Published : 20 Jun 2020 09:50 PM
Last Updated : 20 Jun 2020 09:50 PM

ஜூன் 20 உலக அகதிகள் தினம்: ‘எல்லா உயிர்களும் மதிப்புமிக்கவை’ 

சிரியா உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க ஐரோப்பாவில் தஞ்சமடைய ரப்பர் படகு ஒன்றில் சிறு கூட்டம் பயணிக்கிறது. படகு விபத்திற்குள்ளாகி எல்லோரும் கடலில் சிதறுகின்றனர். அந்த விபத்தில் சிக்கிய சிவப்பு நிறச் சட்டை அணிந்த மூன்று வயதுக் குழந்தை ஆலன் குர்தியை கடல் அலை 2015 செப்டம்பர் 2 ஆம் தேதி கரையில் ஒதுக்கியது. கவிழ்ந்த நிலையில் அலையின் மடியில், அதன் தாலாட்டில் மயங்கித் தூங்குவது போல் அமைதியாக இறந்து கிடந்தான் ஆலன். இப்போது அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலும் நாம் கலங்கிவிடுவோம்.

இந்த ஒரு புகைப்படமே அகதிகள் குறித்த துன்பத்தின் கொடூரமான சாட்சி எனலாம். கரோனாவால் எவ்வித அவகாசமும் இல்லாமல் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் எல்லாச் சாலைகளிலும் மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளைச் சுமந்துகொண்டு சென்றதைக் கண்ணீரோடு நாமும் பார்த்தோம். இதைவிட மிகக் கொடியதாகவே நாடு கடந்து, வாழ்வுக்காகப் பயணிக்கும் அகதிகளின் பயணம் உள்ளது. உள்நாட்டுப் போர்களும், கலவரங்களும், எல்லைக்காக நடக்கும் போர்களும், வறுமையும் இப்படியான அகதிகளை உருவாக்குகிறது.

உலக அகதிகள் தினம்

இன்று (20.06.2020) உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் ஏழு கோடியே 80 லட்சம் பேர் அகதிகளாக இருப்பதாகவும், ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கமுடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. "எல்லாச் செயலும் கணக்கிடப்படுகிறது. எல்லோருடைய உயிரும் மதிப்புமிக்கவை" என்பது ஐ.நா.வின் அகதிகள் தினத்தின் முழக்கமாகும்.

சொந்த நாட்டைவிட்டு, இருக்கும் சிறிய சேமிப்பையும் இருப்பிடத்தையும் விட்டு ஒருவர் வேறு நாட்டிற்குப் பயணிக்கிறார் என்றால் அவரின் கையறுநிலையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். உயிர் பிழைத்தால் போதும் என்பதைத் தாண்டி அந்தப் பயணத்தின் லட்சியம் வேறொன்றும் இல்லை. சொந்த நாட்டு மக்களையே இந்தக் கரோனா காலத்தில் பாதுகாக்க முடியாமல் பல நாடுகள் திணறுகின்றன. இதில் அகதிகளை எவ்வாறு இந்த அரசுகள் பாதுகாக்கப் போகின்றன என்ற அச்சத்தை சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் எழுப்பியுள்ளனர்.

கரோனா காலத்தில் அகதிகளின் நிலை

கரோனா பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளியும், தனித்திருத்தலும், சுகாதாரமான வாழ்நிலையும் அவசியம். ஆனால் பல நாடுகளின் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சுகாதாரமான வாழ்நிலையே இல்லை எனலாம். சிறிய கூடாரத்திற்குள் ஒரு குடும்பம் எனபதாக உள்ளனர். தனிமனித இடைவெளியும், தனித்திருத்தலும் சாத்தியமற்றதாக உள்ளது. அவர்களின் வேலையும் குறைந்தபட்ச வாழ்வாதாரமும் மோசமாக இந்தக் கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ளவேண்டுமென்று தொழிற்சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு (World Federation Of Trade Unions) வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் அகதிகள் நிலை

இந்தியாவிலும் பல்வேறு காலங்களில் அகதிகள் வந்துள்ளனர். இந்திய அரசும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது. வங்கதேசம், திபெத், இலங்கை, மியான்மர் எனப் பல்வேறு நாட்டு அகதிகள் இந்தியாவில் தற்போது உள்ளனர். ஆனால் அகதிகள் பாதுகாப்பிற்கென்று இந்தியாவில் தனியான சட்டங்கள் எதுவும் கிடையாது. பொதுவாக தெற்காசிய நாடுகள் எங்குமே அகதிகளுக்கான சட்டங்கள் இல்லை என்கின்றனர் இத்துறையில் செயலாற்றுபவர்கள். மனித உரிமைக்கான சர்வதேச மாநாடுகளின் முடிவுகளுக்கு இணங்க இந்தியாவும் அகதிகளுக்கான வசதிகளை வழங்கி வருகிறது.

அதேநேரம் ஒரு நாட்டிலிருந்து வரும் அகதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் எந்த நாடும் தங்கவைப்பதில்லை. நமது இந்தியாவும் அவ்வாறே செய்து வருகிறது. சீன எல்லையான திபெத்திலிருந்து வந்த அகதிகள் இந்தியாவின் பல பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து வரும் அகதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் பெரும்பாலான நாடுகள் தங்கவைப்பதில்லை. ஏனெனில் அகதிகள் ஒன்றாகத் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தின் மீதான உரிமையை அவர்கள் எதிர்காலத்தில் கேட்பதற்கான வாய்ப்பாக அது அமைந்துவிடக்கூடாது எனும் எச்சரிக்கை உணர்வுதான் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 59,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர் என்றும் இதில் சுமார் 29,000 பேர் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள தமிழர்களுக்காகப் போராடும் அதேநேரம் இங்குள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கூடுதலாகப் பேசவேண்டிய தேவை உள்ளது.
அகதிகளின் பயணம் என்பது தப்பிப்பிழைத்து உயிர்வாழ்வதற்கான பயணம்தான். ஆனால் உயிர்வாழ்வதென்பது தன்மானத்துடன் உயிர்த்திருப்பதாகும். இப்படியான ஒரு வாழ்வை எல்லா அகதிகளுக்கும் உத்தரவாதப்படுத்துவதே ஐ.நா.வின் முழக்கமான "எல்லா உயிர்களும் மதிப்புமிக்கவை" என்பதைச் சாத்தியமாக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x