அந்த புகை உள்ளே போய் நரிக்கு மூச்சு முட்டும். அந்தப் பக்கம் வெளியே ஓடியாரும். ‘டப்’புனு வலையப்போட்டு புடிச்சிக்குவாங்க.

இப்படியெல்லாம் செளகரியமாக சுத்தீட்டிருந்த பசங்களை கையக்கட்டி, வாயப்பொத்தி ஒரே இடத்துல பள்ளிக்கூடத்துல உட்காரச் சொன்னா என்னய்யா கொடுமை இது?

அதனாலதான் இந்த பசங்க தூக்குப் போசியில சோறு போட்டு எடுத்துகிட்டு, ‘அம்மா பள்ளிக்கூடம் போயிட்டு வர்றேன்’ன்னுட்டு நேரா சோளக்காட்டு வரப்புல குப்புறப்படுத்துக்குவானுக.

பள்ளிக்கூடத்துல வாத்தியார், ‘எங்கேடா ராமசாமியக்காணோம்?’ன்னா, ‘அய்யா வர்ல்லீங்கய்யா, ஆனா அவன் வீட்ல கிளம்பிட்டாங்கய்யா ’ன்னா, ‘எங்கே போயிட்டான் அவன். போயி தேடிட்டு வாங்க!’ன்னா வேட்டை நாய் தேடற மாதிரி நாங்க பாட்டுக்குப் போய் காடு காடா தேடுவோம். அப்புறம் வரப்புல இருக்கிறவனை நாலு பேர் சேர்ந்து தூக்கீட்டு வருவோம்.

பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்தோம்ன்னா, விட்டத்துல தாம்புக்கயிறு ஒண்ணு வளையம் மாதிரி தொங்கீட்டு இருக்கும். வளையத்துக்கு கீழே ஒரு ஸ்டூலைப் போட்டு பையனை மேலே ஏத்துவோம். பையன் மூணு அடி உயரம்தான் இருப்பான். மேலே ஏத்தி கைவிரல்களை உள்பக்கமா கோர்க்க விடமாட்டாங்க. வெளிப் பக்கத்திலிருந்து உள்பக்கமா கோர்க்கோணும். அது ரொம்ப வலியா இருக்கும்.அதுல கைகளை செருகி தொங்க விட்டுருவாங்க. ஸ்டூலை எடுத்தவுடனே பையன் தொங்கீட்டு இருப்பான். கீழே சுள்ளி முள்ளு. தீ கொளுத்தி விட்டுருப்பாங்க. பேனா கத்திய திறந்து வச்சிருப்பாங்க. குதிச்சான்னா ஒண்ணு தீ சுடும். இல்லைன்னா பேனா கத்தி குத்தும்.

இந்தக் கொடுமை எல்லாம் அனுபவிக்கிறதுக்கு பேருதான் ‘கோசாணம்’. இது எல்லாம் சகிச்சுக்க முடியாமத்தான் பசங்க ‘பள்ளிக்கூடமா?’, ‘சாணிக்கூடையா?’ன்னா சாணிக்கூடைய எடுத்துட்டு மாட்டுக்கு பின்னாடியே ஓடிருவானுக. இப்படித்தான் நாங்க சின்ன வயசுல படிச்சோம்...

- சுவைப்போம்...

எழுத்தாக்கம்: கா.சு.வேலாயுதன்

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x