Last Updated : 19 Jun, 2020 04:06 PM

 

Published : 19 Jun 2020 04:06 PM
Last Updated : 19 Jun 2020 04:06 PM

மருந்துக்குரலோன்... ’எங்கிருந்தாலும் வாழ்க ஏ.எல்.ராகவன் சார்!’

காதலுக்கும் காதல் தோல்விக்குமான இலக்கணங்கள், இன்றைக்கு எப்படியோ. ஆனால் அறுபதுகளில், அதுதான் காதல் கீதம். காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்தப் பாடல்தான் வேதம். வார்த்தைகளை நசுக்காமல், மென்மையாய் உச்சரிப்புகளைக் குழைந்து கொடுத்த குரல்தான் தெய்வாம்ச அசரீரிக்குரல். அந்தக் குரல், காதல் தோல்விக்கு மருந்துபோட்டது. ‘சரி சரி... நல்லா இரு’ என்று பிரிந்தவர்களை வாழ்த்தியது. அந்தப் பாட்டு... ‘எங்கிருந்தாலும் வாழ்க!’. குரலுக்குச் சொந்தக்காரர்... ஏ.எல்.ராகவன். இப்போது குரல் மட்டுமே நமக்குச் சொந்தமாக இருக்கிறது. அவர் இன்று மறைந்துவிட்டார் (ஜூன்19ம் தேதி).


ஐம்பதுகளில் இருந்து தொடங்கிய மிக நீண்ட திரைப்பயணம் ஏ.எல்.ராகவனுடையது. அப்போது அவர் சிறுவன். ‘பய துறுதுறுன்னு இருக்கானே...’ என்று நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். சின்னச்சின்ன கதாபாத்திரங்களில், சிறுவனாக, அரை நிஜார் பையனாக வந்தார். நடிப்பைப் போலவே இன்னொரு விஷயத்திலும் அவருக்கு அப்படியொரு ஈடுபாடு. பின்னாளில், அதில் இரண்டறக் கலந்தார். அப்படி அவர் இரண்டறக் கலந்தது இசையில்!


தமிழ்த் திரையுலகில், முதன்முதலாக பாடல்களே இல்லாமல் வந்த படம் ‘அந்த நாள்’. அநேகமாக, கதையின் நாயகனை படம் தொடங்கும்போதே கொன்றுவிடுவது போல் காட்டப்பட்ட படமும் இதுவாகத்தான் இருக்கும். அதேபோல், நாயகனை கெட்டவனாக சித்திரிக்கவும் செய்த படம் என அப்போது பேசப்பட்டது. கதையின் நாயகன் சிவாஜிகணேசன். ஏவிஎம் தயாரித்து, வீணை பாலசந்தர் இயக்கிய, ஆங்கிலப் படத்துக்கு நிகரான இந்தப் படத்தில் சிறுவனாக நடித்த ஏ.எல்.ராகவன், எல்லோராலும் கவனிக்கப்பட்டார்.


படத்தில் சிவாஜி மனைவி பண்டரிபாய்க்குத் தெரியாமல், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பார். அந்தப் பெண்ணின் வீட்டுப் பணியாளாக வரும் சிறுவன் ஏ.எல்.ராகவன். சி.ஐ.டி. ஜாவர் சீதாராமனிடம் இவர் விளக்கும் காட்சிகள், க்ரைம் த்ரில்லர் படத்தினிடையே அமைந்த நகைச்சுவைக் காட்சியாக அமைந்திருக்கும். இவர் விவரிக்கும் பாணி, தியேட்டரில் கைத்தட்டலைப் பெற்றுத்தந்தது.


அடுத்தடுத்து படங்கள். வாலிபனாக வளர்ந்தார். நடித்தார். இந்த சமயத்தில் அவரின் குரலின் தனித்தன்மை கவர்ந்தது. பாடகரானார். அதன் பின்னர், பாடகர் ஏ.எல்.ராகவன் எல்லோரையும் கவர்ந்தார். ‘ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி’ என்ற பாடல், நக்கலும் நையாண்டியாகவும் அமைந்த பாடல். அப்படியொரு ஜாலிமூடு ஏற்படுத்தும் பாடல், அன்றைக்குப் பாடாதவர்களே இல்லை.


