ராம்தாரி சிங் தினகர் 10

ராம்தாரி சிங் தினகர் 10
Updated on
2 min read

இந்திக் கவிஞர், இலக்கியவாதி

நவீன இந்திக் கவிதை இலக்கியத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராகப் போற்றப்பட்ட ‘தேசியக் கவி’ ராம்தாரி சிங் தினகர் (Ramdhari Singh Dinkar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# பிஹார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில் உள்ள சிம்ரியா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் (1908) பிறந்தார். 2 வயதாகும்போது, தந்தை இறந்தார். குடும்பம் வறுமையில் வாடியதால் சரிவர படிக்க முடியவில்லை.

# பின்னாளில் இவரது கவிதைகளில் இந்த வறுமை அனுபவங்கள் வெளிப்பட்டன. வரலாறு, அரசியல், தத்துவம் ஆகியவை இவரது விருப்பப் பாடங்கள். இக்பால், தாகூர், கீட்ஸ், மில்டன் ஆகியோர் இவரது ஆதர்ச கவிஞர்கள்.

# சமஸ்கிருதம், மைதிலி, பெங்காலி, உருது, ஆங்கில மொழி இலக்கியங்களைப் பயின்றார். தாகூரின் வங்கமொழிக் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘சாத்ர சஹோதர்’ என்ற பத்திரிகையில் இவரது முதல் கவிதை 1925-ல் வெளியானது.

# விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஆர்வம் கொண்டார். சர்தார் படேல் தலைமையில் பார்டோலியில் 1928-ல் நடந்த விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்ட வெற்றி குறித்து ‘விஜய் சந்தேஷ்’ (வெற்றிச் செய்தி) என்ற தலைப்பில் 10 கவிதைகளை எழுதினார்.

# தேஷ், பிரதிபா ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. முதல் கவிதைத் தொகுப்பான ‘ரேணுகா’ 1935-ல் வெளிவந்த பிறகு, மேலும் பிரபலமானார். தனது படைப்புகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கினார். மிட்டி கீ ஓர், அர்த்தநாரீஸ்வர், ரஷ்மிரதி, ஊர்வசி, ப்ரேம்கீத் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரது பெரும்பாலான படைப்புகள் வீர ரசத்தை வெளிப்படுத்துபவை.

# ஆரம்பத்தில் புரட்சி இயக்கத்தை ஆதரித்த இவர் பின்னர் காந்தியக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டு, மிதவாதியாக மாறினார். ‘‘என் படைப்புகள், பேச்சுகள் இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டுவதால், நான் ஒரு மோசமான காந்தியவாதி’’ என்பார்.

# போர் அழிவை உண்டாக்கக்கூடியது என்று தனது படைப்பான ‘குருஷேத்திரா’வில் கூறிய இவர், சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள போர் அவசியம் என்றும் கூறுகிறார்.

# பிஹாரில் 9 ஆண்டுகள் துணைப் பதிவாளராகப் பணிபுரிந்தார். பிஹார் பல்கலைக்கழகத்தில் இந்திப் பேராசிரியராகவும், பகல்பூர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றினார். மாநிலங்களவை உறுப்பினராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசின் இந்தி மொழி ஆலோசகராகவும் பணியாற்றினார்.

# இவரது ‘சம்ஸ்க்ருதி கே சார் அத்யாய்’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும், ‘ஊர்வசி’ காவியத்துக்காக பாரதிய ஞானபீட விருதும் கிடைத்தன. பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

# கவிதை, உரைநடை, மொழிகள், இந்தி வளர்ச்சி என 4 துறைகளில் இவர் ஆற்றிய சேவைக்காக 4 ஞானபீட விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரபல கவிஞர் ஹரிவன்ஸ்ராய் பச்சன் புகழ்ந்துள்ளார். புரட்சிக் கவிஞர், தேசியக் கவிஞர் என்று போற்றப்பட்ட ராம்தாரி சிங் தினகர் 66-வது வயதில் (1974) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in