

"நமக்கு உணவளித்த உணவகங்கள் அவர்கள்
நமக்காக செங்கல் சூளைகளில் சுடப்பட்டவர்கள் அவர்கள்
நகரத்தின் கழிவுகளைச் சுமந்துசென்ற கழுதைகள் அவர்கள்
ஊரடங்கு வந்தபோது வேண்டாதவர்களாகிவிட்டார்கள் அவர்கள்"
"முடிவற்ற சாலைகளில் அவர்கள் சோர்வுற்று நடந்தபோது
தொற்றுநோய் மழைபோல் அவர்கள் மீது பொழிந்தது
இடையில் சற்றே அயர்ந்து உறங்கியது கொஞ்சம்
அந்த இரவில் அவர்கள் இடர்களை ரயில்கள் துடைத்தழித்தன"
கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் அழியாத் துயரம், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி ஆயிரக்கணக்கான கி.மீ. நடையாய் நடந்ததுதான். இந்த நடையின்போது அவர்களுடைய செருப்பு பிய்ந்தது, பாதம் வெந்தது, கிடைத்த வண்டிகளில் கால்நடைகள் போல் அடைந்துக்கொண்டு, ரயில் பெட்டிகளின் இணைப்பின் மேல் உட்கார்ந்துகொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்தவர்கள் அநேகம், இடையிலேயே தாகத்தாலும் உணவின்றியும் மயங்கிச் சரிந்தார்கள், இறந்தே போனவர்கள் பலர், இளம் குழந்தைகளும் ஊனமுற்றோரும்கூட மொட்டை வெயிலில் சென்றுகொண்டிருந்த அந்தக் காட்சிகளை வரலாறு பேசும்.
இந்தப் பெருந்துயரின் பேரதிர்ச்சியாக 16 புலம்பெயர் தொழிலாளர்கள் அவுரங்காபாத் ரயில்பாதையில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தபோது, சரக்கு ரயில் மோதி மே 8ஆம் தேதி உயிரிழந்தார்கள். மகாராஷ்டிரத்திலிருந்து மத்தியப் பிரதேசத்தை நோக்கி நடந்தே சென்றுகொண்டிருந்தவர்கள் அவர்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து மே 10ஆம் தேதிவரை, ஊரடங்கின் காரணமாக மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 350. இந்தத் துயரம் நவீன இந்திய வரலாற்றில் ஆறாத வடுவாகவே இருக்கும். நாட்டின் மனசாட்சி அப்போது விழித்தெழவில்லை. விழித்தெழாத மனங்களை உலுக்குவதுதானே கலையின் வேலை.
மக்கள் கலை முயற்சி
"புலம்பெயர் தொழிலாளர்களின் துயரங்கள் அனைத்தையும் அரசு கண்டும் காணாததுபோல் இருந்தது; பெரும்பாலோர் ஊர் திரும்பிய பிறகே நீதிமன்றம் விழித்துக்கொண்டது; அனைத்தையும் நடுத்தர மக்கள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த நாட்டைக் கட்டியெழுப்பிய கரங்கள் மீது ரயில் ஏறியது வெறும் கொடூரமான நிகழ்வல்ல. அரசு நிர்வாகத்தின் அப்பட்டமான அலட்சியத்தின் வெளிப்பாடு. ஒரு சமூகமாக நம் உணர்வுகள் தடித்துப்போனதன் அடையாளமும்கூடத்தான்" என்கிறார் மலையாளக் கவிஞரும் திரைப் பாடலாசிரியருமான அன்வர் அலி.
புலம்பெயர் தொழிலாளர்களின் வலியையும் வேதனையையும் 'சாவு நடைப் பாட்டு' என்ற பாடலாக வடித்துள்ளார் அன்வர் அலி. அந்தப் பாடலின் சில வரிகளே மேலே இடம்பெற்றுள்ளன. மக்களின் முகத்தில் அறையும் தெலுங்கு புரட்சிகரப் பாடகர் கத்தாரின் வரிகளால் உத்வேகம் பெற்று. இந்தப் பாடலில் சில வரிகள் எழுதப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளாகக் கவிதை எழுதிவந்தாலும், மக்கள் கலை முயற்சி சார்ந்து அன்வர் அலி எழுதியுள்ள முதல் பாடல் இது.
மீண்டும் இணைந்த கைகள்
கடந்த வாரம் யூடியூப் வீடியோவாக வெளியான இந்தப் பாடலை இதுவரை 28,000 பேர் பார்த்திருக்கிறார்கள். இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் ஜான் வர்க்கி. அவர் ஒரு கிதார் இசைக்கலைஞர், மலையாள முற்போக்கு ராக் இசைக்குழுவான 'அவிய'லின் முன்னாள் உறுப்பினரும்கூட. பாடல் இசையமைப்பு டான் வின்சென்ட், வீடியோவை இயக்கியுள்ளவர் பிரேம் சங்கர்.
பிரபல மலையாளப் பாடமான 'கம்மாட்டிபட'த்தில் கவிஞர் அன்வர் அலி, பாடகர் ஜான் வர்க்கி, இசையமைப்பாளர் டான் வின்சென்ட் ஆகியோர் இணைந்து பணிபுரிந்துள்ளனர். வெகுஜனக் கலை வடிவத்தில் முன்பு இணைந்து பணியாற்றிய அவர்கள், நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்குக் கலை வடிவம் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது, தேசிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் வலி, கோபம், நம்பிக்கையிழப்பு ஆகியவற்றை இந்தப் பாடல் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.