‘கற்றார் நிறைந்த சங்கமிது காரியம் கைகூடும் சங்கமிது’ என்றொரு பாடல். ‘அடுத்தவீட்டுப்பெண்’ படத்தில் டணால் தங்கவேலுவுக்குப் பாடியிருப்பார். துள்ளல் இசையில் இழைந்து இழை இழையாகக் கலந்து வரும் பாடலில், ‘அடுத்தவீட்டுப்பெண்’ நாயகியை மட்டுமின்றி, கேட்பவர்களையெல்லாம் மயக்கியது.


அது டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜனின் காலம். அந்த சமயத்தில்... ராகவனின் குரல் தனி ரகமாக ஈர்த்தது. செவிகளை நிறைத்து இனித்தது. ’பார்த்தால் பசி தீரும்’ படத்தின் எல்லாப் பாடல்களுமே ஹிட்டாகின. படத்தின் அந்தப் பாடல்தான், கதைக்கும் முக்கியமான பாடலாக அமைந்தது. தமிழ்த் திரையிலும் வித்தியாசமான பாடலாக அமைந்தது. கவியரசு கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர்கள் இசையமைத்து பி.சுசீலாவுடன் இணைந்து ஏ.எல்.ராகவன் பாடிய பாடலை, இன்றைக்கும் இரவுக்கான பாடலாகக் கேட்டுக் கிறங்குபவர்கள் இருக்கிறார்கள். அந்தப் பாடல்... ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ... இன்று பேசும் கண்ணல்லோ’. அந்தப் பாடலில்... ‘லோ’ என்பதை ஒவ்வொருவிதமாக உச்சரித்திருப்பார்.


அப்போதெல்லாம் நகைச்சுவை நடிகர்களுக்கு படத்தில் ஒருபாடலாவது இருக்கும். குறிப்பாக, நாகேஷுக்கு பாடல் என்றால், ஏ.எல்.ராகவனைத்தான் கூப்பிடுவார்கள். ’சீட்டுக்கட்டு ராஜா’ மாதிரி பல பாடல்கள் பாடினார். எல்லாவற்றிலும் உச்சரிப்பு, வார்த்தைக்கு அழுத்தம், கேலி என ஸ்டைல் காட்டினார். நடிகராக இருந்து பின்னாளில் நகைச்சுவைப் பகுதி வசனம் எழுதிய ஏ.வீரப்பனுக்கு ‘பாப்பா பார் பாப்பா பார் கதை கேளு’ என்றொரு பாடலை, குழந்தைகளுக்கே உண்டான துள்ளலுடன் பாடியிருப்பார்.
’காலம் செய்த கோமாளித்தனத்தால் உலகம் பிறந்தது’ என்ற பாடலைக் கேட்டால் தெரியும்... அத்தனைக் கோமாளித்தனங்களையும் தன் உச்சரிப்பால் நமக்குக் கடத்தித் தந்திருப்பார் ஏ.எல்.ராகவன்.


அவரைப் பார்த்தால், சினிமாக்காரர் மாதிரியே தெரியாது. ஒட்ட முடிவெட்டிக்கொண்டு, கம்பீரமாக வலம் வரும் அவரை, நிறையபேர், போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றே நினைத்துக் கொள்வார்களாம். அதேபோல், வீட்டில் இருந்து கிளம்பி ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு வருவார். கோட்டும்சூட்டும் போட்டுக் கொண்டு, டை கட்டிக்கொண்டு, டிப்டாப்பாக வருவார். மிடுக்காக உடுத்துவதில் ஆர்வம். அதிலும் நறுவிசாக, பாந்தமாக உடை இருக்கவேண்டும் என்பாராம்.


இன்றைக்கு பாட்டுக்கச்சேரிக் குழுக்கள் வேறுவிதமாகிவிட்டன. எண்பதுகளில் சக்கைப்போடு போட்டன. அப்படி இருப்பதற்கு எழுபதுகளில், ஏ.எல்.ராகவன் இசைக்குழுவைத் தொடங்கி, அதில் புதுப்புது உத்திகளைக் கையாண்டார். எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பல கச்சேரிகள் செய்தார்.


வில்லத்தனம், குணச்சித்திரம், நகைச்சுவை என எல்லா ஏரியாக்களிலும் ரவுண்டுகட்டி அடிப்பார் எம்.ஆர்.ராதா. ‘இருவர் உள்ளம்’ படத்தில் சிவாஜிக்கு அண்ணனாக, நல்லவராக, நகைச்சுவை குணமும் கொண்டவராக நடித்திருப்பார் எம்.ஆர்.ராதா. அவருக்கு பாடல் கூட உண்டு. அந்தப் பாடல் இன்றுவரைக்கும் பிரபலம். ‘புத்திசிகாமணி பெத்தபுள்ள’ என்ற பாடல்தான் அது. ‘அட... ஆராரோ அடி ஆராரோ... அட அசட்டுப்பயபுள்ள ஆராரோ’ என்று பாடும்போது, வரிகளில் அசட்டுத்தனத்தைக் கொண்ட கேலிபாவனையைக் கொடுத்திருப்பார். போதாக்குறைக்கு, எம்.ஆர்.ராதாவே சொந்தக் குரலில் பாடுவது போல் இருக்கும்.


பாடகர் டி.எம்.எஸ்., பாடகர் ஏ.எல்.ராகவன் இருவரும் சேர்ந்து, படத்தைத் தயாரித்தார்கள் என்பது, அட போட வைக்கிற ஆச்சரிய உண்மை. எல்லோரிடமும் இனிமையாக, மரியாதையாகப் பேசுவது ஏ.எல்.ராகவனின் குணம். முக்கியமாக, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார் என்பது அவரின் மனநிலையை உணர்த்தும் கண்ணாடி.
எண்பதுகளில், சரத்பாபு, ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி முதலானோரின் நடிப்பில், ‘கண்ணில் தெரியும் கதைகள்’ என்ற படம் வெளியானது, நினைவிருக்கிறதா? ‘நானொரு பொன்னோவியம் கண்டேன்’, ‘நான் ஒன்ன நினைச்சேன் நீ என்னை நினைச்சே’ என்ற பாடல்கள் அந்தப் படத்தில் உண்டு. ‘அந்தநாள்’ படம் பாடல்களே இல்லாமல் வந்த படம். ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்துக்கு, ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாடகர் ஏ.எல்.ராகவன். குரலிலும் செயலிலும் வாழ்விலும் புதுமைகள் செய்துகொண்டே இருக்கவேண்டும் எனும் தாகம் அவருக்கு எப்போதுமே உண்டு என்று திரையுலகினர் சொல்கிறார்கள்.


ஏ.ஏல்.ராகவனின் மனைவி எம்.என்.ராஜம். காதல் மணம் புரிந்துகொண்டனர். பழம்பெரும் நடிகை. இவரும் சிரித்தமுகத்துக்குச் சொந்தக்காரர்.


இயக்குநர் ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில், காதலியை அவள் கணவருடன் பார்ப்பார் காதலன். அந்தக் காதலன், கதையின் படி மருத்துவர். அவருக்கான பாடலும், காதலின் வலிக்கு மருந்து போட்டது.


அந்த மருந்துக்குரலில் இருந்து...


எங்கிருந்தாலும் வாழ்க - உன்
இதயம் அமைதியில் வாழ்க!
இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினைத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க...

எனும் வரிகள்... காற்றுக்கும் வலிக்காமல்... அலை அலையாக நம் செவிகளில் வந்திறங்கும்.


அந்தப் பாடலில்... வாழ்க... வாழ்க... வாழ்க... என்று குழைந்து வாழ்த்துவார்.


எத்தனையோ பேரின் காதல் இழப்புக்கு மருந்தாக அமைந்த ஏ.எல்.ராகவனின் குரல்... அவரின் மறைவு கொடுத்திருக்கும் வலிக்கு மருந்து போடும் குரலாகவும் அமைந்துவிட்டது. காயத்தை ஆற்றும் அந்த மருந்துக்குரலோன் நம்மிடம் இல்லை. அவரின் பாடல்களே, அவரின் குரலே நமக்கு மாமருந்து!


எங்கிருந்தாலும் வாழ்க. உங்கள் இதயம் அமைதியில் வாழ்க ராகவன் சார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x